Saturday, October 02, 2010

எனது முதல் கடற்பயணம்

 

வங்காள விரிகுடாவில் சுமார் இரண்டரை மணி நேரம் வலம் வரும் வாய்ப்பு, 2010 ஜூ்லை 16 அன்று கிட்டியது. இதுவே கடலில் நான் மேற்கொண்ட முதல் பயணம். தமிழ்ப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் சார்பில் கடலியல் வல்லுநரான ஒரிசா பாலு (பாலசுப்பிரமணியம் B+), இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். 'நெய்தலோடு ஒரு பொழுது' என்பது, இந்தப் பயணத்திற்கு அவர் சூட்டிய பெயர்.சென்னைத் துறைமுகத்திற்குக் காலை 6 மணி அளவில் சென்று சேர்ந்தேன். என்னுடன் செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனத்தில் பணிபுரியும் சுபாஷினி, அருணா, தேவி, அன்புச்செல்வன் உள்ளிட்டோரும் பயணிக்க வந்திருந்தனர். நுழைவாயிலில் ஒவ்வொருவரையும் தனித் தனியாகப் படம் எடுத்து, அடையாள அட்டை அளித்தனர்.பிரமாண்டமான இரும்புக் கப்பல்கள், பெரிய பெரிய பொதிப் பெட்டிகள், அவற்றைக் கையாளும் மின்தூக்கிகள் எனத் துறைமுகம் கம்பீரமாக இருந்தது. பாரதியார், சுந்தரனார், கோவூர் கிழார்... உள்ளிட்ட தமிழ்க் கவிஞர்கள் பெயர்களில் பல கப்பல்கள் நின்றிருந்தன. இவை பூம்புகார் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. அங்கு, ஒரு கப்பல் சிதிலமடைந்து, துருப்பிடித்து காட்சி அளித்தது. கனத்த சங்கிலியால் கரையுடன் பிணைத்திருந்தார்கள். இதன் மதிப்பைவிட, இதை உடைத்து எடுப்பதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால் அப்படியே விட்டுவிட்டார்கள் என அறிந்தேன். துறைமுகத்தில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.மாகோபோலா என்ற நவீன எந்திரப் படகு, எங்களுக்காகக் காத்திருந்தது. வெள்ளியலைகளின் மீது வெண்ணிறப் பறவையாய் வீற்றிருந்தது. மனோஜ் சாக்கோ என்பவர், படகு உரிமையாளர். சுமார் 40 இலட்சம் மதிப்புள்ள இந்தப் படகு, சிறிய கடல் பயணத்திற்கும் மீன் பிடிப்பதற்கும் இதர கடலியல் ஆய்வுகளுக்கும்  பயன்பட்டு வருகிறது. மீன்பிடி விளையாட்டு்கள், கடல் சுற்றுலா ஆகியவற்றுக்கும் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.மேற்கத்திய தொழில்நுட்பத்துடன் இலங்கையில் உருப்பெற்ற இந்தப் படகு, பல வசதிகளைக் கொண்டது.  இதில் 60 குதிரைத் திறன் கொண்ட இரட்டைப் பொறிகள் (எஞ்சின்) உண்டு. இப்படகு, 25 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இடங்காட்டிக் கருவி (ஜிபிஎஸ்)யும் அங்கிருந்தது. படகிற்கு உள்ளேயே கழிவறையும் உண்டு.புதியவர்களான எங்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீரில் மிதக்கும் மேலுடையினை அளித்தனர். செந்நிறத்திலான அந்த உடுப்பு, கண்ணைக் கவர்ந்தது.சுமார் 7 மணி அளவில் எங்கள் கடற்பயணம் தொடங்கியது. சுரேஷ் என்பவர், படகினைச் செலுத்தினார். மனோஜ் சாக்கோ, வழிகாட்டினார். கதிரவன் மெல்ல மேலே ஏறத் தொடங்கினான். இலேசான உப்புக் காற்று வீசியது. படகு அசைந்தபடி வேகம் எடுத்தது.படகு எந்த வேகத்தி்ல், எந்தத் திசையில் செல்கிறது, கரையிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது, அது செல்லும் இடத்தில் உள்ள ஆழம் எவ்வளவு, அங்கு மீன்களின் அடர்த்தி எவ்வாறு உள்ளது... உள்ளிட்ட விவரங்களைப் படகில் இருந்த திரை காட்டியது.படகின் கனத்தைச் சமநிலையில் வைத்திருக்கும் பொருட்டு, நாங்கள் அதன் இரு புறமும் பிரிந்து அமர்ந்தோம். அலைகளில் ஏறி இறங்கிப் படகு விரைந்தது. சில நேரங்களில் எங்களைவிட அலை உயரத்தில் இருந்தது. வேறு சில நேரங்களில் அலைகளை விட நாங்கள் உயரத்தில் இருந்தோம். கடலுடனான அந்த விளையாட்டு, எனக்குப் பிடித்திருந்தது.
  அந்த ஆட்டம், மிக இனிது. கடல் அன்னை தாலாட்டுகிறாள் என்ற கற்பனை சுவையானது. படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த எங்கள் மீது பல நேரங்களில் நீர்த்துளிகள் தெறித்தன. சிறிய துளிகளும் உண்டு. ஆடையை நனைக்கும் வண்ணம் பெரிய துளிகளும் உண்டு. அங்கிருந்த நண்பர், கடல் நம்மை ஆசீர்வதிக்கிறது என்றார்.படகு, நீரைக் கீறிக்கொண்டு விரைந்தது. அது ஓர் அழகிய ஓவியமாக விரிந்தது.படகின் பின்புறத்தில் எந்திரத் தூண்டில்களைப் பொருத்தினார்கள். வலுவான அந்தத் தூண்டில்களில் நீண்ட நைலான் நூல் இருந்தது. தொலைவில் உள்ள மீனையும் பிடிக்க வல்லது. ஆனால், காலை ஏழரை, எட்டு மணியளவில் சூரியன் நல்ல உயரத்திற்கு எழுந்துவிட்டான். எனவே வெளிச்சமும் வெப்பமும் அதிகமிருந்ததால் மீன்கள் ஆழத்திற்குச் சென்றுவி்ட்டன என்றார்கள். எங்கள் பயணத்தி்ல் எந்த மீனும் சிக்கவி்ல்லை. அப்படியே ஏதும் மீன் சிக்கினால் அதை மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவோம் என மனோஜ் கூறினார். எங்களுக்கு மீன்பிடிப்பது, பொழுதுபோக்குதானே தவிர, அதைக் கொல்வது நோக்கமில்லை என்றார்.

