Saturday, October 02, 2010

எனது முதல் கடற்பயணம்

 

வங்காள விரிகுடாவில் சுமார் இரண்டரை மணி நேரம் வலம் வரும் வாய்ப்பு, 2010 ஜூ்லை 16 அன்று கிட்டியது. இதுவே கடலில் நான் மேற்கொண்ட முதல் பயணம். தமிழ்ப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் சார்பில் கடலியல் வல்லுநரான ஒரிசா பாலு (பாலசுப்பிரமணியம் B+), இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். 'நெய்தலோடு ஒரு பொழுது' என்பது, இந்தப் பயணத்திற்கு அவர் சூட்டிய பெயர்.



சென்னைத் துறைமுகத்திற்குக் காலை 6 மணி அளவில் சென்று சேர்ந்தேன். என்னுடன் செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனத்தில் பணிபுரியும் சுபாஷினி, அருணா, தேவி, அன்புச்செல்வன் உள்ளிட்டோரும் பயணிக்க வந்திருந்தனர். நுழைவாயிலில் ஒவ்வொருவரையும் தனித் தனியாகப் படம் எடுத்து, அடையாள அட்டை அளித்தனர்.



பிரமாண்டமான இரும்புக் கப்பல்கள், பெரிய பெரிய பொதிப் பெட்டிகள், அவற்றைக் கையாளும் மின்தூக்கிகள் எனத் துறைமுகம் கம்பீரமாக இருந்தது. பாரதியார், சுந்தரனார், கோவூர் கிழார்... உள்ளிட்ட தமிழ்க் கவிஞர்கள் பெயர்களில் பல கப்பல்கள் நின்றிருந்தன. இவை பூம்புகார் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. அங்கு, ஒரு கப்பல் சிதிலமடைந்து, துருப்பிடித்து காட்சி அளித்தது. கனத்த சங்கிலியால் கரையுடன் பிணைத்திருந்தார்கள். இதன் மதிப்பைவிட, இதை உடைத்து எடுப்பதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் அப்படியே விட்டுவிட்டார்கள் என அறிந்தேன். துறைமுகத்தில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.



மாகோபோலா என்ற நவீன எந்திரப் படகு, எங்களுக்காகக் காத்திருந்தது. வெள்ளியலைகளின் மீது வெண்ணிறப் பறவையாய் வீற்றிருந்தது. மனோஜ் சாக்கோ என்பவர், படகு உரிமையாளர். சுமார் 40 இலட்சம் மதிப்புள்ள இந்தப் படகு, சிறிய கடல் பயணத்திற்கும் மீன் பிடிப்பதற்கும் இதர கடலியல் ஆய்வுகளுக்கும்  பயன்பட்டு வருகிறது. மீன்பிடி விளையாட்டு்கள், கடல் சுற்றுலா ஆகியவற்றுக்கும் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.



மேற்கத்திய தொழில்நுட்பத்துடன் இலங்கையில் உருப்பெற்ற இந்தப் படகு, பல வசதிகளைக் கொண்டது.  இதில் 60 குதிரைத் திறன் கொண்ட இரட்டைப் பொறிகள் (எஞ்சின்) உண்டு. இப்படகு, 25 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இடங்காட்டிக் கருவி (ஜிபிஎஸ்)யும் அங்கிருந்தது. படகிற்கு உள்ளேயே கழிவறையும் உண்டு.



புதியவர்களான எங்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீரில் மிதக்கும் மேலுடையினை அளித்தனர். செந்நிறத்திலான அந்த உடுப்பு, கண்ணைக் கவர்ந்தது.



சுமார் 7 மணி அளவில் எங்கள் கடற்பயணம் தொடங்கியது. சுரேஷ் என்பவர், படகினைச் செலுத்தினார். மனோஜ் சாக்கோ, வழிகாட்டினார். கதிரவன் மெல்ல மேலே ஏறத் தொடங்கினான். இலேசான உப்புக் காற்று வீசியது. படகு அசைந்தபடி வேகம் எடுத்தது.



படகு எந்த வேகத்தி்ல், எந்தத் திசையில் செல்கிறது, கரையிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, அது செல்லும் இடத்தில் உள்ள ஆழம் எவ்வளவு, அங்கு மீன்களின் அடர்த்தி எவ்வாறு உள்ளது... உள்ளிட்ட விவரங்களைப் படகில் இருந்த திரை காட்டியது.



படகின் கனத்தைச் சமநிலையில் வைத்திருக்கும் பொருட்டு, நாங்கள் அதன் இரு புறமும் பிரிந்து அமர்ந்தோம். அலைகளில் ஏறி இறங்கிப் படகு விரைந்தது. சில நேரங்களில் எங்களைவிட அலை உயரத்தில் இருந்தது. வேறு சில நேரங்களில் அலைகளை விட நாங்கள் உயரத்தில் இருந்தோம். கடலுடனான அந்த விளையாட்டு, எனக்குப் பிடித்திருந்தது.
  



அந்த ஆட்டம், மிக இனிது. கடல் அன்னை தாலாட்டுகிறாள் என்ற கற்பனை சுவையானது. படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த எங்கள் மீது பல நேரங்களில் நீர்த்துளிகள் தெறித்தன. சிறிய துளிகளும் உண்டு. ஆடையை நனைக்கும் வண்ணம் பெரிய துளிகளும் உண்டு. அங்கிருந்த நண்பர், கடல் நம்மை ஆசீர்வதிக்கிறது என்றார்.



படகு, நீரைக் கீறிக்கொண்டு விரைந்தது. அது ஓர் அழகிய ஓவியமாக விரிந்தது.



படகின் பின்புறத்தில் எந்திரத் தூண்டில்களைப் பொருத்தினார்கள். வலுவான அந்தத் தூண்டில்களில் நீண்ட நைலான் நூல் இருந்தது. தொலைவில் உள்ள மீனையும் பிடிக்க வல்லது. ஆனால், காலை ஏழரை, எட்டு மணியளவில் சூரியன் நல்ல உயரத்திற்கு எழுந்துவிட்டான். எனவே வெளிச்சமும் வெப்பமும் அதிகமிருந்ததால் மீன்கள் ஆழத்திற்குச் சென்றுவி்ட்டன என்றார்கள். எங்கள் பயணத்தி்ல் எந்த மீனும் சிக்கவி்ல்லை. அப்படியே ஏதும் மீன் சிக்கினால் அதை மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவோம் என மனோஜ் கூறினார். எங்களுக்கு மீன்பிடிப்பது, பொழுதுபோக்குதானே தவிர, அதைக் கொல்வது நோக்கமில்லை என்றார்.

 



மனோஜ் உடன் நான்


கரையிலிருந்து விலகி, கடலில் சில மைல்கள் தொலைவுக்கு வந்தோம். சென்னைப் பட்டினத்தின் தோற்றம் அழகாக விரிந்தது. திருவொற்றியூர், எண்ணூர், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம் எனச் சில பகுதிகளைக் கண்டு மகிழ்ந்தோம். இது வரை கரையிலிருந்து கடலைப் பார்த்திருப்பீர்கள். இப்போது கடலிலிருந்து கரையைப் பார்க்கிறீர்கள் என்றார் ஒரிசா பாலு. திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையம், சென்னைப் பல்கலைக்கழகம்... உள்ளிட்ட பலவற்றை நன்கு பார்க்க முடிந்தது.


கடலுள் மூழ்கிய ஒரு கப்பலின் எச்சம்

ஒரிசா பாலு, பல விவரங்களைத் தெரிவித்தபடி வந்தார். நம் கடல் வளத்தை, தமிழர்களின் கடலியல் ஆற்றலை, நுணுக்கங்களைச் சிறு சிறு செய்திகளாகத் தெரிவித்தார். அவர் குறுஞ்செய்திகள் வாயிலாகவும் கடலியல் தகவல்களைப் பரப்பி வருகிறார். அவர் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று:

இந்தியா, 5560 கி.மீ. கடற்கரையைக் கொண்டுள்ளது (தீவுகள் அல்லாமல்). நம்மிடம் 11 பெரிய துறைமுகங்களும் 168 நடுத்தர - சிறிய துறைமுகங்களும் உண்டு. இந்த 11 துறைமுகங்களில் 3, தமிழ்நாட்டில் உள்ளன. அவை, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி.


ஒரிசா பாலுவுடன் நான்

காலையில் படகில் ஏறுவதற்கு முன் ஒரு கோப்பை நீரைப் பருகியிருந்தேன். கடலுக்குள் சென்ற சிறிது நேரத்தி்ல் எனக்குக் குமட்டல் ஏற்பட்டது. குடித்த நீரைக் கக்கிய பிறகே வயிறு அமைதி கொண்டது. இனி மேல் புதிதாகப் பயணிப்போர், நீரைத் தவிர்ப்பது நல்லது.


படகு ஓட்டுநர் சுரேஷ், படகு உரிமையாளர் மனோஜ்

படகினைச் சுரேஷ் எப்படி ஓட்டுகிறார் எனக் கவனித்தேன். என் ஆர்வத்தைப் பார்த்த அவரும் மனோஜூம் 'நீங்களும் ஓட்டிப் பாருங்கள்' என வாய்ப்பளித்தனர். சில நிமிடங்கள், அந்த இருக்கையில் அமர்ந்து இயக்கினேன். படகின் திசையைத் திருப்பிப் பார்த்தேன். அலைகளின் வேகத்திற்கும் காற்றின் வேகத்திற்கும் திசைக்கும் ஏற்ப, படகினைச் செலுத்துவது, சவாலான பணி. பிறகு, படகினை மீண்டும் சுரேஷிடமே ஒப்படைத்தேன்.


ஓட்டுநர் இருக்கையில் நான்

என் உடன் வந்த செம்மொழி நிறுவன நண்பர்கள் பலரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள். சுவாரசியமாக உரையாடியபடி வந்தனர்.









சுமார் இரண்டரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கரைக்குத் திரும்பினோம்.
 





 கரையோரத்தில் மீன் குஞ்சுகள் பலவும் சாரை சாரையாக நீந்தும் காட்சி, சூரிய ஒளியில் கண்ணுக்கு விருந்தளித்தது.



கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் (Royal Madras Yacht Club) அரங்கில் அமர்ந்து தேனீரும் நொறுக்குத் தீனியும் உட்கொண்டோம்.
 


 மீனவர் சேகருடன் மீன்பிடி அனுபவங்களைக் கேட்டறிந்தோம். மகிழ்ச்சியுடன் மீண்டும் அங்கு வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் விடைபெற்றோம்.

Friday, July 23, 2010

கோவைச் சந்திப்புகள் - 3

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். அப்போது, எடுத்த படங்கள் சில இங்கே:

Photobucket

ஆல்பர்ட் பெர்னாண்டோ உடன் நான்

தன்னலமற்ற தமி்ழ்த் தொண்டரான ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் வசிக்கிறார். மருத்துவத் துறை சார்ந்த பணியில் அவர் ஈடுபட்டுள்ள போதிலும் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இவர் ஆற்றும் பணிகள் பற்பல. அமெரிக்காவில் தமிழ் வளர்ப்போர் என்ற தொடரினை முன்பு நான் ஆசிரியராக இருந்த தமிழ் சிஃபியில் எழுதினார். ஈழப் போர் நடந்த தருணத்தில் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் ஒரு தொடரினையும் எழுதினார். மேலும் பற்பல கட்டுரைகளையும் வரைந்தார்.

எழுத்துடன் நின்றுவிடாமல், சமூக சேவைகளில் ஆல்பர்ட் முன் நிற்கிறார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கி, வலைத்தளம் வாயிலாகக் குறை தீர்க்கும் தொடுவானம் திட்டத்திற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தார். மேலும், வலைப்பதிவு நுட்பங்களைப் பயன்படுத்தப் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் நாமக்கல்லில் நிகழ்த்த உதவினார். அந்த நிகழ்ச்சிக்கு வெவ்வேறு நேர மண்டலங்களைச் சேர்ந்த 9 நாடுகளிலிருந்து தமிழ்ச் சான்றோர்களை ஒரே நேரத்தில் ஒன்று திரட்டி, வாழ்த்துரை வழங்கிடச் செய்தார்.

மேலும் கோவை மாநாட்டுக்கு வந்திருந்தபோதும், அடையாள அட்டை இல்லாதோருக்கும் அழைப்புக் கடிதத்தின் மின்னஞ்சல் நகல் பெற வேண்டியவர்களுக்கும் பெரிதும் உதவினார். இதற்கென அதிகாரிகளுடன் அவர் போராட வேண்டியிருந்தது.

அத்துடன் தேவநேயப் பாவாணரின் மூன்றாம் மகன் அடியார்க்கு நல்லான், பெங்களூருவில் முதிய வயதில் ஆதரவின்றி, நோய்வாய்ப்பட்டு இருப்பதை ஆல்பர்ட் அறிந்தார். அவரைத் தக்க காப்பகத்தில் சேர்த்து, அவரின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தம் நேரத்தைப் பெருமளவில் செலவிட்டார்.

Photobucket

தமிழ் இணைய மாநாட்டின் வலைப்பதிவர் அமர்வில் பங்கேற்றதற்கான சான்றிதழை ஆல்பர்ட், சென்னையில் என்னிடம் வழங்கும் காட்சி.

தமிழ் இணைய மாநாட்டில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்வதற்காக ஆல்பர்ட் பெரிதும் உழைத்தார். பலரையும் தொடர்புகொண்டு, அவர்களிடமிருந்து தலைப்புகளைப் பெற்று, அவர்களுக்கு அரங்கு - நாள் -  நேரம் ஒதுக்கி, மின்னஞ்சலிலும் தொலைபேசியிலுமாக மாநாட்டிற்கு அழைத்து... ஆல்பர்ட் அயராது பாடுபட்டார். ஆயினும் கடைசி நேரத்தில் அந்த அமர்வு, பல்வேறு மாற்றங்களுடன் அரங்கேறியது. பேச அழைத்தவர்களுள் பலரையும் மேடையேற்றி, ஏமாற்றத்தைத் தவிர்த்தார்.

ஆயினும் சிலருக்குச் சில ஏமாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த அமர்விற்குத் திட்டமிட்டதில் ஆல்பர்ட்டிற்கு இருந்த பொறுப்பும் பணிச் சுமைகளும் மிகப் பெரியவை. தாம் திட்டமிட்ட அளவில் நிகழ்வு நடைபெறவில்லையே என்ற ஏமாற்றம், ஆல்பர்ட்டிற்கும் கூட இருக்கலாம். ஆயினும் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது என்று எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Photobucket

திலகபாமா, மதுமிதா, ஆல்பர்ட் பெர்னாண்டோ, பெஞ்சமின் லெபோ, சிங்கை கிருஷ்ணன், சிங்கை அ.பழநியப்பன், நாக.இளங்கோவன் ஆகியோருடன் நான்.

இவர்களுள் பெஞ்சமின் லெபோ, சிங்கை கிருஷ்ணன், சிங்கை அ.பழநியப்பன், நாக.இளங்கோவன் ஆகியோரை இந்த மாநாட்டில்தான் முதன் முதலில் சந்தித்தேன். திலகபாமா, மதுமிதா ஆகியோரின் படைப்புகள் குறித்த என் முந்தைய இடுகைகள்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சின் தலைநகர் பாசிஸில் கம்பன் கழகத் தலைவராக இருந்து நடத்தி வருகிறார். கம்பன் முற்றோதல் என்ற நிகழ்வினை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். வலைப்பதிவர் அமர்வில் பேசிய இவர், கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசு நாதரின் வாக்கினை அப்படியே இணையத்திற்குப் பொருத்திக் காட்டிப் பேசியது, சுவையாய் அமைந்தது.  அவரின் மனைவி லூசியா லெபோவும் சிறப்பாக உரையாற்றினார்.

சென்னை திரும்பிய பிறகு, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் நிகழ்ந்த செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற நிகழ்வில் மீண்டும் லெபோ தம்பதியினரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.

Photobucket

 சிங்கை கிருஷ்ணன், நாக.இளங்கோவன் ஆகியோருடன் நான்.

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட சிங்கை கிருஷ்ணனைக் கண்டு உரையாடினேன். தமிழ்க் கலைச் சொற்கள் உருவாக்கத்தில் ஈடுபாடு கொண்ட  நாக.இளங்கோவனுடன் எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பாகச் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சென்னையில் மீண்டும் ஒரு முறை இவரைச் சந்தித்தேன். நான் வசிக்கும் அம்பத்தூரி்லேயே இவரது வீடும் உள்ளது. ஆயினும்  பணி நிமித்தம் அரபு வளைகுடாவில் (ரியாத் - சவுதி அரேபியா) வசிக்கிறார்.

Photobucket

இராச.சுகுமாரன், மணி மு. மணிவண்ணன் (நடுவில் இருப்பவர்) ஆகியோருடன் நான்.


மின்னஞ்சல் வழியே தொடர்பில் இருந்த மணி மு. மணிவண்ணனைக் கோவையில் முதன் முதலில் சந்தித்தேன். பேருந்தில் செல்லுகையில் இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்தார். அது தொடர்பாகவே தம் ஆய்வுக் கட்டுரையையும் வாசித்தார். மணிவண்ணனின் மனைவி ஆஷா அவர்களையும் சந்தித்தேன். இவர்கள், அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாட்டினைச் சிறப்புடன் நடத்திக் காட்டியவர்கள். அமெரிக்காவில் வசித்து வந்த இவர்கள், இப்போது சென்னையில் வசிக்கிறார்கள்.

புதுச்சேரியைச் சேர்ந்த இராச.சுகுமாரன்,  புதுவை வலைப்பதிவர் சிறகத்தில் முக்கிய பங்கு வகிப்பவர். எழுத்துச் சீர்திருத்தத்தை மறுத்து, இவரும் இவர் சார்ந்த அமைப்பும் கூட்டிய மாநாடு, தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தது. கோவையில் இவரைச் சந்தித்த போது, என் முனைவர் பட்ட ஆய்வினை அறி்ந்தார். என் ஆய்வினுள் புதுச்சேரி அரசின் தமிழ் இணையத்தளங்கள் தொடர்பாக நான் திரட்டிய தரவுகளை அறிய விழைந்தார்.


Photobucket
சுபாஷினி டிரெம்மல் உடன் நான்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களுள் ஒருவரான சுபா, செம்மொழி மாநாட்டிலும் தமிழ் இணைய மாநாட்டு வளாகத்திலும் மிகப் பரபரப்புடன் சுற்றி வந்தார். ஜெர்மனியில் வாழும் மலேசியத் தமிழச்சியான இவருடன் விரிவான இ-நேர்காணலை நிகழ்த்தியுள்ளேன். (சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3).

Photobucket
மு.சிவலிங்கம் உடன் நான்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் நீண்ட காலம் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மு.சிவலிங்கம். தமிழில் கணினியியலை எளிய முறையில் அறிமுகப்படுத்தில் இவருக்கும் முக்கிய பங்கு உண்டு. தினமணியில் இவர் எழுதிய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்துள்ளேன். கைப்பேசிகளில் தமிழ் என்ற அமர்வில் முத்து நெடுமாறன் தலைமையில் சிவலிங்கத்துடன் இணைந்து உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். தம் கைப்பேசியில் பேசுபவரைப் பார்த்துக்கொண்டே பேசும் வசதி உள்ளதைக் காட்டினார். பெங்களூருவில் உள்ள தம் பேரன்களைப் பார்த்து உரையாடுவதற்கு இது பயன்படுகிறது என்ற போது, அவரின் அன்பினை உணர்ந்தேன்.

Photobucket

விஜய், திவாகர் உடன் நான்.

http://www.poetryinstone.in என்ற இணையத்தளத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நடத்தி வருபவர் விஜய் என்ற விஜயகுமார். சிங்கப்பூரில் வசித்து வரும் அவர், தென்னகத்தின் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதித்து, காத்து வருகிறார். அவற்றைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமான புரிதலை உருவாக்கி, ரசனையை வளர்ப்பதில் விஜயின் தனித்துவம் மிளிர்கிறது. இவர், மதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் அவர்களின் உறவினரும் கூட. இவரைக் கோவை மாநாட்டில் முதன் முதலில் சந்தித்து மகிழ்ந்தேன்.

விசாகப்பட்டினத்தில் வசித்து வரும் திவாகர், தமிழின் சிறந்த வரலாற்றுப் புதின ஆசிரியர்களுள் ஒருவர். இவரின் வம்சதாரா, எஸ்.எம்.எஸ். எம்டன்  ஆகிய இரு வரலாற்றுப் புதினங்களைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அவை தரத்திலும் சுவையிலும் சிறந்து விளங்குகின்றன. http://vamsadhara.blogspot.com, http://aduththaveedu.blogspot.com ஆகிய இரு வலைப்பதிவுகளை நடத்தி வருகிறார். தமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும் என்ற தலைப்பில் செம்மொழி மாநாட்டில் கட்டுரை வாசித்தார்.


Photobucket

செல்வ முரளி, ஆமாச்சு ஆகியோருடன் நான்.

விசுவல் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செல்வ முரளி, இணையத்தள உருவாக்கம், வலையேற்றம் உள்ளிட்ட சேவைகளை அளித்து வருகிறார். அண்மையில் மேக் கணிமை வலையேற்றச் சேவையை இந்தியாவில் முதன் முறையாகத் தொடங்கினார். வி.எம். அறக்கட்டளை என்ற சேவை அமைப்பினையும் தொடங்கியுள்ளார். எனது வல்லமை மின்னிதழை வடிவமைத்து, வலையேற்றியவர் இவரே. வாழ்வில் எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்தாலும் பெரிய கனவுகளை உயிர்ப்புடன் கொண்டுள்ளார். தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, துணிவுடன் நடையிட்டு வருகிறார்.

Photobucket

ஆமாச்சு, உபுண்டு இயங்கு தளத்தினைத் தமிழில் நிலைநிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவர். கட்டற்ற மென்பொருட்களை நோக்கிப் பலரின் கவனத்தைத் திருப்புவதில் வெற்றி கண்டவர். கட்டற்ற மென்பொருட்கள் குறித்த தொடர் ஒன்றினை, தமிழ் சிஃபியில் எழுதியவர். இதற்கெனத் தனி இயக்கத்தினையே வளர்த்து வருகிறார். கட்டற்ற மென்பொருட்களின் பரவலுக்காக எல்.& டி. இன்ஃபோடெக் நிறுவனப் பணியினை உதறியவர். அண்மையில் தமக்கெனத் தனி நிறுவனத்தைத் தொடங்கி, திருமணம் புரிந்து, விரைவில் தந்தையாகப் பதவி உயர்வு பெறவுள்ளார். அவருக்கும் குட்டி ஆமாச்சுவுக்கும் முன்கூட்டியே வாழ்த்துகள்.

Photobucket
இராம.கி., ஆமாச்சு ஆகியோருடன் நான்.

செந்தமிழில் உரையாடி, நாளும் பொழுதும் புதுப் புதுக் கலைச் சொற்களை உருவாக்கி, தமிழுக்கு அணிகலன் ஆக்குபவர் இராம.கி. நல்ல தமிழில் எழுதுவதற்கு இவரின் http://www.valavu.blogspot.com என்ற வலைப்பதிவு, பலருக்கு உதவியாக உள்ளது. தமிழில் ஏற்படும் ஐயங்களைத் தீர்க்கப் பலரும் இவரையே நாடுகின்றனர். கையடக்கப் பேசிகளில் தமிழ் என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் தமிழில் கார்ட்டூன் பாத்திரங்கள் இல்லாமையை நான் எடுத்துரைத்த போது, ஆண்டிப் பண்டாரம் உள்ளது என உடனே எடுத்துக் காட்டினார்.

Photobucket

ரங்காவுடன் நான்.

தமிழின் மூத்த இதழாளர்களுள் ஒருவரான ரங்கா என்கிற ரங்கராஜன், பத்திரிகையாளர்களின் நலனுக்குத் தொடர்ந்து உழைத்து வருகிறார். இந்தியாவின் செல்வாக்கு மிக்க அதிகார மையங்களை எளிதில் அணுகக்கூடியவர். நிருபவர்கள் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றுபவர். சென்னை ஆன்லைன் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய இவர், இப்போது http://www.indianewsreel.com, http://www.chennailivenews.com, http://www.puducherrylivenews.com ஆகிய தளங்களை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

Photobucket

சத்யா என்ற சத்யநாராயணன் உடன் நான்.

நியூ ஹாரிசான் மீடியா என்ற நிறுவனத்தைப் பத்ரி சேஷாத்ரியுடன் இணைந்து தொடங்கியவர் சத்யா. இந்த நிறுவனத்தின் கீழ் தான் கிழக்குப் பதிப்பகம் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களும் இயங்கி வருகின்றன. குறுகிய காலத்தில் தமிழின் முதன்மையான பதிப்பகம் என்ற பெயரினைக் கிழக்கு தட்டிச் சென்றது.
சத்யாவின் தந்தை டாக்டர் எல்.வி.கிருஷ்ணன், அணுவாற்றல் துறையில் அணு உலை மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் பிரிவில் 39 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணியில் இருந்தபோது, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தை நிறுவும் பொறுப்பையும் அதன் பிறகு அம்மையத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் பதவியையும் ஏற்றவர்.

Photobucket

நாகராஜன் உடன் நான்.

என்.எச்.எம். எழுதியையும் என்.எச்.எம். எழுத்துரு மாற்றியையும் என்.எச்.எம். பட்டியலிடும் மென்பொருளையும் உருவாக்கியவர் நாகராஜன். என் இனிய நண்பர். தமிழுக்கு நவீன முகத்தை அளித்து வருபவர்களுள் முக்கியமானவர்.


Photobucket

சதக்கத்துல்லா உடன் நான்.

சிங்கப்பூரின் மீடியாகார்ப் நிறுவனத்தில் சதக் என்கிற சதக்கத்துல்லா, வானொலி-தொலைக்காட்சி இதழாளராகப் பணியாற்றுகிறார். விண் தொலைக்காட்சியில் அப்துல் ரகுமான் தலைமையில் கவிராத்திரி என்ற நிகழ்வில் பல ஆண்டுகளுக்கு முன் பங்கேற்றேன். அந்த நிகழ்வின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர் சதக்கத்துல்லா. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கோவையில் இவரைச் சந்தித்தேன்.

Photobucket

நா.கணேசன், சித்தார்த் ஆகியோருடன் நான்.

மென்பொருள் பொறியாளரான சித்தார்த், குவைத்தில் பணியாற்றுகிறார். சிறந்த படிப்பாளி - படைப்பாளி. மொழிபெயர்ப்புகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். நவீன இலக்கியத்துடன் சங்க இலக்கியத்தையும் இணைந்து கற்று, கற்பித்து வருகிறார். இவர், தன் மனைவி காயத்ரியுடன் இணைந்து, அணிலாடு முன்றில் (http://mundril.blogspot.com) என்ற கூட்டு வலைப்பதிவினை நடத்துகிறார். சங்க இலக்கியத்தின் செவ்வியல் தன்மையை மிக எளிமையாகவும் கூர்மையாகவும் இந்த வலைப்பதிவு எடுத்துரைக்கிறது. http://angumingum.wordpress.com என்ற வலைப்பதிவிலும் இவரின் சிந்தனைக் கீற்றுகளைப் பெறலாம்.