Friday, July 23, 2010

கோவைச் சந்திப்புகள் - 3

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். அப்போது, எடுத்த படங்கள் சில இங்கே:

Photobucket

ஆல்பர்ட் பெர்னாண்டோ உடன் நான்

தன்னலமற்ற தமி்ழ்த் தொண்டரான ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் வசிக்கிறார். மருத்துவத் துறை சார்ந்த பணியில் அவர் ஈடுபட்டுள்ள போதிலும் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இவர் ஆற்றும் பணிகள் பற்பல. அமெரிக்காவில் தமிழ் வளர்ப்போர் என்ற தொடரினை முன்பு நான் ஆசிரியராக இருந்த தமிழ் சிஃபியில் எழுதினார். ஈழப் போர் நடந்த தருணத்தில் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் ஒரு தொடரினையும் எழுதினார். மேலும் பற்பல கட்டுரைகளையும் வரைந்தார்.

எழுத்துடன் நின்றுவிடாமல், சமூக சேவைகளில் ஆல்பர்ட் முன் நிற்கிறார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கி, வலைத்தளம் வாயிலாகக் குறை தீர்க்கும் தொடுவானம் திட்டத்திற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தார். மேலும், வலைப்பதிவு நுட்பங்களைப் பயன்படுத்தப் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் நாமக்கல்லில் நிகழ்த்த உதவினார். அந்த நிகழ்ச்சிக்கு வெவ்வேறு நேர மண்டலங்களைச் சேர்ந்த 9 நாடுகளிலிருந்து தமிழ்ச் சான்றோர்களை ஒரே நேரத்தில் ஒன்று திரட்டி, வாழ்த்துரை வழங்கிடச் செய்தார்.

மேலும் கோவை மாநாட்டுக்கு வந்திருந்தபோதும், அடையாள அட்டை இல்லாதோருக்கும் அழைப்புக் கடிதத்தின் மின்னஞ்சல் நகல் பெற வேண்டியவர்களுக்கும் பெரிதும் உதவினார். இதற்கென அதிகாரிகளுடன் அவர் போராட வேண்டியிருந்தது.

அத்துடன் தேவநேயப் பாவாணரின் மூன்றாம் மகன் அடியார்க்கு நல்லான், பெங்களூருவில் முதிய வயதில் ஆதரவின்றி, நோய்வாய்ப்பட்டு இருப்பதை ஆல்பர்ட் அறிந்தார். அவரைத் தக்க காப்பகத்தில் சேர்த்து, அவரின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தம் நேரத்தைப் பெருமளவில் செலவிட்டார்.

Photobucket

தமிழ் இணைய மாநாட்டின் வலைப்பதிவர் அமர்வில் பங்கேற்றதற்கான சான்றிதழை ஆல்பர்ட், சென்னையில் என்னிடம் வழங்கும் காட்சி.

தமிழ் இணைய மாநாட்டில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்வதற்காக ஆல்பர்ட் பெரிதும் உழைத்தார். பலரையும் தொடர்புகொண்டு, அவர்களிடமிருந்து தலைப்புகளைப் பெற்று, அவர்களுக்கு அரங்கு - நாள் -  நேரம் ஒதுக்கி, மின்னஞ்சலிலும் தொலைபேசியிலுமாக மாநாட்டிற்கு அழைத்து... ஆல்பர்ட் அயராது பாடுபட்டார். ஆயினும் கடைசி நேரத்தில் அந்த அமர்வு, பல்வேறு மாற்றங்களுடன் அரங்கேறியது. பேச அழைத்தவர்களுள் பலரையும் மேடையேற்றி, ஏமாற்றத்தைத் தவிர்த்தார்.

ஆயினும் சிலருக்குச் சில ஏமாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த அமர்விற்குத் திட்டமிட்டதில் ஆல்பர்ட்டிற்கு இருந்த பொறுப்பும் பணிச் சுமைகளும் மிகப் பெரியவை. தாம் திட்டமிட்ட அளவில் நிகழ்வு நடைபெறவில்லையே என்ற ஏமாற்றம், ஆல்பர்ட்டிற்கும் கூட இருக்கலாம். ஆயினும் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது என்று எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Photobucket

திலகபாமா, மதுமிதா, ஆல்பர்ட் பெர்னாண்டோ, பெஞ்சமின் லெபோ, சிங்கை கிருஷ்ணன், சிங்கை அ.பழநியப்பன், நாக.இளங்கோவன் ஆகியோருடன் நான்.

இவர்களுள் பெஞ்சமின் லெபோ, சிங்கை கிருஷ்ணன், சிங்கை அ.பழநியப்பன், நாக.இளங்கோவன் ஆகியோரை இந்த மாநாட்டில்தான் முதன் முதலில் சந்தித்தேன். திலகபாமா, மதுமிதா ஆகியோரின் படைப்புகள் குறித்த என் முந்தைய இடுகைகள்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சின் தலைநகர் பாசிஸில் கம்பன் கழகத் தலைவராக இருந்து நடத்தி வருகிறார். கம்பன் முற்றோதல் என்ற நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். வலைப்பதிவர் அமர்வில் பேசிய இவர், கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசு நாதரின் வாக்கினை அப்படியே இணையத்திற்குப் பொருத்திக் காட்டிப் பேசியது, சுவையாய் அமைந்தது.  அவரின் மனைவி லூசியா லெபோவும் சிறப்பாக உரையாற்றினார்.

சென்னை திரும்பிய பிறகு, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் நிகழ்ந்த செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற நிகழ்வில் மீண்டும் லெபோ தம்பதியினரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.

Photobucket

 சிங்கை கிருஷ்ணன், நாக.இளங்கோவன் ஆகியோருடன் நான்.

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட சிங்கை கிருஷ்ணனைக் கண்டு உரையாடினேன். தமிழ்க் கலைச் சொற்கள் உருவாக்கத்தில் ஈடுபாடு கொண்ட  நாக.இளங்கோவனுடன் எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பாகச் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சென்னையில் மீண்டும் ஒரு முறை இவரைச் சந்தித்தேன். நான் வசிக்கும் அம்பத்தூரி்லேயே இவரது வீடும் உள்ளது. ஆயினும்  பணி நிமித்தம் அரபு வளைகுடாவில் (ரியாத் - சவுதி அரேபியா) வசிக்கிறார்.

Photobucket

இராச.சுகுமாரன், மணி மு. மணிவண்ணன் (நடுவில் இருப்பவர்) ஆகியோருடன் நான்.


மின்னஞ்சல் வழியே தொடர்பில் இருந்த மணி மு. மணிவண்ணனைக் கோவையில் முதன் முதலில் சந்தித்தேன். பேருந்தில் செல்லுகையில் இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்தார். அது தொடர்பாகவே தம் ஆய்வுக் கட்டுரையையும் வாசித்தார். மணிவண்ணனின் மனைவி ஆஷா அவர்களையும் சந்தித்தேன். இவர்கள், அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாட்டினைச் சிறப்புடன் நடத்திக் காட்டியவர்கள். அமெரிக்காவில் வசித்து வந்த இவர்கள், இப்போது சென்னையில் வசிக்கிறார்கள்.

புதுச்சேரியைச் சேர்ந்த இராச.சுகுமாரன்,  புதுவை வலைப்பதிவர் சிறகத்தில் முக்கிய பங்கு வகிப்பவர். எழுத்துச் சீர்திருத்தத்தை மறுத்து, இவரும் இவர் சார்ந்த அமைப்பும் கூட்டிய மாநாடு, தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தது. கோவையில் இவரைச் சந்தித்த போது, என் முனைவர் பட்ட ஆய்வினை அறி்ந்தார். என் ஆய்வினுள் புதுச்சேரி அரசின் தமிழ் இணையத்தளங்கள் தொடர்பாக நான் திரட்டிய தரவுகளை அறிய விழைந்தார்.


Photobucket
சுபாஷினி டிரெம்மல் உடன் நான்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களுள் ஒருவரான சுபா, செம்மொழி மாநாட்டிலும் தமிழ் இணைய மாநாட்டு வளாகத்திலும் மிகப் பரபரப்புடன் சுற்றி வந்தார். ஜெர்மனியில் வாழும் மலேசியத் தமிழச்சியான இவருடன் விரிவான இ-நேர்காணலை நிகழ்த்தியுள்ளேன். (சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3).

Photobucket
மு.சிவலிங்கம் உடன் நான்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நீண்ட காலம் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மு.சிவலிங்கம். தமிழில் கணினியியலை எளிய முறையில் அறிமுகப்படுத்தில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு. தினமணியில் இவர் எழுதிய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்துள்ளேன். கைப்பேசிகளில் தமிழ் என்ற அமர்வில் முத்து நெடுமாறன் தலைமையில் சிவலிங்கத்துடன் இணைந்து உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். தம் கைப்பேசியில் பேசுபவரைப் பார்த்துக்கொண்டே பேசும் வசதி உள்ளதைக் காட்டினார். பெங்களூருவில் உள்ள தம் பேரன்களைப் பார்த்து உரையாடுவதற்கு இது பயன்படுகிறது என்ற போது, அவரின் அன்பினை உணர்ந்தேன்.

Photobucket

விஜய், திவாகர் உடன் நான்.

http://www.poetryinstone.in என்ற இணையத்தளத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நடத்தி வருபவர் விஜய் என்ற விஜயகுமார். சிங்கப்பூரில் வசித்து வரும் அவர், தென்னகத்தின் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதித்து, காத்து வருகிறார். அவற்றைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமான புரிதலை உருவாக்கி, ரசனையை வளர்ப்பதில் விஜயின் தனித்துவம் மிளிர்கிறது. இவர், மதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் அவர்களின் உறவினரும் கூட. இவரைக் கோவை மாநாட்டில் முதன் முதலில் சந்தித்து மகிழ்ந்தேன்.

விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் திவாகர், தமிழின் சிறந்த வரலாற்றுப் புதின ஆசிரியர்களுள் ஒருவர். இவரின் வம்சதாரா, எஸ்.எம்.எஸ். எம்டன்  ஆகிய இரு வரலாற்றுப் புதினங்களைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவை தரத்திலும் சுவையிலும் சிறந்து விளங்குகின்றன. http://vamsadhara.blogspot.com, http://aduththaveedu.blogspot.com ஆகிய இரு வலைப்பதிவுகளை நடத்தி வருகிறார். தமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும் என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் கட்டுரை வாசித்தார்.


Photobucket

செல்வ முரளி, ஆமாச்சு ஆகியோருடன் நான்.

விசுவல் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செல்வ முரளி, இணையத்தள உருவாக்கம், வலையேற்றம் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறார். அண்மையில் மேக் கணிமை வலையேற்றச் சேவையை இந்தியாவில் முதன் முறையாகத் தொடங்கினார். வி.எம். அறக்கட்டளை என்ற சேவை அமைப்பினையும் தொடங்கியுள்ளார். எனது வல்லமை மின்னிதழை வடிவமைத்து, வலையேற்றியவர் இவரே. வாழ்வில் எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்தாலும் பெரிய கனவுகளை உயிர்ப்புடன் கொண்டுள்ளார். தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, துணிவுடன் நடையிட்டு வருகிறார்.

