Sunday, July 30, 2006

எனது குருதிக் கொடை

13.7.2006 அன்று மதியம் என் வாழ்வில் முதல் முறையாக குருதிக் கொடை அளித்தேன். ஜீவன் குருதி வங்கியினரின் நடமாடும் குருதி வங்கி, சென்னை டைடல் பூங்காவிற்கு வந்தது. இது குறித்த தகவல், எங்கள் (சிஃபி ஊழியர்கள்) அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் வந்தது. மதிய உணவை முடித்துக்கொண்டு, அந்தச் சிற்றுந்து நிறுத்தியிருந்த இடத்திற்கு நானும் நண்பர் ஜனார்த்தனும் சென்றோம்.

Photobucket - Video and Image Hosting

இதற்கு முன் குருதிக் கொடை அளித்ததுண்டா? எப்போது? ஏதேனும் நோய்கள், ஒவ்வாமைகள் உண்டா? அண்மையில் அறுவை சிகிச்சை ஏதும் செய்துகொண்டீர்களா? மதிய உணவு சாப்பிட்டாயிற்றா? இந்தக் குருதிக் கொடைக்காகச் சன்மானம் எதுவும் கிடையாது என்பதை அறிவீர்களா? உங்கள் குருதியில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிந்தால் உங்களுக்குத் தெரிவிக்கலாமா?..... எனப் பல விவரங்களைக் கேட்கும் விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்த பிறகு, முன்பரிசோதனை செய்துவிட்டு (பிஎச் மதிப்பு கண்டறிதல்) எனக்கு முதலில் ரத்தம் எடுத்தார்கள்.

என் குருதி வகை: ஓ பாசிட்டிவ். 350 மில்லி குருதி எடுத்ததாகச் சொன்னார்கள். அன்றைய தினத்தில் முதன்முதலில் குருதி எடுத்தது, என்னிடமிருந்துதான். குருதி எடுத்த பிறகு, குடிக்க ஒரு பானம் அளித்தார்கள்.

Photobucket - Video and Image Hosting

என் செல்பேசியைக் கொடுத்து, குருதி எடுப்பதைப் படம் பிடிக்கச் சொன்னேன். அருகில் இருந்த மருத்துவர், "படம் எடுப்பது மிகவும் நல்லது. அது, பார்ப்பவர்களை ரத்தம் கொடுக்கத் தூண்டும்" என்றார். எங்கள் அருகில் தானும் வந்து நின்றார்.

Photobucket - Video and Image Hosting

எனக்குப் பிறகு நண்பர் ஜனார்த்தனுக்கும் குருதி எடுத்தார்கள். அவர் ஏற்கெனவே பல முறைகள் குருதிக் கொடை அளித்திருக்கிறார்.

நாங்கள் கிளம்பும்போது, குருதிக் கொடை அளித்ததற்காக ஒரு சான்றிதழை அளித்தார்கள். அதன் பின்புறம் இரத்த தானம் செய்த பிறகு.... செய்யவேண்டியவை பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருந்தார்கள். அதை இங்கு தருவது பயனுள்ளதாய் இருக்கும்.

இரத்த தானம் செய்த பிறகு....

* அடுத்த உணவு சத்துள்ளதாக இருக்கட்டும்.

* சாதாரண நாட்களை விட அதிக நீர் / நீர் ஆகாரம் உட்கொள்ளவும்.

* பிளாஸ்திரியை 4 முதல் 6 மணி நேரம் வரை வைத்திருக்கவும்.

* 24 மணி நேரத்திற்கு அதிக பளு தூக்குவதையோ, உடற்பயிற்சி செய்வதையோ தவிர்க்கவும்.
மயக்கம் வருவது போல் அல்லது தலை சுற்றுவதுபோல் இருந்தால், உடனடியாகத் தரையில் படுக்கவும். அல்லது உட்கார்ந்துகொண்டு தலையைக் கால் முட்டிகளுக்கு நடுவில் வைத்துக்கொண்டு ஓய்வு எடுக்கவும்.

* தங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் இரத்த வங்கி மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
ஒரு மணி நேரத்திற்குப் புகை பிடிப்பதைத் தவிர்க்கவும்.

* 24 மணி நேரத்திற்கு மது அருந்துவதைத் தவிர்க்கவும்.

