Monday, February 21, 2011

எனது இரண்டாம் குருதிக் கொடை

நண்பர் ஜனார்த்தன், அண்மையில் தொலைபேசியில் அழைத்தார். "என் நண்பரின் தந்தை டில்லி என்பவர் (வயது 60), சென்னை போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவருக்குக் குருதி தேவை. நான் அளித்துவிட்டேன். நீங்கள் விரும்பினால், அவருக்குக் குருதிக் கொடை வழங்கலாம்" என்றார்.
நாங்கள் முன்பு 13.7.2006 அன்று, அடுத்தடுத்து, குருதிக் கொடை அளித்தோம். அது தொடர்பான இடுகை இங்கே.
இப்போதும் உடனே ஒப்புக்கொண்டேன். 2011 பிப்ரவரி 21 அன்று மாலையில் அந்த மருத்துவமனையில் உள்ள குருதி வங்கிக்குச் சென்றேன். வழக்கமான கேள்விகள் அடங்கிய விண்ணப்பத்தை அளித்து நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொடுத்தேன்.
என் கால்களில் நீல நிற உறையை அணிந்துகொள்ளச் சொன்னார்கள். குருதி எடுக்கும் அறையினுள் நுழைந்தேன்.
என்னைச் சாய்ந்து படுக்கவைத்து, என் கைகளைத் தேய்த்து, நரம்பினைக் கண்டுபிடித்து, அதில் ஓர் ஊசியைச் செருகினார்கள். என் கையில் மஞ்சள் பந்து ஒன்றை அளித்து, அதை அழுத்துமாறு கூறினார்கள். அப்போது, குருதி வேகமாகப் பாயத் தொடங்கியது.
அந்த அறை முழுவதும் Message of Love; Donate blood என்பது உள்பட, குருதிக் கொடையை வலியுறுத்தும் பல்வேறு வாசகங்கள் இருந்தன.
20 மணித் துளிகளில் என்னிடமிருந்து ஒரு யூனிட் (450 மி்ல்லி) குருதி, அவர்களின் குருதிப் பைக்குள் சேர்ந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தக் குருதி, மீண்டும் உடலுள் ஊறிவிடும் என்றார்கள்.
என் அருகில் இன்னொருவரும் குருதிக் கொடை அளித்தார். இந்தப் புகைப்படங்களை எடுத்தவர், அவரே. இவற்றைப் பிறர் பார்வைக்கு அளிப்பது, குருதிக் கொடையை ஊக்குவிக்கவே.
குருதி எடுத்து முடிந்ததும், பழச்சாறும் பிஸ்கட் பொட்டலமும் தந்து உட்கொள்ளச் சொன்னார்கள்.
அடுத்து, நான்காவது மாடிக்குச் சென்றேன். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் டில்லியைப் பார்க்க முடியாது என்றார்கள். அவர் மனைவி சரஸ்வதியைச் சந்தித்தேன். அவர், விபத்து நடந்த விதத்தை விளக்கினார்.
திருநின்றவூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகுளத்தூர் கிராமம். மூன்று வாரங்கள் முன்பு, ஒரு திங்கட்கிழமை. மாலை 7 மணி. அந்தக் கீற்றுக் கொட்டகை, சாலையோரம் இருந்தது, . அதில் விவசாயி டில்லி, நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் ஒரு டிராக்டர் வந்தது. யார் குறுக்கே வந்தார்களோ, யாரும் எதிர்பாராத தருணத்தில், அந்த வாகனம், குடிசைக்குள் நுழைந்தது. அங்கு மூவர் இருந்தனர். டில்லியின் கால்களில் சக்கரங்கள் ஏறின. அவரின் நண்பருக்குக் கை எலும்புகள் முறிந்தன. மூன்றாமவர், குடிசைக்குப் பின்னால் போய் விழுந்தார். அவருக்குப் பெரிய காயங்கள் இல்லை.
டில்லியை இந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். அறுவை சிகிச்சை தொடங்கியது. ஒரு காலை முட்டிக்குக் கீழாக வெட்டி எடுத்தார்கள். அடுத்து, தொடையிலும் ஓர் அறுவை நிகழ்த்த வேண்டியுள்ளது. இதற்கு 12 யூனிட் குருதி தேவை.
என் குருதி, ஓ பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது. டில்லிக்கோ வேறு பிரிவு (ஏ நெகட்டிவ் என நினைக்கிறேன்). ஆயினும் யாரேனும் வேறு குருதி வகையைக் கொடுத்தால், குருதி வங்கியினர், அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தேவையான குருதியைத் தந்துவிடுவார்கள்.
இவ்வாறு சரஸ்வதி கூறினார்.
கை முறிந்த இன்னொருவரின் மகன் சதீஷ், அங்கிருந்தார். அவர் மேலும் சில விளக்கங்களைக் கூறினார்.
"இவ்வாறு வேறு பிரிவிலாவது குருதி கிடைக்காவிட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அவரது குருதிப் பிரிவை அளிக்க, அதிகக் கட்டணம் வசூலிப்பார்கள். அதைத் தவிர்க்க, உரியவர்கள், தம் உறவினர்கள், நண்பர்கள் என எவரையேனும் குருதிக் கொடை அளிக்கத் தூண்டுவார்கள். இந்த வகையிலாவது, குருதிக் கொடை வளரும் என்பதாலேயே  இவ்வாறு அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்" என்றார் சதீஷ்.
டில்லியின் மகன் மணி, தொலைபேசியில் எனக்கு நன்றி தெரிவித்தார். "எங்கள் கிராமத்துக்கு வாருங்கள்" எனச் சதீஷ் அழைத்தார்.  அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கூறி, விடைபெற்றேன்.
எவருக்கேனும் ஓ பாசிட்டிவ் குருதி தேவைப்பட்டால் என்னை அணுகலாம்.

