Sunday, September 16, 2007
வயிற்றுக்காகக் கயிற்று மேலே
துரித உணவகம் போல், அரை மணி நேரத்தில் ஒரு கழைக் கூத்தைக் கண்டதுண்டா? செப்.2 அன்று திருவல்லிக்கேணியில் சாலை ஓரத்தில் நான் கண்டேன்.
பாரதியார் இல்லம் இருந்த துளசிங்க பெருமாள் கோயில் தெருவின் முனையில், சந்தடி நிறைந்த இடத்தில் 3 பேர் வந்து இறங்கினார்கள். இரண்டு மூங்கில் கழிகளை நிறுத்தி, விறுவிறுவெனக் கட்டினார்கள். கயிற்றின் இறுக்கத்தையும் உறுதியையும் சோதித்தார்கள்.
இன்னொருவர், சில்லறைகளை ஈர்ப்பதற்காக ஒரு விளம்பரச் சுருள் துண்டை விரித்தார். தன் வாத்தியத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.
9 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, கம்பத்தின் மேல் ஏறினாள். ஒரு நீண்ட கழையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டாள். கயிற்றில் கால் வைத்துத் தன்வயப்படுத்திய பிறகு கழையைப் பிடித்தபடி நடந்தாள்.
முதலில் வெறுங்காலில் நடந்தாள்; பிறகு அலுமினிய தட்டு ஒன்றில் கால்களை வைத்து நடந்தாள்; ஒரு சக்கரத்தில் கால்களை வைத்து நடந்தாள்; தலையில் ஒரு கும்பத்தை வைத்து நடந்தாள்.
நடுக் கயிற்றில் ஒற்றைக் காலில் நின்றாள். பல முறைகள், நடுக் கயிற்றில் நின்றபடி இப்படியும் அப்படியுமாக வேகமாக ஊஞ்சல் ஆடினாள்.
வாத்திய இசை, அவள் நடையின் வேகத்தைச் சீராகக் கூட்டிக்கொண்டிருந்தது. தன் வித்தைகளை எல்லாம் காட்டி முடித்த பிறகு, அவள் இறங்கினாள்; ஒரு தட்டினை எடுத்துக்கொண்டாள்; சுற்றி நின்றவர்களிடம் சன்மானம் கேட்டு வந்தாள்.
அவள் கூட வந்த இருவரும் கட்டப்பட்டிருந்த கம்பத்தை விடுவித்தார்கள். இந்த மொத்த கழைக் கூத்தும் அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் நான் கண்ட இரண்டு விடயங்கள்:
1. வழக்கமாக வித்தை காட்டும் போது, சுற்றி நிற்பவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவது உண்டு. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் கூட கைதட்டவில்லை; அந்தச் சிறுமியின் கூட வந்தவர்களும் வாத்தியம் இசைத்தார்களே தவிர கைதட்டவில்லை; சுற்றி நிற்பவர்களைக் கைதட்டுமாறு கேட்டுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு ஒரு வேளை மொழி தெரியாமல் இருக்கலாம்.
2. தொடக்கம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் அந்தச் சிறுமியின் முகத்தில் சிறு புன்னகை கூட இல்லை. இறுகிய முகத்துடன், கடமையைச் செய்கிறேன்; பார்த்தால் பாருங்கள் என்பதான தோரணை இருந்தது. அந்த வயதில் அந்த உறுதியும் அழுத்தமும் கழைக் கூத்தைக் காட்டிலும் வியப்பளித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இதை கழைக்கூத்தாடி என்று சொல்வதா அல்லது திறமையைக் காட்டி பிச்சையெடுத்தல் என்பதா என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி நல்ல முறையில் இவர்களுடைய முயற்சிகளை ஊக்கப்படுத்தினால் இந்தத் திறமையாளர்களின் வாழ்க்கைத் தரமாவது உயரும்..
Post a Comment