 மனோஜ் உடன் நான்


கரையிலிருந்து விலகி, கடலில் சில மைல்கள் தொலைவுக்கு வந்தோம். சென்னைப் பட்டினத்தின் தோற்றம் அழகாக விரிந்தது. திருவொற்றியூர், எண்ணூர், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம் எனச் சில பகுதிகளைக் கண்டு மகிழ்ந்தோம். இது வரை கரையிலிருந்து கடலைப் பார்த்திருப்பீர்கள். இப்போது கடலிலிருந்து கரையைப் பார்க்கிறீர்கள் என்றார் ஒரிசா பாலு. திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையம், சென்னைப் பல்கலைக்கழகம்... உள்ளிட்ட பலவற்றை நன்கு பார்க்க முடிந்தது.


கடலுள் மூழ்கிய ஒரு கப்பலின் எச்சம்

ஒரிசா பாலு, பல விவரங்களைத் தெரிவித்தபடி வந்தார். நம் கடல் வளத்தை, தமிழர்களின் கடலியல் ஆற்றலை, நுணுக்கங்களைச் சிறு சிறு செய்திகளாகத் தெரிவித்தார். அவர் குறுஞ்செய்திகள் வாயிலாகவும் கடலியல் தகவல்களைப் பரப்பி வருகிறார். அவர் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று:

இந்தியா, 5560 கி.மீ. கடற்கரையைக் கொண்டுள்ளது (தீவுகள் அல்லாமல்). நம்மிடம் 11 பெரிய துறைமுகங்களும் 168 நடுத்தர - சிறிய துறைமுகங்களும் உண்டு. இந்த 11 துறைமுகங்களில் 3, தமிழ்நாட்டில் உள்ளன. அவை, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி.


ஒரிசா பாலுவுடன் நான்

காலையில் படகில் ஏறுவதற்கு முன் ஒரு கோப்பை நீரைப் பருகியிருந்தேன். கடலுக்குள் சென்ற சிறிது நேரத்தி்ல் எனக்குக் குமட்டல் ஏற்பட்டது. குடித்த நீரைக் கக்கிய பிறகே வயிறு அமைதி கொண்டது. இனி மேல் புதிதாகப் பயணிப்போர், நீரைத் தவிர்ப்பது நல்லது.


படகு ஓட்டுநர் சுரேஷ், படகு உரிமையாளர் மனோஜ்

படகினைச் சுரேஷ் எப்படி ஓட்டுகிறார் எனக் கவனித்தேன். என் ஆர்வத்தைப் பார்த்த அவரும் மனோஜூம் 'நீங்களும் ஓட்டிப் பாருங்கள்' என வாய்ப்பளித்தனர். சில நிமிடங்கள், அந்த இருக்கையில் அமர்ந்து இயக்கினேன். படகின் திசையைத் திருப்பிப் பார்த்தேன். அலைகளின் வேகத்திற்கும் காற்றின் வேகத்திற்கும் திசைக்கும் ஏற்ப, படகினைச் செலுத்துவது, சவாலான பணி. பிறகு, படகினை மீண்டும் சுரேஷிடமே ஒப்படைத்தேன்.


ஓட்டுநர் இருக்கையில் நான்

என் உடன் வந்த செம்மொழி நிறுவன நண்பர்கள் பலரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள். சுவாரசியமாக உரையாடியபடி வந்தனர்.

சுமார் இரண்டரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கரைக்குத் திரும்பினோம்.
 

 கரையோரத்தில் மீன் குஞ்சுகள் பலவும் சாரை சாரையாக நீந்தும் காட்சி, சூரிய ஒளியில் கண்ணுக்கு விருந்தளித்தது.கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் (Royal Madras Yacht Club) அரங்கில் அமர்ந்து தேனீரும் நொறுக்குத் தீனியும் உட்கொண்டோம்.
 


 மீனவர் சேகருடன் மீன்பிடி அனுபவங்களைக் கேட்டறிந்தோம். மகிழ்ச்சியுடன் மீண்டும் அங்கு வர வேண்டும் என்ற ஆர்வத்துடன் விடைபெற்றோம்.

9 comments:

creasen said...

படங்களும் பத்திகளும் பயணமும் மிக அருமை அண்ணா....

creasen said...

படங்களும் பத்திகளும் பயணமும் மிக அருமை அண்ணா....

vaiyavan said...

Migavum suvaiyana Anubhavam. Nalla Pugaippadangal. Ithagaiya Anubhavangalai Adikkadi petru padameduthu padhivu seyyungal. Nal vazhthukkal

Albert Fernando said...

அண்ணா கண்ணன் கடற்பயணம் போவதா சொல்லவே இல்லை:-))

இனிது இனிது கடற்பயணம் இனிது. இது ஒரு சுகானுபவம் என்பது
பயணித்தால் மட்டுமே உணரமுடியுமான ஒன்று!

நானும்
அமெரிக்காவின் மிகப்பெரும் விரிந்து பரந்த கடற்போன்ற‌
மிச்சிகன் லேக்(விச்கான்சின்,மின்னசோட்டா,இல்லினாய்சு,இண்டியானா,மிச்சிகன் என ஐந்து மாநிலங்கள் தொட்டுப்படர்ந்து க‌ன‌டாவிலும் சில‌ மாநில‌ங்க‌ளில் ப‌ர‌வி விரிந்துள்ள‌ க‌ட‌லேரி இது...
...:-))
ச‌மீப‌த்தில் சென்றேன். என‌து அமெரிக்க‌ ந‌ண்ப‌ர் பேரா.பால் அவ‌ர்க‌ளின் சொந்த‌ப்ப‌ட‌கு
வீட்டில் இரு தின‌ங்க‌ள் குடும்ப‌ ச‌கித‌மாக‌ச் சென்றுவ‌ந்தோம். ப‌ட‌கில் இரு ப‌டுக்கைய‌றை இரு
க‌ழிவறை, குளிய‌ல‌றை,ச‌மைய‌ல‌றை உண‌வுக்கூட‌ம் என்ற பெரிய‌ ப‌ட‌கு வீடு இது!
மிக‌வும் இனிமையான அன்ப‌வ‌ங்க‌ள் இவை!

க‌டற்ப‌ய‌ண‌த்தில் உங்க‌ளின் 2 1/2மணி நேர‌ அனுப‌வ‌ங்களை இன்னும் ப‌கிர்வீர்க‌ள்
என்று ந‌ம்புகிறேன்.
மிக்க‌ அன்புட‌ன்,
ஆல்ப‌ர்ட்,
அமெரிக்கா.

முனைவர் மு.இளங்கோவன் said...

என்னை விட்டுவிட்டுப் போன அண்ணா,
படத்தோடு வந்தமைக்கு நன்றி.
வாழ்த்துகளுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி

'Suvaiarasi' SHANTHI VIJAYAKRISHNAN said...

anna kannan's trip is very interesting and more so the writeup. We will go and enjoy and respect the sea.

Dr.Priya's Siddha Medicine said...

next time visit andamans and present a write up all the best
priya

Dr.Priya's Siddha Medicine said...

hi anna,
next time visit andamans and present a write up
priya

prinatgi said...

Respected sir,

It is very interesting to see all the photos and your writ up.

Your narration made me to feel that I should also take a trip like you.

V Nataraja.
Cell 9962567791.