கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன்.
அந்த வகையில் சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவு இயக்குநரும் தமிழ் மொழித் துறைத் தலைவரும் பேராசிரியருமான ந.தெய்வசுந்தரம் அவர்களைச் சந்தித்த போது எடுத்த படம்.
ஜூன் 23 அன்று தமிழ் இணையக் கண்காட்சி அரங்கில் பேராசிரியரைச் சந்தித்தேன். நீண்ட காலம் உழைத்து, தமிழுக்கான சொல் திருத்தி ஒன்றைத் தெய்வ சுந்தரம் உருவாக்கியுள்ளார். அதற்கெனத் தனி அரங்கினை அமைத்திருந்தார்.
தமிழ்க் கணினியியல் என்ற பிரிவில் முன்னோடியான அவர், 2010 பிப்ரவரி 24-26 ஆகிய தேதிகளில் பன்னாட்டுக் கணினித் தமிழ்க் கருத்தரங்கினைச் சென்னையில் நடத்தினார். அதில் தமிழக அரசின் தமிழ் இணையத்தளங்கள் என்ற தலைப்பில் நான் ஆய்வுக் கட்டுரை வழங்கினேன்.
இவரின் ஒத்துழைப்புடன் என் முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவு நூலகத்தினையும் பயன்படுத்தினேன்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் உறுதுணையுடன் புனல் க.முருகையன் எழுதிய பன்னிரு திருமுறை ஒலி்பெயர்ப்பு நூலுக்கு அரிய சிறப்புரையினை வழங்கினார். அந்த நூல் வெளியீட்டுக்கும் ஒத்துழைத்தார்.
அடுத்த தலைமுறைக்குத் தமிழ்க் கணிமையை அறிமுகப்படுத்தும் இவரின் பணி போற்றுதலுக்கு உரியது. தொலைநோக்குடைய இவரின் திட்டங்களைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றினால் அதிகப் பயன் கிட்டும்.
படம்: செல்வ முரளி
Thursday, July 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment