Monday, August 29, 2005

நாம் அமைப்பின் சார்பில் சுநாமி உதவிப் பணிகள்

Image hosted by Photobucket.com

கடந்த பிப்ரவரி மாதத்தின் ஒரு நாள், நண்பர் கவிஞர் பிரியம் தொலைபேசியில் அழைத்தார். நாம் என்ற சமூக சேவை அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும் அதன் சார்பில் சுநாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கவிருப்பதாகவும் கூறினார். என்னுடைய ஒத்துழைப்பை நாடிய அவர், சேகரித்த உதவிப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவேண்டும்; உதவிப் பொருட்கள் சிலவற்றை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உறுதியாக வருகிறேன் என்று தெரிவித்தேன். அதன்படியே சென்றேன்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரையோரம் உள்ள மூன்று பள்ளிகளில் கடல்நீர் உள்ளே புகுந்திருந்தது. அந்த நீர் எவ்வளவு உயரம் வரை தேங்கி நின்றது என்பதை அங்கிருந்த சுவர்கள் அடையாளமிட்டுக் காட்டின. அந்தப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதற்காகச் சிற்றுந்து வைத்துக்கொண்டு புறப்பட்டோம். ஏற்கெனவே நாங்கள் வருவதாக அந்தப் பள்ளிகளில் சொல்லி வைத்திருந்தார். எனவே மூன்று மணிநேரத்தில் கொண்டு சென்ற பொருட்களை வழங்கினோம்.


சீருடை அணிந்த மாணவர்கள், பெருத்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அங்கிருந்த மொத்த மாணவர்களையும் பார்க்கும்போது நாங்கள் கொண்டுசென்ற பொருட்கள் குறைவாகவே இருந்தன. எனவே ஆசிரியரிடம் கொடுத்து, மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். இத்தகைய பணியில் எனக்கும் பங்களித்த பிரியத்திற்கு நன்றி.

Saturday, August 27, 2005

என் பெற்றோருடன்1996இல் 'பூபாளம்' என்ற தலைப்பில் என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை அண்ணாநகரில் நடந்தது. அந்த விழா முடிந்த பிறகு, என் பெற்றோருடன் விழா மேடையில் எடுத்துக்கொண்ட படம், இது.

இடமிருந்து வலமாக: என் சித்தி மகன் பாலாஜி, என் அம்மா செளந்திரவல்லி, அப்பா குப்புசாமி, நான், என் மடியில் என் மூத்த அக்காள் மகள் காயத்ரி.

Friday, August 26, 2005

பத்து வயதில் நான்சென்னை அயன்புரத்தில் உள்ள பனந்தோப்பு ரயில்வே காலனி மழலையர் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது எடுத்த படம், இது. இந்தப் படத்தில் உள்ளவர்கள் யாரேனும் இதைக் காணுவார்களேயானால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.

இதில் நான் எங்கே இருக்கிறேன் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? தெரியாதவர்கள், இங்கே பாருங்கள்.

Thursday, August 25, 2005

கவிதை உறவில் முதல் பரிசுஏர்வாடி இராதாகிருஷ்ணன் 33 ஆண்டுகளாகக் கவிதை உறவு அமைப்பை நடத்தி வருகிறார். மாதம்தோறும் கவிஞர் ஒருவரின் தலைமையில் கவிதை இரவு என்ற பெயரில் கவியரங்கம் நடத்தி, கவிஞர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அளிப்பார். முதல் பரிசுக்குத் தேர்வுபெற்ற கவிதையை அவர் நடத்தும் கவிதை உறவு என்ற மாத இதழில் வெளியிடுவார்.

ஆண்டு முழுவதும் 12 மாதங்களில் எந்தக் கவிஞர் அதிகப் பரிசுகள் பெறுகிறாரோ அவருக்கு ஆண்டின் சிறந்த கவிஞர் என்ற முறையில் சிறப்புப் பரிசு அளிப்பார். அந்த வகையில் 1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராக நான் தேர்வுபெற்றேன். அந்தப் பரிசை, கவிதை உறவின் ஆண்டு விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி சம்பத்குமார் வழங்குகிறார். அருகில் ஏர்வாடியார், பாலசாண்டில்யன், விஜயகிருஷ்ணன், இளம்பாரி உ.கருணாகரன் ஆகியோர் உள்ளனர்.

பாரதியார் சங்கத்தில் முதல் பரிசுபொள்ளாச்சி நா. மகாலிங்கம் நடத்தும் பாரதியார் சங்கம், 1949இல் தொடங்கப்பெற்றது. பள்ளி நிலை முதல் கல்லூரி நிலை வரை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வருகிறார்கள். பெரும்பாலும் பாரதியின் பாடல்களிலிருந்து ஒரு வரியை அல்லது வாக்கியத்தைக் கொடுத்துப் பேசவோ, எழுதவோ தூண்டுவார்கள். 1995 & 1996 ஆம் ஆண்டுகளில் இந்தச் சங்கம் நடத்திய உடனடிக் கவிதைப் போட்டிகளில் நான் கலந்துகொண்டேன்.

