Thursday, August 31, 2006

குஞ்சம் வைத்த செல்பேசியாழினி என்ற என் நண்பர், தன் செல்பேசிக்குக் குஞ்சம் வைத்திருந்தார். அதனால் அது பெண்மைத்தன்மை மிகுந்ததாய் ஆகிவிட்டது. இதைக் காதுக்கு அருகில் வைத்துப் பேசும்போது, ஒயிலாக இருக்கிறது. பொம்மை போலவும் விளையாட்டுப் பொருளைப் போலவும் இது தோற்றம் தருகிறது. இதை மடியில் வைத்து, ear phone மூலமாகப் பேசினால் ஒரு குழந்தை போலவும் இருக்கிறது. குழந்தை அழுவது போலவோ, சிரிப்பது போலவோ ஒரு அழைப்பொலி (Ring tone) அமைத்துவிட்டால் பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றுகிறது.

நண்பர்தான், இதை முதன்முதலில் செய்துள்ளார். எனவே காப்புரிமை (Patent right) அவருக்கே. :-)

Wednesday, August 30, 2006

கண்ட இடத்தில் துண்டறிக்கை

மின்தொடர் வண்டியில்தான் வழக்கமாக வீடு திரும்புவேன். இன்று சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல் ரெயில் நிலையம்) அரக்கோணம் செல்லும் வண்டியில் ஏறினேன். என்றும் போல் கூட்டம் நெருக்கியது. ஆயினும் ரெயில் பெட்டியின் மையத்தில் ஒரு சிறிய இடத்தில் அமர்ந்தேன். மேலும் கூட்டம் அதிகமானதில் ஜன்னல்களும் தெரியவில்லை. அம்பத்தூரில் இறங்கவேண்டிய நான், நிறுத்துமிடத்தைத் தவறவிட்டேன். இரண்டு நிறுத்தங்கள் தாண்டி அண்ணனூர் வந்த பிறகே நான் தவறவிட்டதை அறிந்து இறங்கினேன். நிறுத்துமிடத்தைத் தவறவிட்டதற்குத் தண்டனையாக அண்ணனூரில் அரை மணி நேரம் காத்திருக்கும்படி ஆயிற்று.

அண்ணனூர், இன்னும் கிராமத்தின் சுவடுகளோடுதான் உள்ளது. தூரத்தில் கேட்கும் ஒன்றிரண்டு வாகன ஓசைகள் தவிர, வேறு ஒலியில்லை. ஆழ்ந்த அமைதி. அவ்வப்போது சில்வண்டுகளின் ரீங்காரம். வானில் மெல்லிய பிறை. சுற்றுப்புறம் எங்கும் இருள்.அண்ணனூரை அறிவிக்கும் இந்தப் பலகையை ஒரு படம் பிடித்தேன். அதில், யாரோ துண்டறிக்கைகளை ஒட்டி, பின்னர் அவை அகற்றப்பட்ட அடையாளம் தெரிந்தது. அடுத்த அரை மணியில் எதிர்ப்புறம் வந்த வண்டியில் ஏறினேன். அது, சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தை நோக்கிச் சென்றது. இந்த முறை, நினைவாக இருந்து அம்பத்தூரில் இறங்கினேன்.அம்பத்தூரை அறிவிக்கும் இந்தப் பலகையை ஒரு படம் பிடித்தேன். அதில், யாரோ துண்டறிக்கை ஒட்டி அது இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளது. பொதுவாக விளம்பரம் வேண்டுவோர், இப்படியான பொது அறிவிப்புப் பலகைகளின் மீது துண்டறிக்கைகளை ஒட்டிச் சென்று விடுகின்றனர். இதன் மூலம் மக்கள் இதை நிச்சயம் பார்ப்பார்கள் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது.

பொது நன்மைக்கு இடையூறு செய்யும் இத்தகைய போக்கினை, அத்தகைய விளம்பரதாரர்கள் உடனே கைவிட வேண்டும். இதைக் குறித்து ரெயில்வே துறையும் போக்குவரத்துத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர்ப் பெயரை அறிவிக்கும் பலகைகள் மட்டுமின்றி, தெருப் பெயர்களை அறிவிக்கும் பலகைகள், ஜன்னலோர பேருந்து வழித் தட அறிவிப்புகள், தானிகளில் (ஆட்டோ) அதன் பதிவு எண் அறிவிப்புகள்....... எனப் பல முக்கிய இடங்களின் மேல் துண்டறிக்கைகள் ஒட்டப்படுகின்றன. இதனால் மக்களுக்குப் பெரும் இன்னல் விளைகிறது. இதனை அந்த விளம்பரதாரர்கள் உணர்வார்களா?

Tuesday, August 29, 2006

ஒரு சிறிய விபத்து

இரு தினங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு பொதுயுந்து (லாரி), இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி விபத்துக்கு உள்ளானது. நல்லவேளையாக, இரு சக்கர வாகன ஓட்டிக்கு எதுவும் ஆகவில்லை. சற்று தொலைவில் சோகமாகத் தரையில் அமர்ந்திருந்தார்.யார் மீது தப்பு என்று தெரியவில்லை. அவருடைய வண்டியின் பின் சக்கரத்தின் மீது, பொதியுந்தின் பின் சக்கரம் ஏறி நின்றிருந்தது.நான் போனபோது காவல் துறையினர், இரு சக்கர வாகனத்தின் மீதிருந்து பொதியுந்தினை விலக்குவதற்காக அதைத் தள்ளிக்கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஒரு கை கொடுத்ததும் பொதியுந்து, அடம் பிடிக்காமல் கீழிறங்கியது.வாகனத்தைக் காப்பீடு செய்திருப்பாரேயானால் வாகன ஓட்டிக்குப் பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

Monday, August 28, 2006

திருவரசமூர்த்தி - நந்தினி திருமணம்

சிஃபியில் பணியாற்றும் செல்வன் திருவரசமூர்த்திக்கும் செல்வி நந்தினிக்கும் இன்று (28.8.06) காலை 6 -7.30க்குள் சென்னை வேளச்சேரியில் பெரியவர்கள் முன்னிலையில் இனிதே திருமணம் நடந்தது. நான் நேரில் சென்று அவர்களை வாழ்த்தினேன்.மணமாலை சூடிய நிலையில் மணமக்கள்.

செல்வழிப் படம்: அண்ணாகண்ணன்.

Sunday, August 27, 2006

தேவன் போட்டி: ஆராயும் நடுவர்கள்

2005ஆம் ஆண்டு அமுதசுரபியும் அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டியை அறிவித்தன. அதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வந்து சேர்ந்தன. முதல்கட்டத் தேர்வுக்குப் பிறகு 12 கட்டுரைகள், இறுதிச் சுற்றில் இடம்பெற்றன.

Photobucket - Video and Image Hosting
(படத்தில் இடமிருந்து வலமாக: ராணிமைந்தன், அண்ணாகண்ணன், சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ஏ.வி.எஸ்.ராஜா)

அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர்கள் பாக்கியம் ராமசாமி, சாருகேசி, ஜே.எஸ்.ராகவன் ஆகியோரும் அமுதசுரபி சார்பில் நானும் நடுவர் குழுவில் இடம்பெற்றோம். அமுதசுரபி பதிப்பாளர் ஏ.வி.எஸ்.ராஜா வீட்டில் கூடி, பரிசுக்கு உரிய படைப்புகளைப் பரிசீலித்தோம். ராணிமைந்தன், நடுவராக அறிவிக்கப்படாவிட்டாலும் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவினார்.

Photobucket - Video and Image Hosting
(படத்தில் இடமிருந்து வலமாக: அண்ணாகண்ணன், சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ஏ.வி.எஸ்.ராஜா)


நகைச்சுவை உணர்வு, நடை, கருத்து ஆகிய அம்சங்களில் ஒவ்வொரு கட்டுரைக்கும் நடுவர்கள் தனித்தனியே மதிப்பெண் அளித்தோம். நால்வரும் கூடிக் கலந்தாலோசித்தோம். அமரர் தேவன் நினைவாக அறிவித்த போட்டி என்பதால் மிகச் சிறப்பான கட்டுரைகள் வரும்; இறுதிச் சுற்றில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்த நடுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்தோம். ஆனால், பரிசுக்கு உரியதாக எந்தக் கட்டுரையும் தேர்வு பெறவில்லை. ஆயினும் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மூன்று கட்டுரைகளை, வெளியிடுவதற்கு மட்டும் தேர்வுசெய்தோம்.

Photobucket - Video and Image Hosting

(படத்தில் இடமிருந்து வலமாக: அண்ணாகண்ணன், சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ஏ.வி.எஸ்.ராஜா)

வெளியிடத் தேர்வுபெற்ற படைப்புகளின் விவரத்தையும் நடுவர் குழு சார்பிலான கருத்துரையையும் இங்கு பார்க்கலாம்.

சந்தை நாயகர் பிள்ளையார்

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, ஆகஸ்டு 27 அன்று சந்தையின் நாயகராகப் பிள்ளையாரே இருந்தார். சென்னை அம்பத்தூரை ஒட்டியுள்ள ஒரகடத்தில் பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டும் திடீர் சந்தை உருவாகும். அது போலவே இந்தப் பிள்ளையார் சதுர்த்தி அன்றும் அந்த நாற்சந்தி களை கட்டியிருந்தது.

களிமண்ணில் பிடித்த பிள்ளையார்கள் வரிசையாக அணிவகுத்திருந்தார்கள். 15 ரூபாய், 20 ரூபாய் என்ற விலைகளில் விற்றுக்கொண்டிருந்தார்கள். மக்கள், தாம்பாளம், பிளாஸ்டிக் கூடை, ஒயர் கூடை, பை ஆகியவற்றிலும் வாங்கிச் சென்றார்கள். சிலர், கையிலேயே எடுத்துச் சென்றார்கள். சிறுவர்கள், பிள்ளையாரை மகிழ்ச்சியுடன் ஏந்திச் செல்வதைக் கண்டேன்.வெயிலில் வீற்றிருந்ததால் பிள்ளையார் சிலையில் ஆங்காங்கே விரிசல்கள் விழத் தொடங்கியிருந்தன; விற்பனையாளர்கள், தண்ணீரால் துடைத்து அவர் சூட்டைத் தணித்துக்கொண்டிருந்தார்கள். சில சிலைகளில் கண்ணில் வைத்த மணிகள் விழுந்தன. வாங்கிச் செல்பவர்கள், அதைக் கவனித்து, மணியைக் கேட்டு வாங்கி, பிள்ளையார் கண்ணில் ஒட்டிச் சென்றார்கள். குடையைப் பிள்ளையாருக்குப் பின்னால் நிறுத்தி வைப்பதற்காக ஒரு கைப்பிடி களிமண்ணை மக்கள் கேட்டு வாங்கிச் சென்றார்கள்.
சிலைக்கு அருகிலேயே பிள்ளையார் குடைகள் விற்பனையும் நடந்தது. அருகில் இருந்த ஒரு கொடிக் கம்பத்தில் நீண்ட வாழைத் தண்டினைக் கட்டி, அதில் குடைகளைச் செருகி வைத்திருந்தார்கள். அது, நல்ல உத்தியாக இருந்தது. ஒரு குடையின் விலை, ரூ.6/- அதை விற்ற பெண்மணியிடம் கேட்டேன். அவர்கள் வீட்டிலேயே குடையைத் தயாரித்து வந்து விற்கிறார்களாம். இந்த நாளுக்காக 200 குடைகள் தயாரித்ததாகச் சொன்னார்.
அடுத்து, ஒரு பெரிய மூங்கில் தட்டினை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். தட்டில் கொஞ்சம் எருக்கம் பூக்கள் இருந்தன. அவன் அவற்றை ஒரு நூலில் கோத்துக்கொண்டிருந்தான். ஒரு எருக்கம்பூ மாலையின் விலை, ரூ.1/-
அதற்கு அடுத்து, பூக்கடைகள் இருந்தன. அருகம்புல்லையும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

காந்தி நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் அன்னை மேரிக்கு ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. அதற்கு மிக அருகில் பிள்ளையார் குடைகளைச் சிறுமி ஒருத்தி விற்றுக்கொண்டிருந்தாள். தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.

Monday, August 21, 2006

ஊட்டியில் 7

ஊட்டியில் / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting.

Photobucket - Video and Image Hosting

Sunday, August 20, 2006

அழகிய எருமைகள், மஞ்சள் மலர்கள், வைகறை வானம்

இவையும் நான் ராணி வார இதழில் பணியாற்றியபோது, புதிய புகைப்படக் கருவியில் (கேமரா) பிடித்த படங்களே. ஆண்டு 2001.

கவின் காலையில் கதிரொளி பாய்கையில் அழகிய எருமைகள், அமைதியைச் சுவைக்கின்றன; கோழிக் குஞ்சுகள் இரண்டு தவழ்நடை பயில்கின்றன.

Photobucket - Video and Image Hosting

சென்னை ஐ.சி.எஃப். அருகில் புது ஆவடி சாலையில் மஞ்சள் மலர்களால் சிரிக்கின்றது மரம்.

Photobucket - Video and Image Hosting

அதிகாலையில் ஒரு சந்தனப் பொட்டினைப் போல் சூரியன் சுடர்கின்றது.

Photobucket - Video and Image Hosting

மெட்ரிக் பள்ளி ஒன்றில்

சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரகடம் ஊராட்சியில் காந்தி நெடுஞ்சாலையில் காய்ஸ்கர் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. ஆகஸ்டு 15 அன்று காலையில் சாலையில் சென்றபோது இந்தப் பள்ளியிலிருந்து மாணவ - மாணவிகள் பேசும் குரல், ஒலிபெருக்கியில் கேட்டது. பார்க்கலாம் என்று போனேன்.அங்கு சீருடை அணிந்த மாணவ மணிகள் சுமார் 50 பேர், வெயிலில் அமர்ந்தபடி இருக்க, மாணவன் ஒருவன், மைக் முன்னே வல்லபாய் படேல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.நான் போனபோது தேசியக் கொடி ஏற்றியிருந்தார்கள். மாணவர்களின் பெற்றோர்கள், ஒரு பக்கத்து மர இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். சற்று தள்ளி, சிறு மேசையில் டிரம்ஸ் வாத்தியம் இருந்தது. மெட்ரிக் பள்ளிகள் பலவற்றில் இத்தகைய வாத்தியங்கள் மூலம், மாணவர்களை அணிவகுத்து வரச் செய்கிறார்கள். (அரசுப் பள்ளி எதிலும் இந்த டிரம்ஸை நான் பார்த்ததில்லை.)மாணவன் பேசுகிறான்; அருகில், தேசியக் கொடியிலிருந்து உதிர்ந்த மலர்களைக் காணலாம்.

விடுதலைத் திருநாளைக் கொண்டாட, அந்தப் பள்ளியின் நுழைவாயிலில் வண்ணத் தோரணங்கள்!

மின்விளக்கில் கண்விழிக்கும் படைவீட்டம்மன்

சென்னை, பாடியில் உள்ள அருள்மிகு படைவீட்டம்மன் (படவட்டம்மன்) திருக்கோயிலின் வாயிலில் மின்விளக்குகளால் அழகிய அம்மனை வரைந்திருந்தார்கள். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன். இருட் பின்னணியில் இந்த ஒளிக்கோலம் கண்ணைக் கவர்ந்தது.செல்பேசியை எடுத்தேன். சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து ஒரு படம் எடுத்தேன். தொலைவு அதிகமாய் இருந்ததால் படம் தெளிவாக விழவில்லை.எனவே அம்மன் காலடிக்கே வந்து படம் பிடித்தேன். அந்தக் கோயிலின் 25ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, இந்த அலங்காரம் செய்திருந்தார்கள்.சாலையோரம் உள்ள சிறிய கோயில் என்றாலும் இங்கு மக்கள் கூட்டம் அதிகம்; சிறப்பு நாட்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் அளவுக்குக் கூட்டம் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


இந்தக் கோயிலின் வாசலில் ஒரு பேருந்து நிறுத்தமும் உள்ளதால் கோயிலுக்கு வரும் கூட்டமும் பேருந்துக்கு நிற்கும் கூட்டமும் கலந்து எப்போதும் ஜேஜே என்றுதான் இருக்கும்.

படங்களை எடுத்த 2 மணி நேரத்தில் அவற்றை வலையேற்றிவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 17, 2006

நான் பெற்ற பரிசுகள்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் நடத்தும் பாரதியார் சங்கம் (1949இல் நிறுவியது), ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, கவிதை, ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் 1994ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் நான் முதல் பரிசு பெற்றேன். நான் அப்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று வந்தேன்.

மாணவர்கள், போட்டி அரங்கிற்கு வந்த பிறகு, போட்டிக்கான தலைப்பினை அறிவித்தார்கள். அரை மணி நேரத்தில் கவிதை எழுத வேண்டும் என்று நேர நிர்ணயம். மண்ணில் தெரியுது வானம் என்று தலைப்பு. அவர்கள் சொன்ன நேரத்திற்குள் நான் எழுதிக் கொடுத்தேன். நடுவர்கள் எனக்கே முதல் பரிசு என அறிவித்தார்கள்.

இதற்கான பரிசளிப்பு விழா, 12.9.1994 அன்று ராணி சீதை அரங்கில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருள்ளும் சிறந்தவர் ஒருவருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்குவார்கள். அவருக்கு, ஏவி.எம். அறக்கட்டளைப் பரிசு ரூ.1000/-, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளைப் பரிசு ரூ.700/- ஆகியன வழங்குவார்கள். அந்த ஆண்டு இந்த இரு பரிசுகளையும் எனக்கே வழங்கினார்கள்.

மேலும் இந்தப் பரிசுகளை அறிவிக்கும் அறிக்கையைப் பாரதியாரின் படத்தோடு, கண்ணாடிச் சட்டமிட்டு எனக்கு அளித்தார்கள். மேலும் நிறைய நூல்கள்.இந்த உற்சாகத்தில் அடுத்த ஆண்டும் போட்டியில் கலந்துகொண்டேன். என்னைக் கவர்ந்த எழில் என்பது தலைப்பு. இப்போது ஒரு மணி நேர அவகாசம். இந்த முறை நான், வெண்பாவிலேயே அந்தாதி ஒன்று பாடிவிட்டேன். இந்த முறையும் எனக்கே முதல் பரிசு அளித்தார்கள். ஆனால், கடந்த முறை பரிசு பெற்றுவிட்டதால் இம்முறை அறக்கட்டளைப் பரிசுகள் வேறு ஒருவருக்குச் சென்றுவிட்டன. பாரதியாரின் புகைப்படமும் சான்றிதழும் சில நூல்களும் மட்டுமே அளித்தார்கள்.

ஆயினும் இந்த 3 பாரதியார் படங்களும் இன்னும் எனக்கு என்னை நினைவுறுத்தியபடியே உள்ளன.


இந்தப் படங்களை எடுத்தவன் நான். ஆண்டு 2001.


பரிசு பெற்ற பிறகு, வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து, நா.மகாலிங்கம், வழக்கறிஞர் காந்தி, நல்லி குப்புசாமி உள்ளிட்டோருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

Photobucket - Video and Image Hosting

இந்தப் படத்தில் பாரதியாரின் தலைப்பாகைக்கு அருகில் நான் நிற்கிறேன்.

Wednesday, August 16, 2006

மார்பளவுப் புகைப்படம்
8.9.2005 அன்று எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவுப் படம்; சிஃபியில் பணியில் சேர்வதற்கு முதல் நாளில் அடையாள அட்டைக்காக எடுத்த படம்!

எனது நூலகம்என் வீட்டு நூலகத்தின் ஒரு பகுதி. படம் எடுத்தவன் நான்; ஆண்டு 2001.

Sunday, August 13, 2006

வாசுகி ஜெயபாலன் இசை நிகழ்ச்சி

Photobucket - Video and Image Hosting

12.8.06 அன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீ பார்வதி அரங்கில் வாசுகி ஜெயபாலனின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் மனைவியாரான வாசுகி, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இசை ஆசிரியையாக உள்ளார். கணீரென்ற குரலில் பாட வல்லவரான இவர், கேட்பவரைக் கட்டிப் போடும் ஆளுமையுடன் உள்ளார்.

Photobucket - Video and Image Hosting

ஆகஸ்டு 12 அன்று நடந்த நிகழ்ச்சியில் ஜெயபாலனின் பாடல்களையும் வள்ளித் திருமணம் என்ற அவரின் காவியத்தையும் வாசுகி பாடிக் காட்டினார். பாவங்கள், சொற்களுக்கான அழுத்தங்கள் ஆகியவற்றுடன் இசையை நிகழ்கலையாகவே ஆக்கிக் காட்டினார்.

Photobucket - Video and Image Hosting

இவருடைய பாடல்களைத் தமிழ்சிஃபியில் நீங்கள் கேட்கலாம்.

Photobucket - Video and Image Hosting

எழுத்தாளர் திலகவதி ஐபிஎஸ், கலை விமர்சகர் இந்திரன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் இளையபாரதி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

மேற்கண்ட படங்களை எடுத்தவன் அடியேன்.

Saturday, August 12, 2006

அம்பத்தூரில் புத்தகக் காட்சி

Photobucket - Video and Image Hosting

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் நடத்தும் புத்தகக் காட்சி, சென்னை அம்பத்தூரில் நடந்து வருகிறது. அம்பத்தூர் ஓ.ட்டி.யில் (O.T. alias Old Township) பேருந்து நிலையத்திற்கு அருகில், இரவீந்திரன் மருத்துவமனைக்கு எதிரில் இந்தக் காட்சி, நடந்து வருகிறது.

Photobucket - Video and Image Hosting

ஜூலை 15 அன்று தொடங்கிய இந்தக் காட்சி, இன்னும் 6 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. 10 விழுக்காடு கழிவு தருகிறார்கள். 35 பதிப்பகங்களின் நூல்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

Photobucket - Video and Image Hosting

சாண்டில்யனின் சரித்திரப் புதினங்கள், ஜேகே நூல்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டு வாங்குகிறார்கள். பாட நூல்கள் வேண்டுமென்று நான் சென்றபோது ஒருவர் கேட்டார். அவர்களிடம் இல்லை. இல்லாத நூல்களைக் கேட்டால் என்ன செய்வீர்கள் என்று அங்கிருந்த கிருஷ்ணவேணி என்பவரிடம் கேட்டதற்கு, அதற்கென்று ஒரு குறிப்பேடு வைத்திருக்கிறோம்; வேண்டிய நூல்களை அதில் எழுதினால் ஒரு வாரத்திற்குள் அதைப் பெற்றுத் தருவோம் என்றார்.

Photobucket - Video and Image Hosting


நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்ட இந்தியா 2020 என்ற கலாம் நூலின் மாணவர் பதிப்பையும் வெ.இறையன்புவின் படிப்பது சுகமே என்ற நூலையும் சேர்த்து ரூ.50க்குத் தருகிறார்கள். இவற்றின் அசல் விலை, ரூ.100/-

தமிழில் மகிழுந்து எண்கள்

Photobucket - Video and Image Hosting

6.8.06 அன்று அம்பத்தூரில் நடந்த பா.ம.க. விழா ஒன்றுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசு வந்திருந்தார். விழா மண்டபத்திற்கு அருகில் இந்த மகிழுந்து நின்றிருந்தது. எழுத்துகள் மட்டுமின்றி எண்களும் தமிழில் இருந்தமை வியப்பளித்தது. என்னே ஒரு தமிழ்ப் பற்று!

பி.கு.: தமிழ் எண்கள் எவை எவை என அறிய வேண்டுமா? இங்கே செல்லுங்கள்.

Tuesday, August 08, 2006

ஊட்டியில் 6

Photobucket - Video and Image Hosting

ஊட்டியில் / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்.

ஊட்டியில் 5

Photobucket - Video and Image Hosting

ஊட்டியில் / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்.

ஊட்டியில் 4

Photobucket - Video and Image Hosting

ஊட்டியில் / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்.

Monday, August 07, 2006

ஊட்டியின் புல்வெளியில்ஊட்டியின் புல்வெளியில் / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்.

கொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகேகொடைக்கானலில் ஒரு தேன்கூட்டின் அருகே - 2003. வழிப்போக்கர் எடுத்த படம்.