6 comments:

Unknown said...

Dear Sir! It is so great!

Unknown said...

மக்கட்பணியில் ஒருவகை ஆன்ம நிறைவு கொள்ள வேண்டும், நமக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பாகக் கருத வேண்டும்.அதில் விளபரமின்றி இருப்பது சிறப்பாக இருக்குமென்று நான் கருதுகின்றேன்.

முனைவர் அண்ணாகண்ணன் said...

விளம்பரம் நம் நோக்கமில்லை. ஆயினும் படங்கள் மூலம் செய்தியைச் சொல்லும்போது, வீரியமாகச் சென்று சேர்கிறது.

Unknown said...

நன்றி !!! நன்பா! 450 மில்லி என்பது தவறு?350 மில்லிதான் 1 யூனிட் !சில தர்மங்கள் ரகசியமாக செய்ய வேண்டும்!சில தர்மங்கள் பகிரங்கமாக செய்வது ஏன் என்றால் பிறரையும் செய்ய தூண்டும்!இந்த வகையில் இரத்த தானம் செய்வது பலருக்கும் தெரியும் வகையில் செய்தால் பார்ப்பவரையும் செய்ய தூண்டும்!அதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும்!

முனைவர் அண்ணாகண்ணன் said...

350 மில்லி, 450 மில்லி என இரண்டு வகைகளில் யூனிட் கணக்கிடப்படுகிறது. இதனைக் குருதியை எடுத்த செவிலி, என்னிடம் தெரிவித்தார்.

நான் முதன் முறை கொடுத்த போது, 350 மில்லி எடுத்தார்கள். இந்த முறை 450 மில்லி எடுத்தார்கள். 450 மில்லி எடுத்ததை, என் அருகில் இருந்த கருவி காட்டியது.

பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் கணக்கீடு, சிவப்பு எண்களில் காட்டப்படுவது போல்,என் கண்ணெதிரே எவ்வளவு குருதி சேர்ந்துள்ளது என்பதை அந்தக் கருவி, சிவப்பு எண்களில் காட்டியது.

வெ. ஜெயகணபதி said...

ethuku intha vilambaram.... antha cinema kaaranga thaan thanaku thaane poster adichi vilambara paduthikiraangana, naamaluma...? ayyo ayyo...