முதலாண்டு மண்ணில் தெரியுது வானம் என்றும் இரண்டாம் ஆண்டு என்னைக் கவர்ந்த எழில் என்றும் தலைப்பு அளித்தார்கள். தலைப்பை அறிவித்த அரை மணி நேரத்தில் கவிதை எழுதவேண்டும். இதுதான் நிபந்தனை. இந்தத் தலைப்பில் கவிதை எழுதி, இரண்டு ஆண்டுகளும் முதல் பரிசு பெற்றேன். ஏ.வி.எம். அறக்கட்டளைப் பரிசு உள்பட முதலாண்டு பணப் பரிசிலும் நல்ல அளவில் இருந்தது.

இந்தப் படம், 1996ஆம் ஆண்டு நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் வென்ற மாணவர்கள், நா. மகாலிங்கம், மூத்த வழக்கறிஞர் காந்தி உள்ளிட்டவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படம். இதில் பாரதியின் முண்டாசுக்கு முன்னால் மீசையில்லாமல் நான் இருக்கிறேன்.

Wednesday, August 24, 2005

மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன்பத்தாண்டுகளுக்கும் மேல் எனக்கு இவரோடு தொடர்பு உண்டு. என் நண்பர் சந்திரஹாசன், இவர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரைச் சந்திக்கச் செல்லும்போது இவருடன் தொடர்பு ஏற்பட்டது. என் படைப்புகளையும் திறமையையும் மதித்தவர். பல நல்ல தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர்.

அவர் நடத்தி வரும் காந்தளகம் பதிப்பகத்தின் வரலாற்றை என்னைக் கொண்டு எழுதி வாங்கி, 'காந்தளகம் - 20 ஆண்டுகள்' என்ற தலைப்பில் நூலாக்கியவர். அதற்குப் பிறகு அவர் அம்மா தங்கம்மா கணபதிப்பிள்ளை அவர்களுடன் உரையாடி, அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதித் தருமாறு கேட்டார். அதையும் 'தகத்தகாய தங்கம்மா' என்ற தலைப்பில் நூலாக்கினார். நாங்கள் இருவரும் இணைந்து வில்ஹெம் கெய்கரின் மகாவம்சம் தொடர்பான நூலின் நீண்ட முன்னுரையை, 'சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தோம்.

சச்சியின் அம்மா, மிகுந்த கனிவுடன் என்னுடன் பழகினார். இப்போது 84 வயதாகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த இந்தப் படத்தில் என் மீது மிகுந்த அன்புகொண்ட இருவர் இருக்கிறார்கள். மூன்றாமவர், அன்று தற்செயலாக சச்சியின் வீட்டுக்கு வந்தவர். பேராசிரியர் என்று நினைவு. பெயர் நினைவில்லை. புகைப்படம் எடுத்த அன்று, அங்கு மூன்று இருக்கைகள் இருந்தன. நான் இன்னோர் இருக்கையை எடுத்து வர நினைக்கையில், 'பரவாயில்லை. என் இருக்கையிலேயே நீங்களும் அமருங்கள்' என இடம் கொடுத்தார், சச்சி.

திருப்பூர் கிருஷ்ணனுடன்ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு. என் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன், மயிலையில் நடந்த ஒரு கூட்டத்திற்குத் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். நான் என் நண்பர் ஹாஜா கனியுடன் சென்றிருந்தேன். நண்பர் கையில் புகைப்படக் கருவி இருந்தது. அதை அங்கிருந்த ஒருவரிடம் கொடுத்து எடுக்கச் சொன்னோம்.

இந்தப் படத்தில் இடமிருந்து வலமாக: திருப்பூர் கிருஷ்ணனின் மனைவி ஜானகி, திருப்பூர் கிருஷ்ணன், அண்ணாகண்ணன், ஹாஜா கனி, முன்னால் நிற்பவர், திருப்பூர் கிருஷ்ணன் - ஜானகி தம்பதியரின் ஒரே மகன், அரவிந்தன்.