* 90 நாட்களுக்குப் பிறகு நீங்கள் மறுமுறை இரத்த தானம் செய்யலாம். தாங்கள் இரத்த வங்கியில் தானம் செய்தாலும் இரத்த முகாமில் தானம் செய்தாலும் இரத்தம் பெறும் முறை ஒரே மாதிரிதான் இருக்கும். தயவுசெய்து தங்களைத் தொடர்புகொள்ளும் வரை காத்திருக்காமல் தாங்களே முன்வந்து தானம் செய்யுங்கள்.


ஜீவன் குருதி வங்கி & ஆய்வு மையம்,
(ஐஎஸ்ஓ 9001 : 2000 சான்று பெற்ற அமைப்பு)
7, ரட்லண்டு கேட், 5ஆம் தெரு, நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 006.
தொலைபேசி: 52010022 / 28330300
மின்னஞ்சல்: safeblood@jeevan.org
வலை: www.jeevan.org

நாலு கால் விருந்தினர்

கடந்த வாரத்தில் ஒரு நாள் காலையில் இந்த விருந்தினர், என் அக்கா வீட்டிற்கு வந்தார். வழக்கமாகத் தெருவில் நின்று எட்டிப் பார்ப்பார். அக்கா உணவிடுவார். அன்றும் இந்த விருந்தினருக்கு அக்கா உணவிட்டுள்ளார். சற்று நேரத்திற்கெல்லாம் மேலும் வேண்டும் என்று கேட்டபடி இந்த விருந்தினர் வந்தார்.

வழக்கமாகத் தெருவில் நிற்பவர், வெளிக்கதவைத் திறந்துகொண்டு ஓரடி மேலேறினார்.

Photobucket - Video and Image Hosting

அடுத்து இரண்டு படிகள் ஏறினார்.

Photobucket - Video and Image Hosting

மூன்றாவது படியும் ஏறினார்.

Photobucket - Video and Image Hosting

இன்னும் கொஞ்சம் விட்டால், வீட்டுக்குள்ளேயே வந்துவிடுவார் என்ற நிலை. அதன் பிறகு அக்கா உணவிட்டார். தனக்கு வேண்டியதைப் பார்வையாலேயே கேட்டு வாங்கிக்கொள்ள இந்த விருந்தினருக்குத் தெரிந்திருக்கிறது.

மூன்றாவது படத்தில் இருப்பவர் என் அம்மா செளந்திரவல்லி. படங்களை எடுத்தவன் நான்.

Saturday, July 29, 2006

தோளில் இரு துளிர்கள்

என் அக்கா வீட்டில் நிகழ்ந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த இளம் விருந்தினர்கள் இருவர்.

Photobucket - Video and Image Hosting

கஜா என்கிற ஹர்ஷினி

Photobucket - Video and Image Hosting

ஸ்ருதி என்கிற சுருடா

செல்லில் சிக்கிய வானவில்

Photobucket - Video and Image Hosting

மாலை மயங்கும் வேளையிலே
வரலாம் என மழை நினைக்கையிலே
எழில் வண்ணப் பரவளையம் - என்
எதிரே வந்தது கண்டீரோ!

மதில் சுவர் மீது ஏறி நிற்கும் ஆடு

Photobucket - Video and Image Hosting

என் வீட்டு எதிரில் இந்த ஆடு, மதில் சுவர் மீது ஏறிவிட்டு இறங்க (குதிக்க)த் துணிவில்லாமல் இப்படியும் அப்படியுமாக நடை பயின்றுகொண்டிருந்தது. உடனே 'டக்' என்று பிடித்துவிட்டேன். ஆட்டை இல்லை; படத்தைத்தான்.

Tuesday, July 25, 2006

காக்கையின் துணிச்சலைப் பாருங்கள்

அறியாத மனிதரைக் கண்டால், காக்கை என்றில்லை எந்தப் பறவையுமே சற்றுத் தள்ளியே இருக்கும். ஏதும் பறவை நம் அருகில் வரவேண்டும் என்றால் நாம் சிலைபோல் அமர்ந்திருக்க வேண்டும்; கொஞ்சம் கூட அசையக் கூடாது. அசைந்தாலோ போச்சு. உடனே பறந்து போய்விடும். தோளில் கிளி வந்து உட்காருவது எல்லாம் மதுரை மீனாட்சிக்குத்தான் சாத்தியம். இந்தச் சூழ்நிலையில், இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒரு துணிச்சல் மிக்க காகத்தைக் கண்டேன்.

இரு மாதங்கள் முன்பு, சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையத்தில் நீண்டதொரு சிமென்ட் இருக்கையில் அமர்ந்தபடி அடுத்த வண்டிக்காகக் காத்திருந்தேன். எதிரே தரையில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. நான் ஒரு வார இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். முக்கிய செய்தி: நான் அசைந்தபடி இருந்தேன். ஆயினும் அந்தக் காகம் மெல்ல மெல்ல முன்னேறி வந்தது; அடுத்து இருக்கை மீது அமர்ந்தது; அதன் பிறகு முதுகு சாயும் பலகையில் ஏறி உச்சியில் அமர்ந்தது. ஆஹா, இதென்ன அதிசயம்! சென்னைக் காக்கைக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்கிறதே என்று வியந்து உடனே என் செல்பேசியை எடுத்து அதிலிருந்த படக் கருவியில் அதைப் படம் பிடித்தேன்.

Photobucket - Video and Image Hosting

பாருங்கள், இப்படி ஏதாவது ஒரு பொருளை எடுத்தால் தன்னை அடிப்பதற்காகத்தான் எடுக்கிறார்கள் என்று எண்ணி, பறவை பறந்துவிடும். இந்தக் காக்கையோ, எனக்குப் புகைப்படம் எடுக்க வாய்ப்பளித்து இயல்பாக அமர்ந்திருந்தது. நான் படம் எடுப்பதை அடுத்த சிமென்ட் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியர் எட்டிப் பார்க்கிறார்கள். கவனத்தில் கொள்ளவேண்டியது: அவர்கள் கூட திரும்பிப் பார்க்கிறார்கள்; ஆனால், காக்கை என்னை லட்சியமே செய்யவில்லை!

Wednesday, July 19, 2006

இது என்னவென்று தெரிகிறதா?

Photobucket - Video and Image Hosting

அதிகம் குழம்பவேண்டாம். டைடல் பூங்காவில் உள்ள பல்லடுக்கு மாடியின் படிக்கட்டு வழித் தோற்றம். பணிமுடிந்து ஒரு நாள் முன்னிரவு நேரத்தில் நண்பருடன் படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருந்தேன். முதல் மாடியில் நின்று மேலே நிமிர்ந்து பார்த்தபோது இந்தக் காட்சி தெரிந்தது. நண்பரும் பார்த்தார். 'இதை ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும்!' என்றார். 'அதற்கென்ன எடுத்தால் போச்சு' என்று செல்பேசிப் படக்கருவியில் பதிந்தேன்.

தளம்தோறும் குழல் விளக்குகள் எரிவதால் இந்தப் பளீர் வெளிச்சம்!

Tuesday, July 18, 2006

இரண்டு கோலங்கள

கோலங்கள் என்றதும் தொலைக்காட்சித் தொடர் என்று நினைத்துவிட வேண்டாம். உண்மையிலேயே கோலங்கள்தாம். என் அக்கா வேதவல்லி வரைந்தவை இவை. படம் எடுத்தவன், அடியேன்தான்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

ஓடும் வாகனத்தில் ஓட்டுநர் விவரம்

சில மாதங்களுக்கு முன்பு, ஒரே ஒரு நாள் பெங்களூருக்குச் சென்று திரும்பினேன். அந்த மாநகரில் ஓடும் தானிகள் (ஆட்டோ க்கள்) அனைத்திலும் Auto driving licence display system என்ற நடைமுறையைப் பின்பற்றி வருவதைக் கண்டேன்.

Photobucket - Video and Image Hosting

ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புறம், அந்த ஓட்டுநரின் பெயர், முகவரி, ஓட்டுநர் உரிம எண், உரிம காலம், அவருடைய குருதி வகை எண் ஆகியவற்றை எழுதி வைத்திருந்தார்கள். அத்துடன் அந்த வட்டார காவல்துறை அதிகாரியின் கையொப்பமும் முத்திரையும் இடம் பெற்றிருந்தது.

இதன் மூலம் ஓட்டுநரைப் பற்றிய விவரங்களைப் பயணிகள் தானாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. ஓட்டுநரின் மீது நம்பிக்கை பிறக்கிறது. உரிமம் பெற்றவர்தான் வண்டியை ஓட்டுகிறாரா? தன் வண்டியைத்தான் அவர் ஓட்டுகிறாரா? எனப் பல விவரங்களை அறிய முடியும். பல வகைகளில் பயனுள்ள இந்த முறையை இதர நகரங்களும் பின்பற்றலாமே!