அண்மையில் பெங்களூர் சென்ற போது அங்கிருக்கும் விஸ்வேஸ்வரய்யா தொழில், நுட்ப அருங்காட்சியகத்தைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். வாயிலிலேயே குட்டி விமானம் வரவேற்றது. நான்கைந்து மாடிகளில் துறை வாரியாகப் பிரித்துப் பல்வேறு கருவிகளையும் அவற்றின் செய்முறையையும் விளக்கியிருந்தார்கள்.
அறிவியல் மேதைகளின் உருவப் படங்கள்
நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதைகளின் உருவப் படங்கள், கட்டடத்தின் மையத்தில் வட்டமாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு பல்வேறு அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் இயங்கும் பிரமாண்ட கருவிகள், இருந்தன. அவற்றை நாமே நேரடியாக இயக்கி, செயல்படும் விதத்தை அறிய முடிந்தது. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஒரு பந்தினை ஓரிடத்தில் தட்டிவிட்டால் அது எங்கெங்கு எல்லாம் போகிறது என்பதை விளையாட்டாக அமைத்திருந்தார்கள். இதே போன்ற நுட்பத்தைக் கொண்டே அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளக் கமல், ஒருவரைக் கொன்றது நினைவிற்கு வந்தது.
மரபணுவின் மாதிரித் தோற்றம்
இந்த அருங்காட்சியத்தில் ஐந்து பெரும் பகுதிகள், மிகவும் புகழ் பெற்றவை. அவை: எஞ்சின் அரங்கம், மின்னணு நுட்ப அரங்கம், புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் அரங்கம், சிறுவர்களுக்கான அறிவியல் அரங்கம், அச்சுக் கருவிகளின் அரங்கம்.
அந்தக் காலத் தொலைபேசி
ரைட் சகோதர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தது எப்படி, அந்த விமானம் எப்படி இருந்தது, எப்படி இயங்கியது, ஹெலிகாப்டர் இயங்குவது எவ்விதம், ஏவுகணை, செயற்கைக் கோள் ஆகியவற்றின் மாதிரிகள், காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி, புனல் மின்சார உற்பத்தி, மேலும் இயந்திரவியல், விண்ணியல், உயிரி நுட்பியல், மின்னணுப் பொருட்கள், மோட்டார் மூலம் இயங்குபவை, உலோகக் கருவிகள், மரக் கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள்.... என அறிவியலின் அனைத்துத் துறைகளையும் எளிய வகையில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
பொருட்களைக் காட்டுவதுடன் ஆர்வம் உள்ளவர்கள், அதை இயக்கிப் பார்க்கும் வாய்ப்பையும் இந்த அருங்காட்சியகம் தருகிறது. இது, மாணவர்களுக்கு மிகப் பெரும் பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாம் தலைமுறைக் கணினி
அந்தக் காலத்தில் கணினி, நகல் கருவி (ஜெராக்ஸ்), தொலைபேசி உள்ளிட்ட பலவும் எப்படி இருந்தன என்பதை நேரடியாக அறிய முடிகிறது. அதே போல் தொலைதூரத் தொலைபேசி அழைப்புகள் எப்படி இணைக்கப்படுகின்றன என்பதையும் செய்முறை மூலம் காட்டியிருந்தார்கள். பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்பு இருந்தது வசதியாக இருந்தது.
குறிப்பிட்ட நேரங்களில் அறிவியல் விளக்கங்களைத் திரையில் ஒளி-ஒலிக் காட்சியாகவும் காட்டுகிறார்கள். ஒவ்வொரு மாடியாக ஏறி, ஒவ்வொரு கண்டுபிடிப்பைப் பற்றியும் நுட்பத்தைக் குறித்தும் ஆழமாக அறிய ஆவல்தான். ஆனால், நேரமின்மை காரணமாக அவசர அவசரமாகப் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.
அந்தக் கால நகல் கருவி
இது, நவீன கர்நாடகச் சிற்பியான விஸ்வேஸ்வரய்யா நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் பிரதான பகுதியில் கஸ்தூரிபா சாலையில் அமைந்துள்ளது. சிறிதளவு நுழைவுக் கட்டணம் உண்டு. சிறுவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணமே.
அனைவருமே இந்த அருங்காட்சியகத்திற்கு ஒரு முறையேனும் சென்று பார்ப்பது நம் அறிவினை இன்னும் விசாலமாக்கும்; மாணவர்கள் இங்கு உறுதியாகச் செல்லவேண்டும். எந்தப் பாடப் புத்தகமும் இவ்வளவு அழகாக, எளிமையாக, ஆழமாகச் சொல்லித் தர முடியாது.
Sunday, October 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment