Sunday, August 20, 2006

மின்விளக்கில் கண்விழிக்கும் படைவீட்டம்மன்

சென்னை, பாடியில் உள்ள அருள்மிகு படைவீட்டம்மன் (படவட்டம்மன்) திருக்கோயிலின் வாயிலில் மின்விளக்குகளால் அழகிய அம்மனை வரைந்திருந்தார்கள். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன். இருட் பின்னணியில் இந்த ஒளிக்கோலம் கண்ணைக் கவர்ந்தது.செல்பேசியை எடுத்தேன். சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து ஒரு படம் எடுத்தேன். தொலைவு அதிகமாய் இருந்ததால் படம் தெளிவாக விழவில்லை.எனவே அம்மன் காலடிக்கே வந்து படம் பிடித்தேன். அந்தக் கோயிலின் 25ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, இந்த அலங்காரம் செய்திருந்தார்கள்.சாலையோரம் உள்ள சிறிய கோயில் என்றாலும் இங்கு மக்கள் கூட்டம் அதிகம்; சிறப்பு நாட்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் அளவுக்குக் கூட்டம் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


இந்தக் கோயிலின் வாசலில் ஒரு பேருந்து நிறுத்தமும் உள்ளதால் கோயிலுக்கு வரும் கூட்டமும் பேருந்துக்கு நிற்கும் கூட்டமும் கலந்து எப்போதும் ஜேஜே என்றுதான் இருக்கும்.

படங்களை எடுத்த 2 மணி நேரத்தில் அவற்றை வலையேற்றிவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.

8 comments:

வல்லிசிம்ஹன் said...

கண்ணன், அம்மா அழகாக
ஒளியிடுகிறார்.

நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய அண்ணாகண்ணன்,

நீங்களுமா படவட்டம்மன் என்று எழுதுவீர்கள்? அது படைவீட்டு அம்மன். அந்த இடம் பாடி. அதாவது ஒரு cantonment; படைகள் தங்கியிருக்கும் இடம். அவர்கள் குடும்பத்தினரும் அங்கு குடியிருப்பார்கள். ஒவ்வொரு படைக்கும் ஒரு படை வீடும், அதில் ஒரு அம்மனும், அந்த அம்மனை விளிப்பது போல ஒரு பதாகை முழக்கமும் இருக்கும்.

இந்தப் படைவீடு பல்லவர் காலத்தது. இந்தப் படைவீடு, அருகில் உள்ள திருவலிதாயம் (அருமையான சிவன் கோயில்; சம்பந்தர் பாடியது) சிவன் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். அங்கு இதைப் பற்றிய கல்வெட்டும் இருக்கிறது.

பாடிகளும், பாளையங்களும் (அவை படைகள் தண்டுகொண்டு இருக்கும் இடங்கள்) நம்மூரின் அரண (army)வரலாற்றைக் கூறும் இடங்கள். வரலாறுகளைத் தொலைத்து மோனிகளாகப் பல இடங்கள் இருக்கின்றன.

படம் நன்றாக இருந்தது; கூடவே ஊர்ச் செய்திகளையும் சேர்த்துச் சொல்லுங்கள். படவட்டம்மன் என்ற கொச்சைவழக்கை மாற்றுவோம்.

அன்புடன்,
இராம.கி.

(துபாய்) ராஜா said...

தெரிந்த கோயில்.தெரியாத செய்தி.

புகைப்படங்கள் இணைத்தமைக்கு அண்ணாகண்ணனுக்கும்,விளக்கமளித்த இராம.கி.க்கும் வாழ்த்துக்கள்.

அமுதன் said...

திருவலிதாயம் அருமையான சிவன் கோயில். எல்லோரும் போய் வர வேண்டும். அழகான கோயில் அது.

கீதா சாம்பசிவம் said...

இராம.கி. சொல்லும் தகவல்களை நானும் திருவலிதாயக் கோயிலில் சொல்லிக் கேட்டிருக்கிறேன். மற்றபடி நீங்கள் கொடுத்திருக்கும் செய்தியும், படமும் நன்றாக உள்ளது. ஜனனியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? "அமுதசுரபி"யில் அவள் முதல் கவிதை வந்தது. ஜனனியின் அத்தை நான்.

அண்ணாகண்ணன் said...

கோயிலின் வாயிலில் படவட்டம்மன் என்று எழுதியிருந்ததாலும் மக்கள் அவ்வாறு அழைப்பதாலும் நானும் அப்படியே எழுதினேன். இந்தக் கோயிலின் உள்ளேகூட இதுவரை நான் போனதில்லை. வாகனத்தில் போகும்போது, போக்குவரத்து நெரிசலில் நிற்கும் போது திரும்பிப் பார்த்ததோடு சரி.

இராம.கி சொல்லுவது ஏற்கும்படி உள்ளதால் பெயரை மாற்றிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றி. அவர் குறிப்பிடும் திருவலிதாயம் ஆலயத்திற்குச் சென்று பார்க்க விருப்பம். வழிபட அன்று; வரலாறு அறிய. அது, எங்கே இருக்கிறது?

கீதா சாம்பசிவம், ஜனனியை நன்றாக நினைவிருக்கிறது. இப்போது 12ஆம் வகுப்பு என்று நினைக்கிறேன். அவர் கவிதையை அவரின் புகைப்படத்துடன் நான் அமுதசுரபியில் வெளியிட்டேன். அசோகமித்திரன், ஜனனியை அறிமுகப்படுத்திக் கடிதம் எழுதியிருந்தார். ஜனனி, பத்திரிகையாளராக விரும்புவதாகச் சொன்னார். தொடர்ந்து எழுதச் சொல்லுங்கள்.

கீதா சாம்பசிவம் said...

ஜனனி தற்சமயம் எம்.ஓ.பி.வைஷ்ணவாக் கல்லூரியில் இதழியல் படிப்பில் சேர்ந்திருக்கிறாள். தங்கள் வாழ்த்தை அவளிடம் தெரிவிக்கிறேன். நன்றி.

கீதா சாம்பசிவம் said...

அம்மன் கோயிலுக்கு எதிரேயே ஒரு ரோடு போகிறது. அதன் நுழைவிலேயே திருவலிதாயம் போகும் வழி என எழுதி இருக்கும். சற்றுத் தூரத்திலேயே கோவில் வந்து விடும். தெருவிலேயே நேரே போனால் வலது பக்கம். தேடவேண்டிய அவசியம் இருக்காது.