
மதுரையின் தெருக்களில் நல்ல வழிகாட்டிப் பலகைகளைக் கண்டேன். ஒவ்வொரு தெருவின் அமைப்பு, மதுரை மாநகராட்சியின் முக்கிய தொலைபேசி எண்கள், கவுன்சிலரின் பெயர் - தொடர்பு எண்கள் ஆகியவற்றோடு அந்தப் பலகையை வைக்க உதவிய விளம்பரதாரரின் விவரத்துடன் அந்தப் பலகைகள் விளங்கின. தெருப் பெயர்கள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையும் தமிழாக்கினால் மிக நல்லது. இதே போல் தமிழ்நாட்டின் எல்லாத் தெருக்களுக்கும் வைக்கலாம்.
சென்னையிலும் இன்னும் சில பெரிய நகரங்களிலும் இத்தகைய பலகைகள் இருக்கின்றன ஆயினும் அவை மிகக் குறைவே. மேலும் பல இடங்களில் தன்னார்வலர்களின் முயற்சியினால்தான் இத்தகைய பலகைகள் நிற்கின்றன்; நகர நிர்வாகம், விளம்பரதாரர்களை உரிய வகையில் பயன்படுத்தினால் இதை வீச்சுடன் பயன்படுத்தலாம். இதையே எணினி (டிஜிட்டல்) வடிவில் வைத்து, கணினி வழி நிருவகித்தால் நீண்ட காலப் பயன் கிட்டும்.
பலகைகள், இரவில் ஒளிரும்வண்ணம் செய்யலாம். அதற்குத் தேவையான மின்சாரத்தைச் சூரிய ஒளியின் மூலம் தனக்குத் தானே அந்தப் பலகை பெறுமாறு செய்தால் மிக நன்று. அப்போது ஒரே பலகையில் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் விவரங்களைப் பெற முடியும்.

அதே போன்று, தெருவோரம் வாகன நிறுத்துமிடத்தின் எல்லையை, சென்னை உள்பட பல பகுதிகளிலும் வண்ணத்தினால் (பெயின்ட்) வரைந்து வைத்துள்ளனர். அவை எளிதில் அழிந்தும் தேய்ந்தும் போய்விடுவதைக் காண்கிறோம். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக, மதுரை மாநகராட்சியினர், இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் எல்லைக் கோட்டின் ஆயுள் பல மடங்கு கூடுகிறது. இதையும் இதர பகுதிகளில் பின்பற்றலாம்.