Photobucket

ஆமாச்சு, உபுண்டு இயங்கு தளத்தினைத் தமிழில் நிலைநிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவர். கட்டற்ற மென்பொருட்களை நோக்கிப் பலரின் கவனத்தைத் திருப்புவதில் வெற்றி கண்டவர். கட்டற்ற மென்பொருட்கள் குறித்த தொடர் ஒன்றினை, தமிழ் சிஃபியில் எழுதியவர். இதற்கெனத் தனி இயக்கத்தினையே வளர்த்து வருகிறார். கட்டற்ற மென்பொருட்களின் பரவலுக்காக எல்.& டி. இன்ஃபோடெக் நிறுவனப் பணியினை உதறியவர். அண்மையில் தமக்கெனத் தனி நிறுவனத்தைத் தொடங்கி, திருமணம் புரிந்து, விரைவில் தந்தையாகப் பதவி உயர்வு பெறவுள்ளார். அவருக்கும் குட்டி ஆமாச்சுவுக்கும் முன்கூட்டியே வாழ்த்துகள்.

Photobucket
இராம.கி., ஆமாச்சு ஆகியோருடன் நான்.

செந்தமிழில் உரையாடி, நாளும் பொழுதும் புதுப் புதுக் கலைச் சொற்களை உருவாக்கி, தமிழுக்கு அணிகலன் ஆக்குபவர் இராம.கி. நல்ல தமிழில் எழுதுவதற்கு இவரின் http://www.valavu.blogspot.com என்ற வலைப்பதிவு, பலருக்கு உதவியாக உள்ளது. தமிழில் ஏற்படும் ஐயங்களைத் தீர்க்கப் பலரும் இவரையே நாடுகின்றனர். கையடக்கப் பேசிகளில் தமிழ் என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் தமிழில் கார்ட்டூன் பாத்திரங்கள் இல்லாமையை நான் எடுத்துரைத்த போது, ஆண்டிப் பண்டாரம் உள்ளது என உடனே எடுத்துக் காட்டினார்.

Photobucket

ரங்காவுடன் நான்.

தமிழின் மூத்த இதழாளர்களுள் ஒருவரான ரங்கா என்கிற ரங்கராஜன், பத்திரிகையாளர்களின் நலனுக்குத் தொடர்ந்து உழைத்து வருகிறார். இந்தியாவின் செல்வாக்கு மிக்க அதிகார மையங்களை எளிதில் அணுகக்கூடியவர். நிருபவர்கள் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றுபவர். சென்னை ஆன்லைன் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய இவர், இப்போது http://www.indianewsreel.com, http://www.chennailivenews.com, http://www.puducherrylivenews.com ஆகிய தளங்களை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

Photobucket

சத்யா என்ற சத்யநாராயணன் உடன் நான்.

நியூ ஹாரிசான் மீடியா என்ற நிறுவனத்தைப் பத்ரி சேஷாத்ரியுடன் இணைந்து தொடங்கியவர் சத்யா. இந்த நிறுவனத்தின் கீழ் தான் கிழக்குப் பதிப்பகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களும் இயங்கி வருகின்றன. குறுகிய காலத்தில் தமிழின் முதன்மையான பதிப்பகம் என்ற பெயரினைக் கிழக்கு தட்டிச் சென்றது.
சத்யாவின் தந்தை டாக்டர் எல்.வி.கிருஷ்ணன், அணுவாற்றல் துறையில் அணு உலை மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் பிரிவில் 39 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணியில் இருந்தபோது, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தை நிறுவும் பொறுப்பையும் அதன் பிறகு அம்மையத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் பதவியையும் ஏற்றவர்.

Photobucket

நாகராஜன் உடன் நான்.

என்.எச்.எம். எழுதியையும் என்.எச்.எம். எழுத்துரு மாற்றியையும் என்.எச்.எம். பட்டியலிடும் மென்பொருளையும் உருவாக்கியவர் நாகராஜன். என் இனிய நண்பர். தமிழுக்கு நவீன முகத்தை அளித்து வருபவர்களுள் முக்கியமானவர்.


Photobucket

சதக்கத்துல்லா உடன் நான்.

சிங்கப்பூரின் மீடியாகார்ப் நிறுவனத்தில் சதக் என்கிற சதக்கத்துல்லா, வானொலி-தொலைக்காட்சி இதழாளராகப் பணியாற்றுகிறார். விண் தொலைக்காட்சியில் அப்துல் ரகுமான் தலைமையில் கவிராத்திரி என்ற நிகழ்வில் பல ஆண்டுகளுக்கு முன் பங்கேற்றேன். அந்த நிகழ்வின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர் சதக்கத்துல்லா. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கோவையில் இவரைச் சந்தித்தேன்.

Photobucket

நா.கணேசன், சித்தார்த் ஆகியோருடன் நான்.

மென்பொருள் பொறியாளரான சித்தார்த், குவைத்தில் பணியாற்றுகிறார். சிறந்த படிப்பாளி - படைப்பாளி. மொழிபெயர்ப்புகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். நவீன இலக்கியத்துடன் சங்க இலக்கியத்தையும் இணைந்து கற்று, கற்பித்து வருகிறார். இவர், தன் மனைவி காயத்ரியுடன் இணைந்து, அணிலாடு முன்றில் (http://mundril.blogspot.com) என்ற கூட்டு வலைப்பதிவினை நடத்துகிறார். சங்க இலக்கியத்தின் செவ்வியல் தன்மையை மிக எளிமையாகவும் கூர்மையாகவும் இந்த வலைப்பதிவு எடுத்துரைக்கிறது. http://angumingum.wordpress.com என்ற வலைப்பதிவிலும் இவரின் சிந்தனைக் கீற்றுகளைப் பெறலாம்.

Thursday, July 22, 2010

கோவைச் சந்திப்புகள் - 2

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். அப்போது, பேராசிரியர்கள் சிலருடன் எடுத்த படங்கள் இங்கே:

Photobucket

பேரா. சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் நான்.

இவர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். இவரின் 'ஒரு கிராமத்து நதி' என்ற நூல், சாகித்திய அக்காதெமி பரிசுபெற்றது. இவரைப் பற்றிய முழு விவரங்களுக்கு, நண்பர் மு.இளங்கோவனின் கட்டுரையைப் படியுங்கள். அமுதசுரபி காலத்திலிருந்தே சிற்பியுடன் தொடர்பு உள்ளது. அண்மையில் என் உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு கவிதை நூலினை இவரிடம் அளித்தேன். சென்னையில் குலோத்துங்கள் கவிதைகள் தொடர்பான ஆய்வரங்கில் நிறைவுரை ஆற்றிய சிற்பியை மீண்டும் சந்தித்தேன். என் நூலினைப் பெரிதும் பாராட்டினார்.

Photobucket

பேரா.சிற்பி, பேரா.விருதாச்சலம் சுப்ரமணியம் உடன் நான்.

பேரா.விருதாச்சலம் சுப்ரமணியம் அவர்களிடம் சிற்பி என்னை அறிமுகப்படுத்தினார். இவர், An analysis of some historical factors that have influenced Chemmozhi Thamizh over the past several centuries என்ற தலைப்பில் கட்டுரை படைத்துள்ளார். அதன் அச்சுப் படியினை என்னிடமும் அளித்தார். அந்தக் கட்டுரை, வரைபடங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் படங்களுடன் செம்மையாய் அமைந்திருந்தது.

Photobucket

சிங்கைப் பேராசிரியர் சுப.தி்ண்ணப்பன், நா.கணேசன் ஆகியோருடன் நான்.

சிங்கப்பூர் தமிழ்ப்பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிங்கையில் தமிழ்க் கல்விக்குச் சீரிய முறையில் பங்களித்தவர். அந்த நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். 2010 ஜூன் 15 ஆம் தேதி, காந்தளகம் வெளியிட்ட பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்ற நூலின் வெளியீட்டு விழாவுக்காகச் சென்னை வந்திருந்தார். அப்போது தொலைவிலிருந்து பார்த்தேன். செம்மொழி மாநாட்டில் நெருங்கிச் சந்திக்க முடிந்தது.

Photobucket

ஆல்பர்ட் பெர்னாண்டோ, பேராசிரியர் சே.இராமானுஜம் உள்ளிட்டோருடன் நான்.

தமிழ் நவீன நாடக உலகிற்குத் தலைசிறந்த பங்களிப்புகளை வழங்கிய  பேராசிரியர் சே. இராமானுஜம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். 2008ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத நாடக அகாடமி விருது’ பெற்றவர். திருக்குறுங்குடி கோயிலில் நிகழ்த்தப்பெறும் கைசிகி நாட்டிய நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். இவரை வெங்கட் சாமிநாதன் எனக்கு அறிமுகம் செய்வித்தார். சங்கீத நாடக அகாதெமி விருது அறிவிக்கப்பெற்ற அன்று இவருடன் வெ.சா.வும் நானும் சென்னை, திருவல்லிக்கேணியில் ஓர் இரவு முழுதும் தங்கி உரையாடினோம்.

Photobucket

பேராசிரியர் செ.இரா.செல்வகுமார் உடன் நான்.

கனடா, வாட்டர்லூ பல்கலையைச் சேர்ந்த மின்னியல், கணினிப் பொறியியல் துறைப் பேராசிரியரான செ.இரா.செல்வகுமார், தூய தமிழுள்ளம் வாய்த்தவர். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உழைத்து வருகிறார். தம் ஆய்வேட்டில் இவர் உருவாக்கிய நுண்பகுப்பியச் சமன்பாட்டில் (Differential Equation) 'ப' என்ற தமிழ் எழுத்தினை இடம்பெறச் செய்துள்ளார். இந்த நுண்பகுப்பியச் சமன்பாட்டைப் பேராசிரியர் வான் விலியெட் (Van Vliet) என்பார், 'செல்வக்குமார் நுண்பகுப்பியச் சமன்பாடு' என்றே அவருடைய கட்டுரையில் எழுதியுள்ளார்.

இலத்தீன், கிரேக்க, எபிரேயம் போன்ற மொழிகளின் எழுத்துகளைச் சமன்பாடுகளில் பயன்படுத்தும்போது ஏன் தமிழ் எழுத்தினைப் பயன்படுத்தக் கூடாது என்ற உந்துதலில் இந்தச் சமன்பாட்டில் தமிழ் எழுத்தினைப் பயன்படுத்தியுள்ளார். இது, மிக அரிய, முதன்மையான வழிகாட்டல் ஆகும். கனிவும் பணிவும் மிகுந்த இவர், மரபுக் கவிதைகளும் இயற்றியுள்ளார்.

Photobucket

சிங்கைப் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் உடன் நான்.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இணைப் பேராசிரியர் பேரா.ஆ.இரா.சிவகுமாரன், தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்தித் தமிழ் கற்பிப்பதில் முன்முயற்சிகளை  மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மரபுக் கவிதைகள் குறித்து ஆய்ந்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2010 பிப்ரவரி மாதம் நடந்த பன்னாட்டுத் தமிழ்க் கணினிக் கருத்தரங்கில் இவரை முதலில் சந்தித்தேன். என் முனைவர் பட்ட ஆய்வுக்கும் உதவினார்.

Photobucket

முனைவர் வாசு அரங்கநாதன் உடன் நான்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாப் ப‌ல்க‌லைக்க‌ழ‌கத்தில் பணியாற்றி வரும் வாசு அரங்கநாதன் குறித்து, ஆல்பர்ட் பெர்னாண்டோ, நான் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ் சி்ஃபியில் எழுதினார். வாசு அரங்கநாதன், அண்ணாமலைப் பல்கலையில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றவர். தமிழ்ப் பல்கலையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில் தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து வருகிறார். கோவையில் நடந்த தமிழ் இணைய 9ஆவது மாநாட்டின் நிகழ்ச்சிக் குழுத் தலைவராகப் பங்கு வகித்தார்.

Photobucket

Photobucket

ஆ.இரா.சிவகுமாரன், வா.மு.சே.கவியரசன், வா.மு.சே.ஆண்டவர் உள்ளிட்டோருடன் நான்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் மைந்தரான வா.மு.சே.ஆண்டவர், கவிஞர். செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர். ஜப்பானிய மொழியும் கற்றவர். பல நூல்களின் ஆசிரியர். அயல்நாட்டவருக்கும் கல்வி கற்பித்து வருகிறார். இவருடன் 1990களின் பிற்பகுதி முதலே எனக்கு நட்பு உண்டு. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், என் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர். இவரின் உதவியும் ஒத்துழைப்பும் என் ஆய்வேட்டினை நிறைவுசெய்யப் பெரிதும் உதவின.

வா.மு.சே.கவியரசன் உடன் மின்னஞ்சல் வழி மட்டுமே தொடர்பு இருந்தது. இவரை இந்த நிகழ்வில்தான் நேரில் சந்தித்தேன். உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்த இவர், ஜெர்மனியில் 2009ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, 2010 மாநாட்டின் பன்னாட்டுக் குழுத் தலைவராகப் பங்கு வகித்தார். தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தமிழை எளிதில் கற்றிட, படத்துடன் சொல் விளக்கும் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

Photobucket
பேரா.சரளா இராசகோபாலன், மலையமான் என்கிற இராசகோபாலன் உள்ளிட்டோருடன் நான்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் இணைய இதழ்கள் என்ற தலைப்பில் நான் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) ஆய்வினை மேற்கொண்ட போது, எனக்கு ஆய்வு நெறியாளராக விளங்கியவர், பேரா.சரளா இராசகோபாலன். மிக எளிமையாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர். இவர் கணவரும் அதே எளிமையைத் தம் அணிகலனாகப் பூ்ண்டவர். இவர்கள் இருவரும் தனித் தனியாகப் பல்வேறு நூல்களைப் படைத்துள்ளனர்.

Photobucket

கவிக்கோ ஞானச்செல்வன், அவர் மனைவி ஆகியோருடன் நானும் என் அம்மா சௌந்திரவல்லியும்.

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்கு 11, 12ஆம் வகுப்புகளில் கவிக்கோ ஞானச்செல்வன், வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் திகழ்ந்தார். மக்கள் தொலைக்காட்சியில் நல்ல தமிழ் குறித்து விளக்கி வருகிறார்.

இவர் குறித்த என் முந்தைய பதிவுகள்:
Photobucket

முனைவர் மு.இளங்கோவன் உடன் நான்.

 தமிழ் இணையத்தைப் பரப்புவதில் முனைப்புடன் செயலாற்றி வரும் இவர், பல்வேறு திறன்களின் கூட்டாகத் திகழ்கிறார். செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர். மரபுக் கவிதைகள் இயற்றுவதில் தனித் திறன் பெற்றவர். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவர்.  அயலகத் தமிழறிஞர்கள் உள்பட தமிழுக்கு உழைத்த பலரின் வரலாற்றினை இணையத்தில் பதிந்தவர். அந்த வகையில் வலைப்பதிவு நுட்பத்தினைச் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகிறார். சிறந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். செந்தமிழில் இயல்பாக எழுதியும் பேசியும் வரும் இவர், தமிழுக்குக் கிடைத்த அரிய சொத்து.

Photobucket


முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சண்முகம், பேராசிரியர் முனைவர் துரையரசன், அவர் குடும்பத்தினர் ஆகியோருடன் நானும் என் தாயாரும்.

முனைவர் துரையரசன், கும்பகோணம்  அரசினர் கலைக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இணையமும் இனிய தமிழும் என்ற தலைப்பில் பயனுள்ள  நூலினை இயற்றியுள்ளார். இதில், தமிழ் இணையத்தின் முக்கியமான வலை வாயில்களை விளக்கமாகவும் தெளிவாகவும் பதிந்துள்ளார்.

கோவை மாநாட்டில் கட்டுரை வழங்கிய துரையரசன், தம் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வந்திருந்தார். இந்தப் படத்தில் உள்ள நாங்கள் அனைவரும் ஒரே அடுக்ககத்தில் தங்கினோம். அதனால், சில நாட்கள் ஒன்றாகப் புறப்பட்டு, ஒன்றாகத் திரும்பினோம். என் தாயார், துரையரசன் குடு்ம்பத்தினருடன் ஒன்றினார். எனவே நான் அவரைப் பற்றிய கவலையின்றி, நண்பர்கள் பலரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன். இந்த வகையில் துரையரசன் குடும்பத்தினருக்கு என் நன்றிகள்.

 முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சண்முகம், சென்னைப் பல்கலையில் பேரா.தெய்வசுந்தரம் அவர்களின் மாணவர். தமிழில் அரும்பு விட்டுள்ள புதிய துறையான கணினி மொழியியல் சார்ந்து, தம் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார். தமிழ் இணைய மாநாட்டிலும் இதே பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.


மேலும் பேராசிரியர்கள் பலரைச் சந்தித்தபோதும், அவர்களுடன் படம் எடுக்க இயலவில்லை. நேரம் கனிந்தால், அவர்களைக் குறித்துப் பின்னர் எழுதுவேன்.

Wednesday, July 21, 2010

கோவைச் சந்திப்புகள் - 1

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். அப்போது எடுத்த படங்கள் சில இங்கே:

 Photobucket

கான்பூர் ஐஐடி தலைவர் பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் உடன் நான். 

தமிழக அரசு, இவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகே தொழில்நுட்ப முடிவுகளை எடுக்கிறது. 26.06.2010 அன்று, கோவையில் தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் 'கேக்' வெட்டி, அவர் பிறந்த நாள் கொண்டாடினார். அத்தருணத்தில், அவருக்கு வாழ்த்துக் கூறி, படமும் எடுத்துக்கொண்டேன். இதற்கு முன், சென்னையில் அறிவியல் நகரத்தில் உள்ள அவர் அலுவலகத்தில் மறவன்புலவு க.சச்சிதானந்தனுடன் இணைந்து சென்று சந்தித்தேன். அப்போது, தமிழில் இணைய இதழ்கள் என்ற என் நூலினை அளித்தேன்.

Photobucket

அறிவியல் தமிழின் முன்னோடி மணவை முஸ்தபா அவர்களுடன் நான்.

செம்மொழிக்கான தகுதிகள் தமிழுக்கு உண்டு எனப் பலவாறாக நிறுவியவர் இவர். கணினிக் களஞ்சியப் பேரகராதி உள்ளிட்ட நூல்கள் பலவற்றை ஆக்கித் தந்தவர். கணினி சார்ந்த கலைச் சொற்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப் பதிப்புக்கு ஆசிரியராகத் திகழ்ந்து, சிறப்பான இதழ்களை வெளிக்கொணர்ந்தவர். இவரின் கட்டுரைகள் பலவற்றை அமுதசுரபி இதழில் வெளியிட்டு மகிழ்ந்தேன். அப்போது சில முறைகள் அமுதசுரபி அலுவகத்திற்கு வந்து என்னைச் சந்தித்து ஊக்குவித்துள்ளார். இவரையும் இவரின் குடும்பத்தினரையும் தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் சந்தித்து மகிழ்ந்தேன். உடல்நலம் குன்றிய நிலையிலும் தமிழன்பினால் மாநாட்டிற்கு வந்திருந்தார்.

Photobucket

தமிழ் மின் குழுக்களின் முன்னோடி பாலாபிள்ளை, என்னுடன் உரையாடுகிறார். 

இவரின் தமிழ் நெட், இன்றைய மின் குழுக்களின் தாய்க் குழு எனப் புகழப்பெறுகிறது. உலகம் தழுவிய வலைப்பின்னலை உருவாக்குவதில் நிபுணர். எங்களின் கோவை உரையாடலிலும் மின் வடிவிலான தமிழ்ச் செலவாணியை (Tamil Currency) உருவாக்கும் அரிய திட்டத்தினை விவரித்தார்.

யாஹூ, ஜிமெயில் மின்னுரையாடல் பெட்டியில் 2004ஆம் ஆண்டு முதலே இவர் இடம் பெற்றபோதும், கோவையில் தான் முதன் முதலில் நேரில் சந்தித்தேன். இணைய மாநாட்டு வளாகத்தில் இவருக்கு என்னை நா.கண்ணன் அறிமுகம் செய்வித்தார். பின்னர் ஓசை செல்லாவுடன் இணைந்து இன்னொரு முறை பாலாபிள்ளையைச் சந்தித்தேன். ஆஸ்திரேலியா, மலேசியா என உலகம் சுற்றும் இவர், அரிய செயல் வீரர்.


Photobucket

பாலாபிள்ளை, என்னுடன் உரையாடுகிறார். உடன், நண்பர் செல்வ முரளி.

 Photobucket
 
'மதுரைத் திட்டம்' கல்யாணசுந்தரம் அவர்களுடன் நான்.

மதுரைத் திட்டத்தின் நிறுவனர்களுள் ஒருவரான இவர், தமிழ் நூல்களை மின்வடிவில் சேமிக்கும் முயற்சிக்குத் தூண்டுகோலாகத் திகழ்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டில்  விஞ்ஞானியாகப் பணிபுரியும் இவர், தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களுள் ஒருவர். உத்தமம் அமைப்பிலும் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் விஜய் குமார் (www.poetryinstone.in), கல்யாணின் உறவினர் என்பது பலரும் அறியாதது.

Photobucket

தேசிய தகவலியல் மையம் மோகன் அவர்களுடன் நான்.

தேசிய தகவலியல் மையத்தின் தில்லி அலுவலகத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றும் அச்சுதன் மோகன், இந்தியாவின் மின்னாளுகை முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். சென்னையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற செல்பேசித் தொழில்நுட்பத் தமிழாக்கமும் தரப்படுத்தலும் என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டில் இவரை முதலில் சந்தித்தேன். அதன் பிறகு மின்னஞ்சலில்  தொடர்பு நீடித்து வருகிறது. தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவதில் இடர்ப்பாடு உள்ளதைக் கோவையில்  இவரிடம் தெரிவித்த போது, அரசு அலுவலகங்கள், பேரெண்ணிக்கையில் குறுஞ்செய்தி (Bulk SMS) அனுப்பத் தே.த.மை. (NIC) தன்னகத்தே புதிய மென்பொருளை உருவாக்கி வருவதைத் தெரிவித்தார்.

