Wednesday, July 21, 2010

கோவைச் சந்திப்புகள் - 1

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். அப்போது எடுத்த படங்கள் சில இங்கே:

 Photobucket

கான்பூர் ஐஐடி தலைவர் பேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் உடன் நான். 

தமிழக அரசு, இவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகே தொழில்நுட்ப முடிவுகளை எடுக்கிறது. 26.06.2010 அன்று, கோவையில் தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் 'கேக்' வெட்டி, அவர் பிறந்த நாள் கொண்டாடினார். அத்தருணத்தில், அவருக்கு வாழ்த்துக் கூறி, படமும் எடுத்துக்கொண்டேன். இதற்கு முன், சென்னையில் அறிவியல் நகரத்தில் உள்ள அவர் அலுவலகத்தில் மறவன்புலவு க.சச்சிதானந்தனுடன் இணைந்து சென்று சந்தித்தேன். அப்போது, தமிழில் இணைய இதழ்கள் என்ற என் நூலினை அளித்தேன்.

Photobucket

அறிவியல் தமிழின் முன்னோடி மணவை முஸ்தபா அவர்களுடன் நான்.

செம்மொழிக்கான தகுதிகள் தமிழுக்கு உண்டு எனப் பலவாறாக நிறுவியவர் இவர். கணினிக் களஞ்சியப் பேரகராதி உள்ளிட்ட நூல்கள் பலவற்றை ஆக்கித் தந்தவர். கணினி சார்ந்த கலைச் சொற்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப் பதிப்புக்கு ஆசிரியராகத் திகழ்ந்து, சிறப்பான இதழ்களை வெளிக்கொணர்ந்தவர். இவரின் கட்டுரைகள் பலவற்றை அமுதசுரபி இதழில் வெளியிட்டு மகிழ்ந்தேன். அப்போது சில முறைகள் அமுதசுரபி அலுவகத்திற்கு வந்து என்னைச் சந்தித்து ஊக்குவித்துள்ளார். இவரையும் இவரின் குடும்பத்தினரையும் தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் சந்தித்து மகிழ்ந்தேன். உடல்நலம் குன்றிய நிலையிலும் தமிழன்பினால் மாநாட்டிற்கு வந்திருந்தார்.

Photobucket

தமிழ் மின் குழுக்களின் முன்னோடி பாலாபிள்ளை, என்னுடன் உரையாடுகிறார். 

இவரின் தமிழ் நெட், இன்றைய மின் குழுக்களின் தாய்க் குழு எனப் புகழப்பெறுகிறது. உலகம் தழுவிய வலைப்பின்னலை உருவாக்குவதில் நிபுணர். எங்களின் கோவை உரையாடலிலும் மின் வடிவிலான தமிழ்ச் செலவாணியை (Tamil Currency) உருவாக்கும் அரிய திட்டத்தினை விவரித்தார்.

யாஹூ, ஜிமெயில் மின்னுரையாடல் பெட்டியில் 2004ஆம் ஆண்டு முதலே இவர் இடம் பெற்றபோதும், கோவையில் தான் முதன் முதலில் நேரில் சந்தித்தேன். இணைய மாநாட்டு வளாகத்தில் இவருக்கு என்னை நா.கண்ணன் அறிமுகம் செய்வித்தார். பின்னர் ஓசை செல்லாவுடன் இணைந்து இன்னொரு முறை பாலாபிள்ளையைச் சந்தித்தேன். ஆஸ்திரேலியா, மலேசியா என உலகம் சுற்றும் இவர், அரிய செயல் வீரர்.


Photobucket

பாலாபிள்ளை, என்னுடன் உரையாடுகிறார். உடன், நண்பர் செல்வ முரளி.

 Photobucket
 
'மதுரைத் திட்டம்' கல்யாணசுந்தரம் அவர்களுடன் நான்.

மதுரைத் திட்டத்தின் நிறுவனர்களுள் ஒருவரான இவர், தமிழ் நூல்களை மின்வடிவில் சேமிக்கும் முயற்சிக்குத் தூண்டுகோலாகத் திகழ்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டில்  விஞ்ஞானியாகப் பணிபுரியும் இவர், தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களுள் ஒருவர். உத்தமம் அமைப்பிலும் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர் விஜய் குமார் (www.poetryinstone.in), கல்யாணின் உறவினர் என்பது பலரும் அறியாதது.

Photobucket

தேசிய தகவலியல் மையம் மோகன் அவர்களுடன் நான்.

தேசிய தகவலியல் மையத்தின் தில்லி அலுவலகத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றும் அச்சுதன் மோகன், இந்தியாவின் மின்னாளுகை முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். சென்னையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற செல்பேசித் தொழில்நுட்பத் தமிழாக்கமும் தரப்படுத்தலும் என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டில் இவரை முதலில் சந்தித்தேன். அதன் பிறகு மின்னஞ்சலில்  தொடர்பு நீடித்து வருகிறது. தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவதில் இடர்ப்பாடு உள்ளதைக் கோவையில்  இவரிடம் தெரிவித்த போது, அரசு அலுவலகங்கள், பேரெண்ணிக்கையில் குறுஞ்செய்தி (Bulk SMS) அனுப்பத் தே.த.மை. (NIC) தன்னகத்தே புதிய மென்பொருளை உருவாக்கி வருவதைத் தெரிவித்தார்.

Photobucket


நா.கண்ணன், நா.கணேசன் ஆகியோருடன் நான்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரும் தென் கொரியாவில் பணியாற்றும் சூழலியல் விஞ்ஞானியுமான நா.கண்ணன், வைணவத் தமிழில் தோய்ந்தவர். சிறுகதை, புதினம், கட்டுரைகள் ஆகியவற்றைப் படைப்பதோடு, காசுமி என்ற பெயரில் இனிய கவிதைகளையும் படைத்து வருகிறார். தமிழ் சிஃபியில் நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்தபோது, மிகச் சிறந்த ஒலிப் பதிவுகளை வழங்கியவர். உத்தமம், மதுரைத் திட்டம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தவர்.

நாசா விண் மைய விஞ்ஞானியாகப் பணியாற்றும் நா.கணேசன், பொள்ளாச்சி(பொழில்வாய்ச்சி)க்காரர். தமிழ் ஒருங்குறியைப் பரப்புவதிலும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர். பல்வேறு நுட்ப அமைப்புகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். தமிழ் மணம் வலைத் திரட்டி சார்பில் என்னை நட்சத்திரப் பதிவராக அழைத்தார். இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வருகிறார். மின்னஞ்சலிலும் மின்னுரையாடலிலும் மட்டுமே தொடர்பில் இருந்த இவரை, முதன் முதலில் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன்.

Photobucket

Photobucket

இந்தப் படங்களில் எம்முடன்  சிங்கப்பூரைச் சேர்ந்த அ.பழனியப்பனும் உள்ளார் (வலது ஓரம்).

அ.பழனியப்பன், சிங்கை அரசின் மொழிச் சேவைத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் உலகம் என்ற மின் குழுவினையும் நடத்தி வருகிறார். அமெரிக்க நண்பர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, இவருக்கு என்னை அறிமுகம் செய்வித்தார்.



Photobucket



இதில் என்னுடன் நா.கண்ணனும் அவர் மகள் ஸ்வேதாவும் உள்ளனர். ஜெர்மனியில் தங்கிப் பயிலும் ஸ்வேதா, மேற்கத்திய இசையும் பயின்று வருகிறார்.  இரண்டு நாடுகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பெற்ற போது, பிறந்தவர் ஸ்வேதா.

இவர் கண்ணனின் கையில் கைக்குழந்தையாய் இருந்த படத்தினை முக மண்டலத்தில் கண்டேன். அந்தப் பெண், ஐந்தடி உயரத்திற்கு வளர்ந்து, கோவையில் வண்ணத்துப்பூச்சியாய் வளைய வந்தார்.




எ-கலப்பை முகுந்தராஜ் உடன் நான்.

எ-கலப்பை என்ற எழுதி, தமிழ் இணையத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தொடக்கக் காலத்தில் தமிழ்த் தட்டச்சுக்கு இதனைப் பலரும் பயன்படுத்தினர். நானும் பல ஆண்டுகள் இதனைப் பயன்படுத்தினேன். வலைப்பதிவுகளின் எழுச்சியின்போது, http://www.tamilblogs.com/ என்ற திரட்டியினையும் முகுந்தராஜ் உருவாக்கினார். இப்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி, தமிழ்க் கணிமையை வளர்த்து வருகிறார்.

(படம் எடுத்தவர்களுக்கு நன்றி்; பழைய படத்திற்காக நா.கண்ணனுக்கும் நன்றி)

No comments: