Tuesday, August 23, 2005
சுரதாவுடன்
உவமைக் கவிஞர் என்ற பட்டத்துடன் குழந்தையைப் போல் மனத்தில் பட்டதைப் பேசக் கூடியவர் சுரதா. அவருடைய தன்முனைப்பு மிக்க பேச்சுகள், மிகவும் சுவையானவை.
'ஒரு விழாவுக்குப் போகிறாயா? புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடம் உன் முகவரி அட்டையைக் கொடு. அதில் உன் புகைப்படத்தை அச்சிடு. முடிந்தால் உன் கவிதையை நகல் எடுத்து அனைவருக்கும் கொடு. உனக்கு எவரும் பட்டம் சூட்டவில்லையா? கவலையை விடு. உனக்குப் பிடித்த மாதிரி நீயே ஒரு பட்டத்தைச் சூட்டிக்கொள். உன் கவிதையை உன் வீட்டில் கல்வெட்டாய்ப் பொறி. உன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளக் கூச்சப்படாதே. விளம்பரம் உள்ளதே பிழைக்கும். சிரிக்கும்போது கீழ்வரிசைப் பற்களைவிட மேல்வரிசைப் பற்களே வெளியில் தெரிகின்றன. மேல்வரிசைப் பற்களைப் போல் உன்னை விளம்பரப்படுத்திக் கொள்' என்று அவர் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
1995 என்று நினைவு. உ.வே.சா. பற்றிய ஒரு கவியரங்கில் நான் 20 வெண்பாக்கள் வாசித்தேன். அக்கவிதையைப் பாராட்டி, எனக்கு ஒரு ரூபாய் பரிசளித்தார். 'வெறுமனே பாராட்டாதீர்கள்; ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டுங்கள்' என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.
முன்னரே பார்த்திருந்தாலும் பேசியிருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்துவிடுவார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் 'நீங்க யாரு?' என்பார். பிறகு ஒரு முறை பார்த்தபோது, 'நீங்க நல்லா இருக்கீங்க. நடிக்கப் போகலாமே' என்றார்.
மேற்கண்ட புகைப்படம், சென்னை அண்ணாநகரில் எடுக்கப்பெற்றது. 1995இல் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் கின்னஸ் சாதனைக்காக நடந்த 48 மணிநேரத் தொடர்க் கவியரங்கில் பங்கேற்றதற்காகச் சுரதா எனக்குச் சான்றிதழ் வழங்குகிறார்.
ரொம்ப குழம்பவேண்டாம். கவியரங்கம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கவியரங்கத் தலைவரும் கவிஞர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள். முதலில் கவி பாடியவர், மேலும் கவிதைகள் வைத்திருந்தால், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு ஓரிரண்டு சுற்றுகள் முடிந்தபிறகு மீண்டும் கவி பாடலாம்.
கின்னஸ் முயற்சி என அறிவிக்கப்பட்ட போதிலும் இதைக் கின்னஸ் ஏற்கவில்லை. இதில் பங்கேற்றதற்காகத்தான் சுரதா சான்றிதழ் வழங்கினார். உடன் சிரித்துக்கொண்டு இருப்பவர், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி இராஜதேவன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment