Tuesday, July 25, 2006

காக்கையின் துணிச்சலைப் பாருங்கள்

அறியாத மனிதரைக் கண்டால், காக்கை என்றில்லை எந்தப் பறவையுமே சற்றுத் தள்ளியே இருக்கும். ஏதும் பறவை நம் அருகில் வரவேண்டும் என்றால் நாம் சிலைபோல் அமர்ந்திருக்க வேண்டும்; கொஞ்சம் கூட அசையக் கூடாது. அசைந்தாலோ போச்சு. உடனே பறந்து போய்விடும். தோளில் கிளி வந்து உட்காருவது எல்லாம் மதுரை மீனாட்சிக்குத்தான் சாத்தியம். இந்தச் சூழ்நிலையில், இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒரு துணிச்சல் மிக்க காகத்தைக் கண்டேன்.

இரு மாதங்கள் முன்பு, சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையத்தில் நீண்டதொரு சிமென்ட் இருக்கையில் அமர்ந்தபடி அடுத்த வண்டிக்காகக் காத்திருந்தேன். எதிரே தரையில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. நான் ஒரு வார இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். முக்கிய செய்தி: நான் அசைந்தபடி இருந்தேன். ஆயினும் அந்தக் காகம் மெல்ல மெல்ல முன்னேறி வந்தது; அடுத்து இருக்கை மீது அமர்ந்தது; அதன் பிறகு முதுகு சாயும் பலகையில் ஏறி உச்சியில் அமர்ந்தது. ஆஹா, இதென்ன அதிசயம்! சென்னைக் காக்கைக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்கிறதே என்று வியந்து உடனே என் செல்பேசியை எடுத்து அதிலிருந்த படக் கருவியில் அதைப் படம் பிடித்தேன்.

Photobucket - Video and Image Hosting

பாருங்கள், இப்படி ஏதாவது ஒரு பொருளை எடுத்தால் தன்னை அடிப்பதற்காகத்தான் எடுக்கிறார்கள் என்று எண்ணி, பறவை பறந்துவிடும். இந்தக் காக்கையோ, எனக்குப் புகைப்படம் எடுக்க வாய்ப்பளித்து இயல்பாக அமர்ந்திருந்தது. நான் படம் எடுப்பதை அடுத்த சிமென்ட் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியர் எட்டிப் பார்க்கிறார்கள். கவனத்தில் கொள்ளவேண்டியது: அவர்கள் கூட திரும்பிப் பார்க்கிறார்கள்; ஆனால், காக்கை என்னை லட்சியமே செய்யவில்லை!

1 comment:

tamizhppiriyan said...

துணிச்சலான காக்கா! தான்...