Thursday, July 22, 2010

கோவைச் சந்திப்புகள் - 2

கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன். அப்போது, பேராசிரியர்கள் சிலருடன் எடுத்த படங்கள் இங்கே:

Photobucket

பேரா. சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் நான்.

இவர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். இவரின் 'ஒரு கிராமத்து நதி' என்ற நூல், சாகித்திய அக்காதெமி பரிசுபெற்றது. இவரைப் பற்றிய முழு விவரங்களுக்கு, நண்பர் மு.இளங்கோவனின் கட்டுரையைப் படியுங்கள். அமுதசுரபி காலத்திலிருந்தே சிற்பியுடன் தொடர்பு உள்ளது. அண்மையில் என் உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு கவிதை நூலினை இவரிடம் அளித்தேன். சென்னையில் குலோத்துங்கள் கவிதைகள் தொடர்பான ஆய்வரங்கில் நிறைவுரை ஆற்றிய சிற்பியை மீண்டும் சந்தித்தேன். என் நூலினைப் பெரிதும் பாராட்டினார்.

Photobucket

பேரா.சிற்பி, பேரா.விருதாச்சலம் சுப்ரமணியம் உடன் நான்.

பேரா.விருதாச்சலம் சுப்ரமணியம் அவர்களிடம் சிற்பி என்னை அறிமுகப்படுத்தினார். இவர், An analysis of some historical factors that have influenced Chemmozhi Thamizh over the past several centuries என்ற தலைப்பில் கட்டுரை படைத்துள்ளார். அதன் அச்சுப் படியினை என்னிடமும் அளித்தார். அந்தக் கட்டுரை, வரைபடங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் படங்களுடன் செம்மையாய் அமைந்திருந்தது.

Photobucket

சிங்கைப் பேராசிரியர் சுப.தி்ண்ணப்பன், நா.கணேசன் ஆகியோருடன் நான்.

சிங்கப்பூர் தமிழ்ப்பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிங்கையில் தமிழ்க் கல்விக்குச் சீரிய முறையில் பங்களித்தவர். அந்த நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். 2010 ஜூன் 15 ஆம் தேதி, காந்தளகம் வெளியிட்ட பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்ற நூலின் வெளியீட்டு விழாவுக்காகச் சென்னை வந்திருந்தார். அப்போது தொலைவிலிருந்து பார்த்தேன். செம்மொழி மாநாட்டில் நெருங்கிச் சந்திக்க முடிந்தது.

Photobucket

ஆல்பர்ட் பெர்னாண்டோ, பேராசிரியர் சே.இராமானுஜம் உள்ளிட்டோருடன் நான்.

தமிழ் நவீன நாடக உலகிற்குத் தலைசிறந்த பங்களிப்புகளை வழங்கிய  பேராசிரியர் சே. இராமானுஜம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். 2008ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத நாடக அகாடமி விருது’ பெற்றவர். திருக்குறுங்குடி கோயிலில் நிகழ்த்தப்பெறும் கைசிகி நாட்டிய நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். இவரை வெங்கட் சாமிநாதன் எனக்கு அறிமுகம் செய்வித்தார். சங்கீத நாடக அகாதெமி விருது அறிவிக்கப்பெற்ற அன்று இவருடன் வெ.சா.வும் நானும் சென்னை, திருவல்லிக்கேணியில் ஓர் இரவு முழுதும் தங்கி உரையாடினோம்.

Photobucket

பேராசிரியர் செ.இரா.செல்வகுமார் உடன் நான்.

கனடா, வாட்டர்லூ பல்கலையைச் சேர்ந்த மின்னியல், கணினிப் பொறியியல் துறைப் பேராசிரியரான செ.இரா.செல்வகுமார், தூய தமிழுள்ளம் வாய்த்தவர். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உழைத்து வருகிறார். தம் ஆய்வேட்டில் இவர் உருவாக்கிய நுண்பகுப்பியச் சமன்பாட்டில் (Differential Equation) 'ப' என்ற தமிழ் எழுத்தினை இடம்பெறச் செய்துள்ளார். இந்த நுண்பகுப்பியச் சமன்பாட்டைப் பேராசிரியர் வான் விலியெட் (Van Vliet) என்பார், 'செல்வக்குமார் நுண்பகுப்பியச் சமன்பாடு' என்றே அவருடைய கட்டுரையில் எழுதியுள்ளார்.

இலத்தீன், கிரேக்க, எபிரேயம் போன்ற மொழிகளின் எழுத்துகளைச் சமன்பாடுகளில் பயன்படுத்தும்போது ஏன் தமிழ் எழுத்தினைப் பயன்படுத்தக் கூடாது என்ற உந்துதலில் இந்தச் சமன்பாட்டில் தமிழ் எழுத்தினைப் பயன்படுத்தியுள்ளார். இது, மிக அரிய, முதன்மையான வழிகாட்டல் ஆகும். கனிவும் பணிவும் மிகுந்த இவர், மரபுக் கவிதைகளும் இயற்றியுள்ளார்.

Photobucket

சிங்கைப் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் உடன் நான்.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இணைப் பேராசிரியர் பேரா.ஆ.இரா.சிவகுமாரன், தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்தித் தமிழ் கற்பிப்பதில் முன்முயற்சிகளை  மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மரபுக் கவிதைகள் குறித்து ஆய்ந்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2010 பிப்ரவரி மாதம் நடந்த பன்னாட்டுத் தமிழ்க் கணினிக் கருத்தரங்கில் இவரை முதலில் சந்தித்தேன். என் முனைவர் பட்ட ஆய்வுக்கும் உதவினார்.

Photobucket

முனைவர் வாசு அரங்கநாதன் உடன் நான்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாப் ப‌ல்க‌லைக்க‌ழ‌கத்தில் பணியாற்றி வரும் வாசு அரங்கநாதன் குறித்து, ஆல்பர்ட் பெர்னாண்டோ, நான் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ் சி்ஃபியில் எழுதினார். வாசு அரங்கநாதன், அண்ணாமலைப் பல்கலையில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றவர். தமிழ்ப் பல்கலையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில் தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து வருகிறார். கோவையில் நடந்த தமிழ் இணைய 9ஆவது மாநாட்டின் நிகழ்ச்சிக் குழுத் தலைவராகப் பங்கு வகித்தார்.

Photobucket

Photobucket

ஆ.இரா.சிவகுமாரன், வா.மு.சே.கவியரசன், வா.மு.சே.ஆண்டவர் உள்ளிட்டோருடன் நான்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் மைந்தரான வா.மு.சே.ஆண்டவர், கவிஞர். செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர். ஜப்பானிய மொழியும் கற்றவர். பல நூல்களின் ஆசிரியர். அயல்நாட்டவருக்கும் கல்வி கற்பித்து வருகிறார். இவருடன் 1990களின் பிற்பகுதி முதலே எனக்கு நட்பு உண்டு. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், என் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர். இவரின் உதவியும் ஒத்துழைப்பும் என் ஆய்வேட்டினை நிறைவுசெய்யப் பெரிதும் உதவின.

வா.மு.சே.கவியரசன் உடன் மின்னஞ்சல் வழி மட்டுமே தொடர்பு இருந்தது. இவரை இந்த நிகழ்வில்தான் நேரில் சந்தித்தேன். உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்த இவர், ஜெர்மனியில் 2009ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, 2010 மாநாட்டின் பன்னாட்டுக் குழுத் தலைவராகப் பங்கு வகித்தார். தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தமிழை எளிதில் கற்றிட, படத்துடன் சொல் விளக்கும் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

Photobucket
பேரா.சரளா இராசகோபாலன், மலையமான் என்கிற இராசகோபாலன் உள்ளிட்டோருடன் நான்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் இணைய இதழ்கள் என்ற தலைப்பில் நான் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) ஆய்வினை மேற்கொண்ட போது, எனக்கு ஆய்வு நெறியாளராக விளங்கியவர், பேரா.சரளா இராசகோபாலன். மிக எளிமையாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர். இவர் கணவரும் அதே எளிமையைத் தம் அணிகலனாகப் பூ்ண்டவர். இவர்கள் இருவரும் தனித் தனியாகப் பல்வேறு நூல்களைப் படைத்துள்ளனர்.

Photobucket

கவிக்கோ ஞானச்செல்வன், அவர் மனைவி ஆகியோருடன் நானும் என் அம்மா சௌந்திரவல்லியும்.

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது எனக்கு 11, 12ஆம் வகுப்புகளில் கவிக்கோ ஞானச்செல்வன், வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் திகழ்ந்தார். மக்கள் தொலைக்காட்சியில் நல்ல தமிழ் குறித்து விளக்கி வருகிறார்.

இவர் குறித்த என் முந்தைய பதிவுகள்:
Photobucket

முனைவர் மு.இளங்கோவன் உடன் நான்.

 தமிழ் இணையத்தைப் பரப்புவதில் முனைப்புடன் செயலாற்றி வரும் இவர், பல்வேறு திறன்களின் கூட்டாகத் திகழ்கிறார். செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றவர். மரபுக் கவிதைகள் இயற்றுவதில் தனித் திறன் பெற்றவர். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவர்.  அயலகத் தமிழறிஞர்கள் உள்பட தமிழுக்கு உழைத்த பலரின் வரலாற்றினை இணையத்தில் பதிந்தவர். அந்த வகையில் வலைப்பதிவு நுட்பத்தினைச் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகிறார். சிறந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். செந்தமிழில் இயல்பாக எழுதியும் பேசியும் வரும் இவர், தமிழுக்குக் கிடைத்த அரிய சொத்து.

Photobucket


முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சண்முகம், பேராசிரியர் முனைவர் துரையரசன், அவர் குடும்பத்தினர் ஆகியோருடன் நானும் என் தாயாரும்.

முனைவர் துரையரசன், கும்பகோணம்  அரசினர் கலைக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இணையமும் இனிய தமிழும் என்ற தலைப்பில் பயனுள்ள  நூலினை இயற்றியுள்ளார். இதில், தமிழ் இணையத்தின் முக்கியமான வலை வாயில்களை விளக்கமாகவும் தெளிவாகவும் பதிந்துள்ளார்.

கோவை மாநாட்டில் கட்டுரை வழங்கிய துரையரசன், தம் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வந்திருந்தார். இந்தப் படத்தில் உள்ள நாங்கள் அனைவரும் ஒரே அடுக்ககத்தில் தங்கினோம். அதனால், சில நாட்கள் ஒன்றாகப் புறப்பட்டு, ஒன்றாகத் திரும்பினோம். என் தாயார், துரையரசன் குடு்ம்பத்தினருடன் ஒன்றினார். எனவே நான் அவரைப் பற்றிய கவலையின்றி, நண்பர்கள் பலரையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன். இந்த வகையில் துரையரசன் குடும்பத்தினருக்கு என் நன்றிகள்.

 முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சண்முகம், சென்னைப் பல்கலையில் பேரா.தெய்வசுந்தரம் அவர்களின் மாணவர். தமிழில் அரும்பு விட்டுள்ள புதிய துறையான கணினி மொழியியல் சார்ந்து, தம் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார். தமிழ் இணைய மாநாட்டிலும் இதே பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.


மேலும் பேராசிரியர்கள் பலரைச் சந்தித்தபோதும், அவர்களுடன் படம் எடுக்க இயலவில்லை. நேரம் கனிந்தால், அவர்களைக் குறித்துப் பின்னர் எழுதுவேன்.

1 comment:

வேந்தன் அரசு said...

அருமை. நல்ல அநுபவமாக இருந்திருக்கணும்