
8.6.2006 அன்று எம் அழைப்பின் பேரில் சிஃபி அலுவலகத்திற்கு வந்த பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் இல.கணேசன், ஆங்கிலத்தில் அமைந்த அரட்டையில் பங்கேற்று சுமார் 70 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரத்தில் விறுவிறுப்பாகப் பதில் அளித்தார்.

இல.கணேசனின் எளிமையும் ஆற்றொழுக்கான பேச்சாற்றலும் தனி மனிதப் பண்பும் பலரும் அறிந்தது. இந்த அரட்டைக்கு வந்தவர், வெகு இயல்பாகவும் எளிமையாகவும் நட்புடனும் பேசினார். அவரை எழுத்தாளர் மலர்மன்னன், டைடல் பூங்காவிற்கு அழைத்து வந்தார்.

குறித்த நேரத்தில் அவர் வரவேண்டுமே என்று என்னைக் கவலைப்பட வைக்காமல் சற்று முன்னதாகவே வந்து நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்தார்.

வாசகர்களின் பல தரப்பான கேள்விகளுக்கு இல.கணேசன், நயத்துடன் பதில் அளித்தார். கேள்விகளைப் பார்த்து அவர் பதிலைச் சொல்லச் சொல்ல, சிஃபி ஆசிரியப் பிரிவில் உள்ள மூத்த இதழாளர் கே.வெங்கடேஷ் தட்டச்சு செய்தார். உடன் மலையாள சிஃபியின் ஆசிரியர் சென்னி வர்கீஸ் இருந்தார்.

இல.கணேசன் உடனான அரட்டையின் முழு வடிவையும் இங்கு வாசிக்கலாம்.

இல.கணேசன், அரட்டையில் பங்கேற்றது மட்டுமல்லாமல் தமிழ் சிஃபிக்காக, 'இந்துத்வா' என்ற தலைப்பில் அரை மணி நேரம் சிறப்பாக உரையாற்றினார். மேலும் சிஃபிமேக்ஸ் தளத்திற்காக ஆங்கிலத்தில் அமைந்த ஒளி நேர்காணல் ஒன்றுக்கும் பதில் அளித்தார். அவருக்கு நான் எழுதிய 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற நூலை அன்பளிப்பாக அளித்தேன்.

இங்குள்ள படங்களை எடுத்தவர்: இரா. சண்முகசுந்தரம்.
No comments:
Post a Comment