Wednesday, November 08, 2006

தெருநாய்களின் வாழ்வியல்

படுத்துறங்கும் நாய்க்குட்டி:



சென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே இந்த நாய்க்குட்டிகளைக் கண்டேன். இரண்டும் ஒன்றை ஒன்று விரட்டிப் பிடித்து, கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. பிறகு ஓய்வெடுக்க ஒன்றின் மீது ஒன்று ஏறி அமைதியாகப் படுத்துவிட்டன. இத்தனைக்கும் இது ஒதுக்குப்புறமான இடம் இல்லை. பேருந்துகள் செல்லும் தார்ச்சாலைக்கு மிக அருகில். என்ன துணிச்சல் பார்த்தீர்களா?



பால்குடிக்கும் நாய்க்குட்டி:










சென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே நாய்கள் ஏராளம். பணிமுடிந்து இரவு 10, 11 மணிக்குக்கூட நான் திரும்புவதுண்டு. அப்போதெல்லாம் இந்த நாய்கள் குலைப்பதுண்டு. அதிலிருந்து நாய்களின் உளவியலைக் கொஞ்சம் அறிய முடிந்தது.

நாய்களைத் தொடர்ந்து கண்டு வந்ததன் விளைவாக எனக்குள் சில முடிவுகளும் கேள்விகளும் பிறந்துள்ளன. அவை வருமாறு:

மிதிவண்டியில் வந்தால் நாய்கள் குலைக்கின்றன. அதே நேரம் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவை விரைந்து ஒதுங்கி எனக்கு வழி விடுகின்றன. நாய்கள், பெரிய, வேகமான வாகனங்களைக் கண்டால் அஞ்சுகின்றன.

நாய்களுக்குள் தகவல் தொடர்புச் சங்கிலிப் பின்னல் சிறப்பாக உள்ளது. ஒரு நாய் குலைத்தால் பல நாய்கள் அதற்குத் துணைக்கு வருகின்றன.

ஒவ்வொரு நாயும் தனக்கென்று ஓர் எல்லையை வைத்துள்ளது. எவ்வளவுதான் வேகமாக ஒருவரைத் துரத்தி வந்தாலும் தெரு முனைக்கு வந்ததும் நாய்கள் திரும்பிச் சென்று விடுகின்றன. அத்துடன் தன் எல்லை முடிந்துவிட்டது என்று நினைக்கிறது போலும்.

ஒரு பெண் நாயைப் பல ஆண் நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. இதனால் நாய்களுக்குப் பால்வினை நோய் எதுவும் வராதா? நாய்களுக்குள் ஆண்களைவிடப் பெண்களின் விகிதம் குறைவாக இருக்கிறதா?

கோபத்தைப் பற்களைக் காட்டியும் உரக்கக் குறைத்தும் வெளிப்படுத்தும் நாய், தாபத்தைப் பெண் நாய்களின் பின்புறத்தை மோப்பம் பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறது.

தெருநாய்கள் மழையில் நனைந்தால் ஒழிய, பெரும்பாலும் குளிப்பதில்லை.

கெட்டுப் போன அல்லது சுவையில்லாத உணவை நாய்கள் சீந்துவதில்லை. ஆனால், மலத்தை உண்ணுகின்றன.

மணலைக் கால்களால் தோண்டிக் குழி ஏற்படுத்தி அதில் நாய்கள் படுக்கின்றன.

இரவில் சாலை முழுதும் காலியாக இருந்தாலும் நாய்கள், சாலையின் நடுப்பகுதியிலேயே பெரும்பாலும் படுக்கின்றன.

நாய்க்கு வீடு என்று இல்லையே தவிர, அது நாடோ டி இல்லை. ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேதான் தொடர்ந்து படுக்கின்றன.

கீழே குனிந்து கல்லை எடுப்பது போல் பாவனை செய்தாலே நாய் பயந்து வெகு தூரம் ஓடிவிடுகிறது. பிறகு நம் கையில் எதுவும் இல்லை என்று தெரிந்தால் மீண்டும் அருகில் வந்து குரைக்கிறது. நம் கையில் அதற்கு எதிரான ஆயுதம் இருக்கிறது என்று அது உணர்ந்தால் சற்று தள்ளி நின்று எச்சரிக்கையாகக் குரைக்கிறது. அடிப்படையிலேயே எல்லா நாய்களும் அடிப்பது போன்ற சைகைக்கு அஞ்சுகின்றன.

நாய் அறிதுயில் நிலையில்தான் உறங்குகின்றன. அது, ஆழமாக உறங்குகிறதா என்பது ஐயமே.

புதிய நாய், தன் எல்லைக்குள் வந்தால் அந்தத் தெருவின் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை விரட்டி அடிக்கின்றன.

இன்னும் நிறைய உண்டு. பிற பின்.

3 comments:

ஜடாயு said...

அண்ணா கண்ணன்,
தெருநாய்களை மிகவும் நுணுக்கமாக அவதானித்து எழுதியிருக்கிறீர்கள். படிப்பதற்கு சுவையாக இருந்தது.

// ஒவ்வொரு நாயும் தனக்கென்று ஓர் எல்லையை வைத்துள்ளது //

// நாய்க்கு வீடு என்று இல்லையே தவிர, அது நாடோ டி இல்லை.//

// புதிய நாய், தன் எல்லைக்குள் வந்தால் அந்தத் தெருவின் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை விரட்டி அடிக்கின்றன //

இந்த வரிகள் சிந்திக்க வைக்கின்றன.

துளசி கோபால் said...

நாய் சைக்காலஜி நல்லா வந்துருக்கு.

மனுஷனைவிட மிருகங்களுக்கு அறிவு அதிகம். என்ன ஒண்ணு, நம்மளைப்போலப்
பேசத்தெரியாது,அவ்வளோதான்.

வடுவூர் குமார் said...

சில கேள்விகளை திருவாளர் மதனிடம் கேட்டால் சுவையான பதில் கிடைக்கும்.