அரவிந்தத் தத்துவத்தில் தோய்ந்து, அரவிந்த அமுதம் என்ற நூலை எழுதிய திருப்பூரார், தன் மகனுக்கு அரவிந்தன் என்றே பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோபுலுவுடன்அமுதசுரபி தீபாவளி மலருக்காக 2003 செப்டம்பர் / அக்டோபரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோபுலு வீட்டிற்குச் சென்றோம். ஏ.வி.எஸ். ராஜா, சந்திரமெளலி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். அவரை நேர்காண வேண்டும் என்று மட்டும் சொல்லி, சந்திரமெளலியை நேர்காணப் பணித்தோம். என்ன கருவில் நேர்காணல் அமையலாம் எனக் கேட்டபோது, 'என் தீபாவளி நினைவுகள்' என்ற தலைப்பினை அளித்தேன். 'நல்ல தேர்வு' எனக் கோபுலு பாராட்டினார். நேர்காணலைச் சந்திரமெளலியிடமும் புகைப்படங்கள் எடுக்கும் பணியை உத்ராவிடமும் ஒப்படைத்துவிட்டு வந்தோம். அன்றுதான் நான் கோபுலுவை முதன்முதலில் சந்தித்தேன்.

கோபுலு அப்போதும் வலது கைச் சுணக்கத்தோடே இருந்தார். இடக்கையால் அரிதாகவே ஓவியங்கள் தீட்டினார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டதற்கு இணங்க, ஒரு கேலிச் சித்திரத்தை அடுத்த வாரத்தில் வரைந்து கொடுத்தார். அந்த நேர்காணலும் சிறப்பாகவே அமைந்தது. இந்தப் படத்தை எடுத்தவர், உத்ரா.

Tuesday, August 23, 2005

சுரதாவுடன்உவமைக் கவிஞர் என்ற பட்டத்துடன் குழந்தையைப் போல் மனத்தில் பட்டதைப் பேசக் கூடியவர் சுரதா. அவருடைய தன்முனைப்பு மிக்க பேச்சுகள், மிகவும் சுவையானவை.

'ஒரு விழாவுக்குப் போகிறாயா? புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடம் உன் முகவரி அட்டையைக் கொடு. அதில் உன் புகைப்படத்தை அச்சிடு. முடிந்தால் உன் கவிதையை நகல் எடுத்து அனைவருக்கும் கொடு. உனக்கு எவரும் பட்டம் சூட்டவில்லையா? கவலையை விடு. உனக்குப் பிடித்த மாதிரி நீயே ஒரு பட்டத்தைச் சூட்டிக்கொள். உன் கவிதையை உன் வீட்டில் கல்வெட்டாய்ப் பொறி. உன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளக் கூச்சப்படாதே. விளம்பரம் உள்ளதே பிழைக்கும். சிரிக்கும்போது கீழ்வரிசைப் பற்களைவிட மேல்வரிசைப் பற்களே வெளியில் தெரிகின்றன. மேல்வரிசைப் பற்களைப் போல் உன்னை விளம்பரப்படுத்திக் கொள்' என்று அவர் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

1995 என்று நினைவு. உ.வே.சா. பற்றிய ஒரு கவியரங்கில் நான் 20 வெண்பாக்கள் வாசித்தேன். அக்கவிதையைப் பாராட்டி, எனக்கு ஒரு ரூபாய் பரிசளித்தார். 'வெறுமனே பாராட்டாதீர்கள்; ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டுங்கள்' என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.

முன்னரே பார்த்திருந்தாலும் பேசியிருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்துவிடுவார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் 'நீங்க யாரு?' என்பார். பிறகு ஒரு முறை பார்த்தபோது, 'நீங்க நல்லா இருக்கீங்க. நடிக்கப் போகலாமே' என்றார்.

மேற்கண்ட புகைப்படம், சென்னை அண்ணாநகரில் எடுக்கப்பெற்றது. 1995இல் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் கின்னஸ் சாதனைக்காக நடந்த 48 மணிநேரத் தொடர்க் கவியரங்கில் பங்கேற்றதற்காகச் சுரதா எனக்குச் சான்றிதழ் வழங்குகிறார்.

ரொம்ப குழம்பவேண்டாம். கவியரங்கம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கவியரங்கத் தலைவரும் கவிஞர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள். முதலில் கவி பாடியவர், மேலும் கவிதைகள் வைத்திருந்தால், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு ஓரிரண்டு சுற்றுகள் முடிந்தபிறகு மீண்டும் கவி பாடலாம்.

கின்னஸ் முயற்சி என அறிவிக்கப்பட்ட போதிலும் இதைக் கின்னஸ் ஏற்கவில்லை. இதில் பங்கேற்றதற்காகத்தான் சுரதா சான்றிதழ் வழங்கினார். உடன் சிரித்துக்கொண்டு இருப்பவர், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி இராஜதேவன்.

பாலகுமாரனுடன்புகழ்மிகு புதின ஆசிரியர் பாலகுமாரன், சென்னை மயிலாப்பூரில் வி.எம். தெருவில் முன்பு இருந்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் நண்பர் - கவிஞர் ஹாஜா கனியுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். முதலில் கவிதைகளும் எழுதிய அவர், பின்னர் கதைகள் மட்டுமே எழுதினார். நாங்கள் சென்றபோது அவர், கவிதை குறித்து எதிர்மறைக் கருத்துகளைக் கொண்டிருந்தார். 'கவிதை எழுதாதீங்க; கதை எழுதிப் பாருங்க' என்றார். என் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்தபோதும் வரவில்லை. சில மாதங்களுக்கு முன் ஒருமுறை அவராகவே தொலைபேசியில் அழைத்தார். ' அமுதசுரபியில் வரும் விவாதங்கள், சிறப்பாக இருக்கின்றன' என்று பாராட்டினார்.

அறிவுமதியுடன்கவிஞரும் பாடலாசிரியரும் பெரியாரியவாதியுமான அறிவுமதியின் அலுவலகம், நெடுங்காலமாகச் சென்னை தியாகராய நகரில் உள்ளது. அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் அவர் அலுவலகத்தைத் தொட்டுச் செல்வது வழக்கம். கொள்கைப் பிடிப்போடும் தமிழ் மரபு சார்ந்தவற்றில் பெருத்த ஈடுபாடும் கொண்ட அவர், இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் இருப்பவர். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் அவர் அலுவலகத்தில் எடுத்த படம், இது. படம் எடுத்தவர் பெயர் நினைவில்லை.

Monday, August 22, 2005

தாடிக்கு ஒரு நினைவுச் சின்னம்

'எதற்காகத் தாடி வளர்க்கிறீர்கள்?', 'மிகவும் சோகமான தோற்றத்தைத் தருகிறது', 'இது நல்லாவே இல்லை'.. எனப் பல விமர்சனங்களைத் தாண்டி இரண்டு மாதங்களுக்கு மேல் தாடி வளர்த்தேன். இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

பார்ப்பவர் எல்லாரும், 'அண்ணாகண்ணன் என்ற பெயரைப் படித்ததும் வயதானவராக இருப்பார் என்று நினைத்தோம். ரொம்ப சின்னவராக இருக்கிறீர்கள்' என்றார்கள். சரி, வயதைக் கொஞ்சம் கூட்டிக் காட்டலாம் என்று தாடி வளர்க்கத் தொடங்கினேன்.

நண்பர்கள், வீட்டார், அலுவலகத்தினர் என எல்லோரும் ஒருமித்த குரலில் தாடிக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவே, எடுக்கத் தீர்மானித்தேன். அடுத்த நாள் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவுடன் நினைவுச் சின்னமாக இருக்கட்டும் என்று நண்பரைக் கூப்பிட்டுப் படம் எடுக்கச் சொன்னேன். படம் எடுத்த அடுத்த நாள், இந்தத் தாடியைச் சவரக் கலைஞருக்குத் தானமாய்க் கொடுத்தேன்.


தாடிக்கு ஒரு நினைவுச் சின்னம் / 2005 / படம் எடுத்தவர் : கிளிக் ரவி

அமுதசுரபி அலுவலகத்தில் தாடியுடன்அமுதசுரபி அலுவலகத்தில் தாடியுடன் / 2005 / படம் எடுத்தவர் : கிளிக் ரவி

குறுந்தாடியுடன்குறுந்தாடியுடன் / 2004 / சென்னை, கோனிகா படநிலையத்தில் எடுத்தது.

Sunday, August 21, 2005

ஊட்டியில் - 3ஊட்டியில் - 3 / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்

ஊட்டியில் - 2ஊட்டியில் - 2 / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்

ஊட்டியில் - 1ஊட்டியில் - 1 / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்

கொடைக்கானலில் ஒரு சிறுகுன்றின் சாரலில் - 2கொடைக்கானலில் ஒரு சிறுகுன்றின் சாரலில் - 2 / அண்மைக் காட்சி / 2003 / வழிப்போக்கர் ஒருவர் எடுத்தது.

கொடைக்கானலில் ஒரு சிறுகுன்றின் சாரலில் -1கொடைக்கானலில் ஒரு சிறுகுன்றின் சாரலில் - 1 / 2003 / வழிப்போக்கர் ஒருவர் எடுத்தது.

பைக்காரா அருவி அருகில் - 3பைக்காரா அருவி அருகில் - 3 / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்

பைக்காரா அருவி அருகில் - 2பைக்காரா அருவி அருகில் - 2 / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்

பைக்காரா அருவி அருகில் - 1பைக்காரா அருவி அருகில் - 1 / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில்


ஊட்டி தாவரவியல் பூங்காவில் / 2003 / படம் எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்