Monday, November 13, 2006

இந்த மொழிபெயர்ப்பு சரியா?



சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையத்தில் நான் கண்ட அறிவிப்பு இது. 'Running staff rest room' என்பதற்கு 'ஓடும் தொழிலாளர் ஓய்வறை' என்ற மொழிபெயர்ப்பைப் பார்த்த உடனே கவர்ந்தது. மோனை அழகே முதல் காரணம்.

ஆயினும் சற்றே யோசித்ததில் இந்த மொழிபெயர்ப்பு சரியா என்ற கேள்வி எழுந்தது.

முதலில் பின்னிருந்து வருவோம். rest room என்பதை ஓய்வறை என்று சொல்வது சரிதான்.

அடுத்து, staff என்பதற்குத் தொழிலாளர் என்பதைவிட ஊழியர் என்ற சொல் சரியெனத் தோன்றியது.

அடுத்து, Running என்பதை நேரடியாக மொழிபெயர்த்தது, பொருத்தமின்றித் தெரிந்தது. தொடர்வண்டியில் செல்லும் ஓட்டுநர், பரிசோதகர் உள்ளிட்டோர் ஓய்வெடுப்பதற்கான அறை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குப் பதிலாக, விரையும், இயங்கும், பயணிக்கும் ஆகியவற்றில் ஒன்றினைப் பயன்படுத்தலாமா?

மோனை அழகு வேண்டுமானால், 'இயங்கும் ஊழியர் இளைப்பாறும் அறை', 'உலாவும் ஊழியர் ஓய்வறை', 'தடம்மேவு ஊழியர் தங்குமிடம்' என்றுகூட அழைக்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

6 comments:

குமரன் (Kumaran) said...

:-))

உங்கள் மொழியாக்கமும் நன்றாக இருக்கிறது.

நம்பி.பா. said...

நீங்கள் கண்ட தமிழாக்கம் தவறென்பதில் மாற்றுக் கருத்தில்லை.
"உலாவும் ஊழியர் ஓய்வறை" என்பது பொருத்தமானதாகத்
தோன்றுகிறது.

"ஊழியர் ஓய்வறை" என்று மட்டுமே அழைப்பதில் தவறென்ன?

அன்புடன்,
நம்பி.பா.

வஜ்ரா said...

தவறான மொழிபெயர்ப்பு, நம்மூரில் அடிக்கடிப் பார்க்கக் கூடிய விஷயங்களில் ஒன்று.


திருப்பதியில் காது குத்தும் இடத்தில் Ear boring place என்றிருந்தது.!!

காதில் "ஓட்டை" போடுவதை இப்படி மொழிபெயர்த்திருந்தனர்.!!!

துளசி கோபால் said...

:-)))))))))))))

ஓகை said...

ஓடும் தொழிலாளர் ஓய்வறை என்பது அப்படியொன்றும் தவறாகத் தெரியவில்லை. 'Running staff rest room' என்பதற்கும் அதே பொருள்தானே வருகிறது. ஆனால் உங்கள் 'உலாவும் ஊழியர் ஓய்வறை' என்பது அருமையான மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு கூட இல்லை. மொழியாக்கம்.

'இயங்கும் ஊழியர் இளைப்பாறும் அறை' என்பதில் சிறு செயற்கைத்தனம் தெரிகிறது. நீளமாக இருக்கிறது.

'தடம்மேவு ஊழியர் தங்குமிடம்' - இம்மொழியாக்கம் இக்காலத்திற்கு ஒவ்வாதது.

ettluthuperumal said...

அருமை. வாழ்த்துக்கள்.