
கடந்த பிப்ரவரி மாதத்தின் ஒரு நாள், நண்பர் கவிஞர் பிரியம் தொலைபேசியில் அழைத்தார். நாம் என்ற சமூக சேவை அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும் அதன் சார்பில் சுநாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கவிருப்பதாகவும் கூறினார். என்னுடைய ஒத்துழைப்பை நாடிய அவர், சேகரித்த உதவிப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவேண்டும்; உதவிப் பொருட்கள் சிலவற்றை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உறுதியாக வருகிறேன் என்று தெரிவித்தேன். அதன்படியே சென்றேன்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரையோரம் உள்ள மூன்று பள்ளிகளில் கடல்நீர் உள்ளே புகுந்திருந்தது. அந்த நீர் எவ்வளவு உயரம் வரை தேங்கி நின்றது என்பதை அங்கிருந்த சுவர்கள் அடையாளமிட்டுக் காட்டின. அந்தப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்குவதற்காகச் சிற்றுந்து வைத்துக்கொண்டு புறப்பட்டோம். ஏற்கெனவே நாங்கள் வருவதாக அந்தப் பள்ளிகளில் சொல்லி வைத்திருந்தார். எனவே மூன்று மணிநேரத்தில் கொண்டு சென்ற பொருட்களை வழங்கினோம்.

சீருடை அணிந்த மாணவர்கள், பெருத்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அங்கிருந்த மொத்த மாணவர்களையும் பார்க்கும்போது நாங்கள் கொண்டுசென்ற பொருட்கள் குறைவாகவே இருந்தன. எனவே ஆசிரியரிடம் கொடுத்து, மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். இத்தகைய பணியில் எனக்கும் பங்களித்த பிரியத்திற்கு நன்றி.