Wednesday, August 02, 2006

மலர்மன்னன் உடன் நான்

Photobucket - Video and Image Hosting

1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்திய மலர்மன்னன், 'மலையிலிருந்து வந்தவன்' என்ற நாவல் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்ததவர். இது, கி.பி.1800இன் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திச் சிறையிலேயே உயிர் துறந்த டார்ஸா முண்டா என்ற வனவாசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது; நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடராக வெளிவந்தது; அண்மையில் மறுபதிப்பானது. மலர்மன்னனின் இயற்பெயர், சிவராம கிருஷ்ண அரவிந்தன். இதழாளராகவும் பணியாற்றியவர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மலர்மன்னனை நான் அறிவேன். அவர் தாடி வைப்பதற்கும் முன்பாகவே. நான் அமுதசுரபி பொறுப்பாசிரியராக இருந்தபோது, அந்த இதழின் பதிப்பாளர் ஏ.வி.எஸ். ராஜா, மலர்மன்னனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு மலர்மன்னன், நான் தயாரித்த பதிப்பகச் சிறப்பிதழில் உ.வே.சா. தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினார்.

அவரின் 'மலர்மன்னன் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு நான் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தேன். அது, அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொகுப்பில் மேலும் சில கதைகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் தாமதமாகக் கிடைத்ததால் அவை விடுபட்டன. அது குறித்து மலர்மன்னனுக்குச் சிறிது மனக் குறை உண்டு.

(அவருக்கு முன்னதாகவே அவரின் சகோதரர் சாம்ராட் என்ற பெயரில் எழுதும் அசோகனை நான் அறிவேன். அவரை அநேக முறைகள், அமுதசுரபிக்காகப் பயன்படுத்தியிருக்கிறேன். மலர்மன்னனின் சகோதரி விஜயா சங்கரநாராயணனையும் நான் நன்கு அறிவேன். அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.)

திண்ணையில் பல கட்டுரைகளை எழுதிவரும் மலர்மன்னன், விவாதங்கள் சிலவற்றைத் தொடங்கி வைத்துள்ளார்.

அவர், கடந்த 26.5.2006 அன்று நட்பு நிமித்தம் என்னை டைடல் பூங்காவில் சந்தித்தார். பல தலைப்புகளில் சுவையான செய்திகளைப் பகிர்ந்துகொண்ட மலர்மன்னனைத் தமிழ் சிஃபியில் தொடர்ந்து எழுதவும் பேசவும் (ஆமாம், ஒலிப் பதிவுகள்) அழைத்தேன். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள மலர்மன்னனை அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறும் கேட்டுக்கொண்டேன். இசைந்தார். அதன் பிறகு அவர், பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் அவர்களை அறிமுகப்படுத்தியதோடு, அவரை அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டைடல் பூங்காவிற்கும் அழைத்து வந்தார்.

No comments: