Saturday, November 11, 2006
அமரர் வல்லிக்கண்ணன் இறுதிக் காட்சிகள்
இலக்கிய ஞானி, சிற்றிதழ்களின் செவிலித் தாய் எனப் பலவாறாகப் புகழப்பெற்றவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன், 2006 நவ.9 அன்று இரவு 9.25 மணிக்குச் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வல்லிக்கண்ணன், அக்.29 அன்று சென்னை கல்யாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் நான்கு நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், பிறகு உடல்தேறி சாதாரண சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆயினும் இந்தக் காய்ச்சலுக்காக அதிக வீரியம் உள்ள மருந்துகளை உட்கொண்டதை அவர் உடல் தாங்காததால் நவ.10 அன்று மறைந்துவிட்டார்.
இறப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை நல்ல நினைவில் இருந்த அவர், கடைசி நாளில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய உடல், நவ.10 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மயானக் கூடத்தில் தகனம் செய்யப்பட்டது.
நவ.10 அன்று காலை நான், சென்னை ராயப்பேட்டை வள்ளலார் குடியிருப்பில் உள்ள அவர் இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். நான் சென்ற நேரத்தில் வண்ண நிலவன், இளையபாரதி, தோழர் நல்லகண்ணு, தோழர் மகேந்திரன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் நல்ல படைப்புகளைப் பாராட்டுவதிலும் புதிய சிற்றிதழ்களை வளர்ப்பதிலும் அவர் கடைசிக் காலம் வரை ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். யாரையும் காயப்படுத்தாத மென்மையான குரலில் நல்ல கருத்துகளையே எப்போதும் பேசினார். சுமாரான படைப்புகளையும் தன் நல்ல சொற்களால் நல்ல படைப்பினை நோக்கி ஆற்றுப்படுத்தியவர் அவர்.
1996இல் என் முதல் நூலான பூபாளம் கவிதைத் தொகுப்பிற்கு அவரிடம் ஆய்வுரை தருமாறு கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டு முத்து முத்தான கையெழுத்தில் எழுதி அளித்தார். அதன் பிறகும் பல முறைகள் எனக்குக் கடிதம் எழுதி ஊக்குவித்தார். அமுதசுரபிக்கு ஆசிரிராகப் பொறுப்பேற்றுத் தயாரித்த முதல் இதழை அவருக்கு அனுப்பினேன். உடனே பாராட்டு மடல் எழுதினார். அவருடன் பேசிய தருணங்களில் அவருக்கும் எனக்கும் 56 ஆண்டுகள் இடைவெளி உள்ளது என்பதை நான் உணர்ந்ததில்லை. அன்பும் தோழமையும் கனிவும் மிக்க ஓர் இனிய நண்பரை இழந்தது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், ஏராளமான கட்டுரைகளும் சிறுகதைகளும் புதினங்களும் கவிதைகளும் எழுதியவர். எல்லோருக்கும் இனியவரான வல்லிக்கண்ணனின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாசகர்கள், தங்கள் இரங்கல் செய்திகளை tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். அதனைச் சிஃபி தளத்தில் வெளியிடுவோம். நேரடியாக வல்லிக்கண்ணன் குடும்பத்தினருக்கே தெரியப்படுத்த விரும்புவோர், gganesan@intecc.com, ganesanpillai@yahoo.com ஆகிய முகவரிகளுக்குத் தெரிவிக்கலாம். இந்தக் கணேசன், வல்லிக்கண்ணனின் அண்ணன் கோமதிநாயகத்தின் மகனாவார். கீழே உள்ளது, அமரர் கோமதிநாயகத்தின் புகைப்படம்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள இந்த இல்லத்தில் வல்லிக்கண்ணன் தன் வாழ்நாளின் கடைசி 20 ஆண்டுகளைக் கழித்தார். அங்குள்ள அவரது அறையிலிருந்து ஏராளமான பக்கங்களை எழுதியுள்ளார். அவருடைய நினைவுகளைத் தக்க வைப்பதற்காக அவர் தொடர்பாக அங்கு இருந்த சிலவற்றைப் படம் பிடித்தேன்.
வல்லிக்கண்ணனின் சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன் என்ற நூலின் முகப்பு அட்டை.
வல்லிக்கண்ணனின் சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன் என்ற நூலின் பின் அட்டை.
வல்லிக்கண்ணன் பெற்ற விருதுகள் சில.
வல்லிக்கண்ணன் பெற்ற அக்ஷர விருது
வல்லிக்கண்ணனின் ஓவியம் ஒன்று.
வல்லிக்கண்ணன் மறைவுச் செய்தியை வானொலிக்குத் தெரிவிக்கும் கடிதம்.
வல்லிக்கண்ணன் பயன்படுத்திய மேசை
வல்லிக்கண்ணன் பயன்படுத்திய மேசை
வல்லிக்கண்ணன் பயன்படுத்திய நாற்காலி
வல்லிக்கண்ணனின் புத்தக அடுக்கு
வல்லிக்கண்ணனின் புத்தக அடுக்கு
வல்லிக்கண்ணனின் புத்தக அடுக்கு
வல்லிக்கண்ணனைக் கடைசி வரை நன்கு கவனித்துக்கொண்ட அவரின் அண்ணி மகமாயி அம்மாள்.
வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணநிலவன். இவருக்கு வண்ணநிலவன் என்று பெயர் சூட்டியவர், வல்லிக்கண்ணன்.
வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளையபாரதி.
வ.க. வீடு, முதல் மாடியில் உள்ளது. வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் அமர்வதற்காகத் தரைத் தளத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகள். நான் சென்றபோது இதில் ஒருவர்கூட இல்லை. பிறகு வந்த வண்ணநிலவனும் இளையபாரதியும் என்னுடன் சேர்ந்து இங்கு சிறிது நேரம் அமர்ந்தார்கள்.
தரைத் தளத்து நாற்காலிகள்.
வல்லிக்கண்ணனுக்காகச் சுடர்விட்ட குத்துவிளக்கு.
=====================================================
தொடர்புடைய சுட்டிகள் சில:
வல்லிக்கண்ணன் மறைவு தொடர்பான தமிழ்சிஃபி செய்தி
வல்லிக்கண்ணனின் பெரும் துயரம் சிறுகதை. அமுதசுரபி தீபாவளி மலருக்காக அவரிடமிருந்து நான் கேட்டு வாங்கி வெளியிட்ட கதை இது. இதைக் கேட்பதற்கு ஒரு மாதம் முன்பு, ஒரு கூட்டத்தில் பேசிய வ.க., தன்னைப் படைப்பாளி என்பதைப் பலரும் மறந்து ஆய்வாளர் ஆக்கிவிட்டார்கள் என்று பெசினார். நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அதை நினைவுபடுத்தி, இந்த முறை, சிறுகதை அனுப்புங்கள் என்று கேட்டேன். அதற்கு அனுப்பிய கதை இது.
வல்லிக்கண்ணன் பற்றி வண்ணநிலவன் 1
வல்லிக்கண்ணன் பற்றி வண்ணநிலவன் 2
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நன்றிகள்! சிறந்த படைப்பாளிக்கு நம்மூரில் என்று உரிய மரியாதை கிடைத்துள்ளது? :(
ஆழ்ந்த அனுதாபங்கள்; வெறுங்கதிரைகள் மிக வேதனையைத் தந்தது; ஓ பாரதிக்கே!!! பாரதத்தில் இதுதானே கதி. சீ... எழுத்தாளர் எல்லாம் குறைந்தது ஒரு திரைப்படமாவது, நடித்தால் தமிழன் மதிப்பானோ!!;
யோகன் பாரிஸ்
(-:
அஞ்சல் அட்டை
அநாதை ஆனது.
வல்லிக்கண்ணன் மரணம்
- பொன். குமார்
நவ.11 அன்று எனக்கு வந்த குறுஞ்செய்தி இது.
மிகவும் வருத்தத்திற்கு உரிய விஷயம். எத்தனை படைப்பாளிகளை தனது எழுத்துகளால் ஊக்குவித்தவர் திரு.வல்லிகண்ணன். அவர் இழப்பைக்காட்டிலும் அது இலக்கிய உலகத்தால் அணுகப்பட்ட முறை வேதனையளிக்கிறது.
படைப்பாளி வியாபாரி ஆகாது இருந்தால் இது போன்றுதான் நிலை போல...
இறப்பு தரும் சோகத்தை, காலி நாற்காலிகள் அதிகப்படுத்துகின்றன.
Post a Comment