ஏப்ரல் 22 முதல் மே 9 வரை சுற்றுலா நிமித்தம் இந்தியாவின் ஒரிசா, மேற்கு வங்காளம், சிக்கிம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் நேபாள நாட்டிற்கும் சென்று வந்தேன். இது தொடர்பாக எழுதுவதற்கு நிறைய செய்திகள் உள்ளன.

படங்களும் நிறைய எடுத்து வந்துள்ளேன். அதுவும் புதிதாக வாங்கிய எணினி (டிஜிட்டல்) புகைப்படக் கருவியில் எடுத்த படங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை வெளியிடுகிறேன்.

முதலில் நேபாளத்தில் புகழ்பெற்ற பசுபதி நாதர் கோயிலுக்கு அருகே, வாயிலுக்கு வெளியே எடுத்த படங்களைப் பாருங்கள்.

பசுபதி நாதர் கோயிலுக்குள் படம் எடுக்கத் தடை உள்ளது. எனவேதான் வெளிப்புறக் காட்சிகளை எடுத்துவந்தேன்.

இந்தக் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நம் காலணிகள், செல்பேசி, புகைப்படக் கருவி, தோலினால் ஆன இடுப்புப் பட்டை (பெல்ட்), வேறு தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஏதும் இருந்தால் அவை ஆகிய அனைத்தையும் வெளியிலேயே விட்டுவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும்.

தோலினால் ஆன பணப்பைக்கு மட்டும் விதிவிலக்கு. அதனால் இவற்றை கோயிலுக்கு எதிரே இருந்த கடையில் விட்டுவிட்டு முதலில் உள்ளே போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு புகைப்படக் கருவியை எடுத்துக்கொண்டு என் அப்பாவுடன் வந்து படங்களை எடுத்தேன்.

இங்குள்ள படங்களில் நான் உள்ள படங்களை எடுத்தவர், என் அப்பா குப்புசாமி.

நான் இல்லாத படங்களை எடுத்தவன் நானே.

இங்குள்ள நந்தி, வாயைத் தூக்கி வைத்துக்கொண்டு பார்க்க மிகவும் அழகாக, சாதுவாக இருந்தது. சில யாளிகள் வாய்நிறைய சிரித்தபடி நம்மை வரவேற்றன.

இந்தக் கோயிலைப் பற்றி விவரித்த வழிகாட்டி, அதன் சிறப்புகளைக் கூறினார். பின்னர் திருடர்களைக் குறித்தும் எச்சரித்தார். 'நீங்கள் ஓம் நமசிவாய என்று கண்ணை மூடி நின்றிருந்தால், திருடன் ஓம் நமசிவாய என்று உங்கள் பையில் பிளேடு போட்டுவிடுவான்' என்று நகைச்சுவையாகக் கூறினார்.

கோயிலுக்குள் மாடு ஒன்று நின்றிருந்தது.

நூற்றுக்கணக்கான புறாக்கள் அமர்ந்திருந்தன.

புறாக்களுக்கு அருகில் நாய்கள் அமைதியாகப் படுத்திருந்தன.

ஏராளமான லிங்கங்களும் சிலைகளும் அமைந்திருந்தன.

ஆலயத்திற்குப் பின்புறம் சிறிய ஆறு ஒன்றும் ஓடுகிறது.

ஆங்காங்கே சிறு சிறு குழுவினர் அமர்ந்து வேதம் படித்துக்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் நூற்றுக்கணக்கான சிவலிங்கங்கள் இருந்தன. அவற்றுள் நுழைந்தவர்கள் அத்தனை சிவலிங்கத்தையும் கடந்து வரும்படியாகப் பாதையை மடக்கி மடக்கி வைத்திருந்தார்கள். ஒரு சிறிய அறைக்குள்ளேயே ஒரு கிலோ மீட்டர் நடந்தது போலிருந்தது.