Photobucket


நா.கண்ணன், நா.கணேசன் ஆகியோருடன் நான்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரும் தென் கொரியாவில் பணியாற்றும் சூழலியல் விஞ்ஞானியுமான நா.கண்ணன், வைணவத் தமிழில் தோய்ந்தவர். சிறுகதை, புதினம், கட்டுரைகள் ஆகியவற்றைப் படைப்பதோடு, காசுமி என்ற பெயரில் இனிய கவிதைகளையும் படைத்து வருகிறார். தமிழ் சிஃபியில் நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்தபோது, மிகச் சிறந்த ஒலிப் பதிவுகளை வழங்கியவர். உத்தமம், மதுரைத் திட்டம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தவர்.

நாசா விண் மைய விஞ்ஞானியாகப் பணியாற்றும் நா.கணேசன், பொள்ளாச்சி(பொழில்வாய்ச்சி)க்காரர். தமிழ் ஒருங்குறியைப் பரப்புவதிலும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர். பல்வேறு நுட்ப அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். தமிழ் மணம் வலைத் திரட்டி சார்பில் என்னை நட்சத்திரப் பதிவராக அழைத்தார். இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வருகிறார். மின்னஞ்சலிலும் மின்னுரையாடலிலும் மட்டுமே தொடர்பில் இருந்த இவரை, முதன் முதலில் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன்.

Photobucket

Photobucket

இந்தப் படங்களில் எம்முடன்  சிங்கப்பூரைச் சேர்ந்த அ.பழனியப்பனும் உள்ளார் (வலது ஓரம்).

அ.பழனியப்பன், சிங்கை அரசின் மொழிச் சேவைத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் உலகம் என்ற மின் குழுவினையும் நடத்தி வருகிறார். அமெரிக்க நண்பர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, இவருக்கு என்னை அறிமுகம் செய்வித்தார்.



Photobucket



இதில் என்னுடன் நா.கண்ணனும் அவர் மகள் ஸ்வேதாவும் உள்ளனர். ஜெர்மனியில் தங்கிப் பயிலும் ஸ்வேதா, மேற்கத்திய இசையும் பயின்று வருகிறார்.  இரண்டு நாடுகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பெற்ற போது, பிறந்தவர் ஸ்வேதா.

இவர் கண்ணனின் கையில் கைக்குழந்தையாய் இருந்த படத்தினை முக மண்டலத்தில் கண்டேன். அந்தப் பெண், ஐந்தடி உயரத்திற்கு வளர்ந்து, கோவையில் வண்ணத்துப்பூச்சியாய் வளைய வந்தார்.




எ-கலப்பை முகுந்தராஜ் உடன் நான்.

எ-கலப்பை என்ற எழுதி, தமிழ் இணையத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தொடக்கக் காலத்தில் தமிழ்த் தட்டச்சுக்கு இதனைப் பலரும் பயன்படுத்தினர். நானும் பல ஆண்டுகள் இதனைப் பயன்படுத்தினேன். வலைப்பதிவுகளின் எழுச்சியின்போது, http://www.tamilblogs.com/ என்ற திரட்டியினையும் முகுந்தராஜ் உருவாக்கினார். இப்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி, தமிழ்க் கணிமையை வளர்த்து வருகிறார்.

(படம் எடுத்தவர்களுக்கு நன்றி்; பழைய படத்திற்காக நா.கண்ணனுக்கும் நன்றி)

Sunday, July 18, 2010

கோவை மாநாட்டில் அண்ணாகண்ணன்

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக, தமிழ் இணைய 9ஆவது மாநாடு நடைபெற்றது. அதில் தமிழில் செல்லிட ஆளுகை என்ற தலைப்பிலான என் ஆய்வுக் கட்டுரை தேர்வாகியிருந்தது. அது தவிர, கலந்துரையாடல், கேள்வி-பதில், வலைப்பதிவர் அமர்வு உள்ளிட்ட மேலும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்க அழைக்கப்பெற்றேன். இவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 21 அன்று இரவு கிளம்பி, ஜூன் 22 அன்று முற்பகலில் கோவை சென்றடைந்தேன்.

நானும் என் அம்மா சௌந்திரவல்லியும் வரும் தகவலை முன்பே பதிந்திருந்தேன். அதைத் தொடர்ந்து, கோவை தொடர் வண்டி நிலையத்தில் என் புகைப்படத்துடன் ஒருவர் காத்திருந்தார். எங்களைக் கண்டதும் வரவேற்று, வாகன சாரதியிடம் ஒப்படைத்தார். அவர், எங்களைக் குளிரூட்டிய மகிழுந்தில் அழைத்துச் சென்று எமக்கு ஒதுக்கப்பெற்ற சேவை அடுக்கத்தில் எங்களைச் சேர்ப்பித்தார்.

ஆனால், அந்த அடுக்கக வாயிலில் இருந்த அதிகாரிகள், இங்கே தங்குவோரின் பட்டியல் மூன்றாவது முறையாகத் திருத்தப்பெற்றுள்ளதாகவும் புதிய பட்டியலில் எங்கள் பெயர் இல்லையென்றும் கூறினார். என்னைப் போல் பலரும் அங்கே காத்திருந்தனர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தினைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். சில நிமிடங்களில் மீண்டும் அழைத்து, எங்கள் அறை அங்குதான் உள்ளது என அதிகாரிகளிடம் உறுதி செய்தனர். ஆயினும், புதிதாகக் கட்டிய அடுக்ககம் என்பதால், சில அறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு வருவதால் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டினர். அடுத்த அரை மணி நேரத்தில் அறையை அடைந்தோம்.

மிகச் சிறப்பான, குளிரூட்டிய, மூன்று படுக்கை வசதி கொண்ட அறைகள். இரண்டு அறைகளில் தொலைக்காட்சிகள். விசாலமான வரவேற்பறை. தரமான தண்ணீர். ஓய்வறைகளில் வெந்நீர் வசதி. உணவும் காஃபியும் அறைக்கே வந்து சேர்ந்தன. ஏதும் பழுது எனில் உடனே திருத்திக் கொடுத்தனர்.

இது தான் நாங்கள் தங்கிய மார்டின் சார்லஸ் ரெசிடென்சி அடுக்ககம்.

'வானமளந்த தனைத்து மளந்திடும் வன்மொழி வாழியவே' என்ற பாரதியார் வாக்குடன் எங்கள் அடுக்கக வாயிலில் எங்களை வாழ்த்தி வைக்கப்பெற்ற பதாகை:



செம்மொழி மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்ற இடத்தில் வைக்கப்பெற்ற இயற்கைத் தாவரங்களால் ஆன வரவேற்பு வளைவு



இணையத்தள கண்காட்சி அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தமிழ் விசைப்பலகையின் பேருருவம்.


தமிழ் விசைப்பலகையின் பேருருவத்திற்கு மேலே பெரிய திரையிட்டு, மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாகக் காட்டினர். இடையிடையே செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.



செம்மொழி மாநாட்டு வளாகத்தில் சிற்சில இடங்களில் இத்தகைய வரைபடத்தினை அமைத்திருந்தார்கள். ஆனால், இதனை அச்சிட்டு, வந்திருந்த பேராளர்கள் அனைவரின் கைகளிலும் தந்திருந்தால் மிக உதவிகரமாக இருந்திருக்கும். ஒவ்வொரு முறையும் இந்தப் பலகைகளைத் தேடி வந்து பார்ப்பது என்பது  மிகக் கடினம்.



மாநாட்டில் ஆய்வரங்கம் நிகழ்ந்த பகுதியான கொடிசியா அரங்கின் வெளிவாயிலில் நானும் என் அம்மா சௌந்திரவல்லியும்.



25.06.2010 அன்று காலையில், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி அரங்கில் என் உரை தொடங்கும் முன் நானும் என் அம்மா சௌந்திரவல்லியும்.


முரசொலி மாறன் அரங்கின் வாயில் அருகில் வைக்கப்பெற்றிருந்த ஓவியத்தின் அருகில் நான்.



25.06.2010 அன்று காலையில், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி அரங்கில் என் உரை தொடங்குவது தொடர்பான அறிவிப்பு.



25.06.2010 அன்று காலையில், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி அரங்கில் 'கையடக்கப் பேசியில் தமிழ்' என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், 'தமிழில் செல்லிட ஆளுகை' என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள்.


எனது உரையின் விழியப் பதிவினை இங்கே காணலாம் -
http://annakannan.blogspot.com/2010/07/blog-post.html



அன்று மாலை இலங்கை யாழன் சண்முகலிங்கம் அரங்கில் 'கையடக்கக் கருவிகளில் தமிழ்' என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் பங்கேற்றேன். இதில் முத்து நெடுமாறன், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மொழிபெயர்ப்புப் பிரிவின் இயக்குநர் முனைவர் அருள் நடராசன், செல்வி ஸ்வர்ணலதா ஆகியோருடன் கலந்துரையாடினேன்.




26.06.2010 அன்று காலையில் முரசொலி மாறன் அரங்கில் 'தமிழ் மென்பொருள்கள் மற்றும் இணையப் பக்கங்கள் உருவாக்கியோருடன் கலந்துரையாடல்' என்ற தலைப்பில் 11 முதல் 11.50 வரை எனக்கு நேரம் ஒதுக்கப்பெற்றிருந்தது. இதில் பத்ரி சேஷாத்ரி தலைமை வகித்து, தமிழ் இணையம் சார்ந்து கேள்விகளை எழுப்ப, நான் அவற்றுக்குப் பதில்  அளித்தேன். எனக்கு அடுத்து நா.கண்ணன், உரையாற்றினார் (தமிழ் - கொரியத் தொடர்புகள்).


இந்த நிகழ்வுக்கு அடுத்து, அன்று மாலையில் வலைப்பதிவர்க்கான அமர்வில் பங்கேற்றேன். வலைப்பதிவர் செய்யத்தக்கவை - தகாதவை என்ற தலைப்பில் பேசத் திட்டமி்ட்டிருந்தேன். ஆயினும் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த ஓசை செல்லாவின் குறிப்பிற்கிணங்க, அதனை வாழ்த்துரையாகவே வழங்கினேன்.



என் உரைகள், அது தொடர்பான விவாதங்கள், நண்பர்களுடான சந்திப்புகள், எடுத்துக்கொண்ட படங்கள், மாநாட்டில் என்னைக் கவர்ந்தவை, எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை உள்ளிட்ட பலவற்றையும் அடுத்தடுத்து எழுதுவேன். விழியப் பதிவுகள் கிட்டினும் இடுவேன்.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு அளித்த நல் உள்ளங்களுக்கு என் நன்றி.

=============================================

தொடர்புடைய இடுகைகள்:

பால ரமணி, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளம்பிறை ஆகியோருடன் நான்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post.html

முனைவர்.ப.அர.நக்கீரன் உடன் நான்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post_08.html
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் உடன் நான்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post_3567.html
ஒளவை நடராசன் & அருள் நடராசன் உடன்

http://annakannan-photos.blogspot.com/2010/07/blog-post_13.html

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்

http://annakannan.blogspot.com/2010/07/blog-post_07.html

சிவா பிள்ளையுடன் சிறு உரையாடல்

http://annakannan-interviews.blogspot.com/2010/07/blog-post.html

தமிழில் செல்லிட ஆளுகை: அண்ணாகண்ணன் உரை - விழியப் பதிவு

http://annakannan.blogspot.com/2010/07/blog-post.html