சுற்றிப் பார்க்கும் நோக்குடன் செப்டம்பர் 3,4 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருக்குச் சென்றேன். பெங்களூர் ரெயில் நிலையப் பெயர்ப் பலகையின் கீழ் நின்றுள்ள இந்தப் படமே நான் பெங்களூர் சென்று வந்ததற்குச் சான்று. :)
தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய்மொழியின் மீது கொண்ட காதலாலும் வேற்று மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகவும் இந்தி, ஆங்கில எழுத்துகளை அழிக்கிறார்கள் என்றில்லை. கன்னட மொழியின் மீது தீவிர அன்பு கொண்ட ஒருவர், இந்தி, ஆங்கில எழுத்துகளின் மீது தார் பூசியிருப்பதைப் பாருங்கள்.
பெங்களூரில் முதலில் கண்ணைக் கவர்ந்தது, அதன் போக்குவரத்துத் துறைதான். சென்னையை விடப் பெங்களூர், அதில் சிறப்பாக உள்ளது. பேருந்து நிறுத்தங்கள் பலவும் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. பெரிய, கவர்ச்சிகரமான நிழற்குடை, அதில் ஒளியில் மின்னும் வண்ணம் விளம்பரங்கள், அந்த விளம்பரங்களின் மூலம் வருவாய், பயணிகள் உட்காரச் சிறப்பான இருக்கைகள், பேருந்து வழித் தடங்களைக் காட்டும் வரைபடம், நவீன குப்பைத் தொட்டி.... என நிறுத்தங்கள், நின்று பார்க்கும் விதத்தில் இருந்தன.
நிறுத்தத்தின் தரைப் பகுதியில், நல்ல கற்களைப் பதித்திருந்தார்கள். பயணிகள் பிடித்துக்கொண்டு நிற்கக் கைப்பிடிகளும் இருந்தன. நிழற்குடையின் முகப்பில் அந்த நிறுத்தத்தின் பெயரைப் பெரிய எழுத்தில் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருந்தார்கள். அது, பல வகைகளில் உதவியாக இருந்தது.
பேருந்து வழித் தடங்களைக் காட்டும் வரைபடம்...
பேருந்து வழித் தடங்களைக் காட்டும் வரைபடம்... அண்மைக் காட்சி
அடுத்து முக்கியமானது, பேருந்துகளில் நடத்துநராகப் பெண்களை நியமித்துள்ளது. சென்னையில் பெண் ஒருவர், பேருந்து ஓட்டுநராக இருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே ஒருவர்தான் இருக்கிறார். ஆனால், பெங்களூரில் பல பேருந்துகளில் பெண் நடத்துநர்களைக் கண்டேன். அது அங்கு சர்வ சாதாரணம் என அங்குள்ளவர்கள் கூறினார்கள். பல்லாண்டுகளாக அவர்கள் பணியில் இருப்பதாகத் தெரிந்தது. படத்தில் இருக்கும் இந்தப் பெண், 4 ஆண்டுகளாகப் பணியில் இருக்கிறாராம். அவர்கள், காக்கிச் சீருடையில் இருந்தார்கள் (கொசுறு: படத்தில் இருக்கும் பெண், காலில் ஷூ அணிந்து, அதற்கு மேல் கொலுசு அணிந்திருந்தார்).
அடுத்த முக்கிய சீர்திருத்தம், மாநகரப் பேருந்துகள் அனைத்திற்கும் கதவுகள் பொருத்தியிருப்பது. முதலில் சொல்லிச் சொல்லிப் பார்த்தும் படிக்கட்டுப் பயணத்தைப் பலரும் விடுவதாக இல்லை; எனவே இந்தக் கதவுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் கட்டுப்பாடு, பேருந்து ஓட்டுநரிடம் உள்ளது. பயணிகள் அதிகமாக ஏறினால் உடனே அவர், கதவை மூடி விடுகிறார். இதன் மூலம் படிக்கட்டிலிருந்து விழுந்து மரணம் என்ற செய்திகள் அங்கு இல்லை. ஓடும் பேருந்தில் ஏறுவதோ, இறங்குவதோகூட முடியாது.
இப்படிக் கதவுகள் பொருத்தியதால், பேருந்தினுள் காற்றோட்டம் வேண்டும் என்பதற்காகப் பேருந்தின் கூரைப் பகுதியில் சிறு திறப்பு வைத்துள்ளார்கள். புதிய பேருந்துகள் அனைத்திலும் இந்தக் கூரைத் திறப்பைக் காண முடிகிறது.
தானி(ஆட்டோ) ஓட்டுநர்கள், பெரும்பாலும் சரியான கட்டணத்தையே வாங்குகிறார்கள். மேலே போட்டுக் கொடுங்க என்று கேட்பதில்லை.
பெங்களூரின் நல்ல அம்சங்களைச் சென்னை பின்பற்றலாம்.
சென்னையோடு ஒப்பிடும் போது, பெங்களூரின் பல சாலைகள், சற்றே சிறியனவாகவே உள்ளன. இதனால்தான் பெங்களூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளை விரிவுபடுத்தக் கூடும் என்ற தொலைநோக்கு இல்லாமல் சாலையை ஒட்டி, பெரிய கட்டடங்களை எழுப்பியுள்ளார்கள். இப்போது இவற்றை அகற்றினால்தான் சாலைகளை விரிவுபடுத்த முடியும் என்ற நிலை. இதற்கிடையே, நான் பார்த்த பல சாலையோரங்களில் இரண்டு அடுக்கு வரை கொண்ட சிறிய கட்டடங்களை இடித்துக்கொண்டிருந்தார்கள், இன்னும் பிரமாண்ட கட்டடம் எழுப்புவதற்காக.
நான் காலை 7 மணிக்கு ஒரு பேருந்தில் ஏறினேன். பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் நான் இறங்க வேண்டிய இடத்தைச் சொல்லி, போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டேன். இந்த நேரத்தில் போனால், அரை மணி நேரத்தில் போய்விடலாம்; பகலில் போவதென்றால் ஒன்றரை மணி நேரமாகும் என்றார், வெகு இயல்பாக.
Monday, September 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment