சீர்காழிக்கு அருகில் உள்ள புதுத்துறை மண்டபம் என்ற ஊரில் 1947ஆம் ஆண்டு கல்யாணம் - வஞ்சுளவல்லி ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்த என் அம்மா, 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றவர். நல்ல குரல் வளம் உள்ளவர்.
20 வயதில் என் அப்பா குப்புசாமியை மணந்த அவர், 4 பிள்ளைகள் பெற்று, ஆளாக்கி உள்ளார். வாழ்க்கையின் கடும் சோதனைகளின் போதும் துணிச்சலுடன் போராடி, எமக்கு வலுவூட்டிய எம் அன்னைக்கு 24.6.2006 அன்று 60 வயது தொடங்கியது.
அதைச் சிறு அளவில் கொண்டாட விழைந்தோம்.
என் அம்மாவின் ஒப்புதலின் படியும் விருப்பத்தின் படியும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றோம். அங்கிருந்த சுமார் 80 மாணவர்களுக்கு மதிய உணவளித்தோம்.

கிறித்தவ சமூகத்தினரால் நடத்தப்படுகிற அந்த இல்லத்து மாணவர்கள், இறை வணக்கம் பாடி, பிறகு உணவருந்தினார்கள்.

அம்மாவும் அக்கா வேதவல்லியும் உறவினர் ஆண்டாளும் நானும் மாணவர்களுக்குப் பரிமாறினோம்.

மாணவர் எவரும் கொஞ்சம்கூட வீணடிக்காமல் சாப்பிட்டார்கள் என்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.






பிறகு அவர்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
சிறிய அளவில் திட்டமிட்டதால் மிகச் சிலரையே அழைத்திருந்தோம். என் இளைய அக்காள் வேதவல்லி பாலாஜியின் வீட்டில் சிறு நிகழ்ச்சியும் வைத்திருந்தோம். மாடியில் வண்ணத் துணிப் பந்தல் (ஷாமியானா) கட்டி, விருந்தினர்களுக்கு விருந்தளித்தோம்.
எம் அழைப்பை ஏற்று, என் நண்பர்கள் காந்தளகம் உரிமையாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், நட்டுவாங்க வித்தகர் சசிரேகா, அவரின் பெற்றோர், ஓவியர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கார்த்திகேயன், கன்னட சிஃபி ஆசிரியர் தயானந்த் பட், காயத்ரி, உறவினர்கள் சேஷகோவிந்தராஜன் - மீரா, கோகுல் - பத்மஜா, பிரசன்னா - ரம்யா, குழந்தைகள் காயத்ரி, பிரீதி, ஸ்ருதி, கஜா, அபிநயா, அரவிந்த் உள்ளிட்ட பலரும் மேலும் அக்கம் பக்கத்திலிருந்து சிலரும் நேரில் வந்து சிறப்பித்தார்கள்.
சசிரேகா இனிய பாடல் ஒன்று பாடினார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, நண்பர் கன்னிக்கோயில் ராஜா, குறுஞ்செய்தி மூலம் என் சார்பில் பலரையும் அழைத்திருந்தார். நேரில் வர முடியாத பலரும் குறுஞ்செய்தி மூலமும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அம்மாவுக்கு நீரிழிவு இருந்தாலும் பேரக் குழந்தைகளின் விருப்பத்திற்காக கேக் ஒன்று வாங்கி வந்தோம். அதை அம்மா வெட்டினார்கள்.
வழக்கமாக எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த நாள் கொண்டாடுவது உண்டு. ஆனால், பெரியவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறோம். அதை ஒரு விழாவாக எடுப்பதில்லை. அந்த வகையில் இந்த 60 ஆண்டுகளில் இதுதான் எங்கள் அம்மா கொண்டாடிய முதல் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவுக்கு அடுத்த நாள் (25.6.2006), அம்மாவை அழைத்து ஏதாவது அனுபவங்களைப் பேசுமாறும் பாடுமாறும் கேட்டேன். முதலில் சுய அறிமுகம் செய்துகொண்டு, பிறகு பாடச் சொன்னேன். அவர், ஒரு சுலோகம் பாடினார். ஆயினும் பாதியிலேயே அந்தப் பதிவு நின்றுவிட்டது. தற்சமயம் கைவசம் இருப்பது, இரு நிமிடத்திற்கும் குறைவான ஒலிப்பதிவுதான்.
அதை இந்தத் தளத்தில் இட்டு வைத்துள்ளேன். பதிவிறக்கிக் கேட்டுப் பாருங்கள்.


18 comments:
அருமை அண்ணா கண்ணன். வாழ்த்துக்கள்.
தங்கள் அன்னையின் பிறந்ததினத்திற்கும், அதனை ஆதரவற்றவர்களோடு கொண்டாடியமைக்கு உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!
இந்த நல்ல தருணத்தில் தங்கள் அன்னைக்கு எனது வணக்கங்கள்!
வாழ்த்த வயதில்லை.. உங்களோடு இணைந்து வணங்குகிறேன்.
உங்கள் தாயாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கண்ணன்,
தங்கள் தாயாருக்கு வாழ்த்துக்கள், தாயாரை கெளவுரவப்படுத்தும் உங்களுக்கு பாராட்டுக்கள் !
அண்ணா கண்ணன், தனக்கு இதெல்லாம் எதற்கு என்று வாய் மறுத்தாலும், மனத்தில் ஏக்கமில்லாமல் இருக்காது. அந்தக்கால பெண்களுக்கு இவையெல்லாம் வாய்த்ததில்லை.
எடுத்து நடத்திய பிள்ளகளுக்கு, இப்படிப்பட்ட பிள்ளைகள் கிடைத்ததற்க்கு தாய்க்கு வாழ்த்துக்கள்.
அருமையான வேலை செய்திருக்கிறீர்கள் அண்ணா கண்ணன். தங்களின் தாயாரிடம் என் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள். அப்படியே, உங்கள் தாயாரின் பிறந்ததினத்தை விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்டவர்களுக்கும் என்னுடைய வாழ்த்தைச் சேர்ப்பித்துவிடுங்கள்.
அம்மாவுக்கு வணக்கங்கள்!
உங்களுக்கு வாழ்த்துக்கள்!!
குரல் வளம் உள்ள அம்மாவின் திறமைகளை அறிமுகப்படுத்தலாமே!
படங்களில் அத்தனை குழந்தைகளைப் பார்த்தவுடன், அப்படியே ஒரு சிலிர்ப்பு!
நன்றே செய்தீர்!
வாழ்த்துரைத்த அனைவருக்கும் அம்மா சார்பிலும் என் சார்பிலும் நன்றிகள்.
குரல் வளம் உள்ள அம்மாவின் திறமைகளை அறிமுகப்படுத்தலாமே! என்று கேட்ட ரவிசங்கர், என் அம்மாவின் இரு நிமிட ஒலிப்பதிவைக் கேளுங்கள். இதைவிட அவர் சிறப்பாகப் பாடக் கூடியவர்; இது சோதனை ஓட்டமே :)
ஒரு செய்தியை முதலில் சொல்ல மறந்தேன். உணவு உண்ணும் முன்னான இறைவணக்கத்தின் போது, அந்த மாணவர்கள், அம்மாவுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அம்மாவுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
படிக்கவும்/பார்க்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.
உங்களுடைய அம்மாவுக்கு எங்களது தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ஆதரவற்றோருக்கு உதவும் வகையில் நீங்கள் கொண்டாடியது நல்லதொரு நிகழ்வு ; வாழ்த்துகள்.
மகனின் முதல் சில பிறந்தநாட்களின் போது, அன்னை தெரேசாவின் மடத்தை சார்ந்தோர் கேலப் நகரம், நியு மெக்சிக்கோ - ( யூ எஸ் ஏ ) மாநிலத்தில் நடத்தும் சூப் குசினிக்கு உணவு பொருட்கள் வாங்கி தந்துதவி நாங்கள் நல்லுணர்ச்சி பெற்றதுண்டு. நலிவுற்றோர்,வலிவற்றோர் கருணையுடன் நன்றி சொல்லும் போது விளையும் மகிழ்ச்சிக்கு இணையில்லை.
புதுத்துறை-மண்டபம் அழகான சின்ன ஊர். என்ன, உப்பனாற்றில் வெள்ளம் கரைபுரண்டால் ஊர் பாதி மூழ்கிவிடும். புகைச்சலாக இன்னும் நினைவிலுள்ளது அந்த ஊர். உங்கள் அம்மா சீர்காழி வட்டாராத்து மனுஷி என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.
அன்னைக்கு என் வணக்கங்கள்!
மிக அருமையான திட்டம்; ஆதரவற்றோருடன் கொண்டாடியது.இப்படி எல்லோரும் செய்தால் ஆதரவிலாதாரே!!இல்லை.
யோகன் பாரிஸ்
என்ன தவம் செய்தனை-சௌந்தரவல்லி!
அண்ணா கண்ணன் என்னும்
அன்பு மகனைப் பெற?
என்று பாட வேண்டும் போல உள்ளது. பாராட்டுகள் அண்ணா கண்ணன்!
ஷைலஜா
வாழ்த்துக்கள் அண்ணா கண்ணன், உங்களுக்கும் அம்மாவுக்கும். இதை விட இனிமை வேறு என்ன வேண்டும். என் குழந்தைகள் சார்பாகவும் இத்தனை நல்ல் புத்திரனைப் பெற்ற அன்னைக்கு வணக்கங்கள்.
ஆரோக்கியத்தோடு,ஆனந்தமாக வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.
அம்மாவை இன்று அழைத்து வந்து, உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நேரடியாக அவரையே படிக்க வைத்தேன். மிகவும் மகிழ்ந்தார். அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கச் சொன்னார்.
தங்கள் அன்னையின் பிறந்ததினத்திற்கும், அதனை ஆதரவற்றவர்களோடு கொண்டாடியமைக்கு உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்!
இந்த நல்ல தருணத்தில் தங்கள் அன்னைக்கு எனது வணக்கங்கள்!
உங்கள் தாயாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு நண்பரே,
ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்கும் தங்கள் செயல் வரவேற்கத்தக்கது. இதுபோல் அனைவரும் இத்தகைய சேவையில் ஈடுபட வேண்டும். மனித வாழ்வை மேம்படச்செய்ய வேண்டும்.
அன்புடன்
ஆகிரா
Post a Comment