
அருட்செல்வர் நா.மகாலிங்கம் நடத்தும் பாரதியார் சங்கம் (1949இல் நிறுவியது), ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, கவிதை, ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் 1994ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் நான் முதல் பரிசு பெற்றேன். நான் அப்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று வந்தேன்.
மாணவர்கள், போட்டி அரங்கிற்கு வந்த பிறகு, போட்டிக்கான தலைப்பினை அறிவித்தார்கள். அரை மணி நேரத்தில் கவிதை எழுத வேண்டும் என்று நேர நிர்ணயம்.
மண்ணில் தெரியுது வானம் என்று தலைப்பு. அவர்கள் சொன்ன நேரத்திற்குள் நான் எழுதிக் கொடுத்தேன். நடுவர்கள் எனக்கே முதல் பரிசு என அறிவித்தார்கள்.
இதற்கான பரிசளிப்பு விழா, 12.9.1994 அன்று ராணி சீதை அரங்கில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருள்ளும் சிறந்தவர் ஒருவருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்குவார்கள். அவருக்கு, ஏவி.எம். அறக்கட்டளைப் பரிசு ரூ.1000/-, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளைப் பரிசு ரூ.700/- ஆகியன வழங்குவார்கள். அந்த ஆண்டு இந்த இரு பரிசுகளையும் எனக்கே வழங்கினார்கள்.
மேலும் இந்தப் பரிசுகளை அறிவிக்கும் அறிக்கையைப் பாரதியாரின் படத்தோடு, கண்ணாடிச் சட்டமிட்டு எனக்கு அளித்தார்கள். மேலும் நிறைய நூல்கள்.

இந்த உற்சாகத்தில் அடுத்த ஆண்டும் போட்டியில் கலந்துகொண்டேன்.
என்னைக் கவர்ந்த எழில் என்பது தலைப்பு. இப்போது ஒரு மணி நேர அவகாசம். இந்த முறை நான், வெண்பாவிலேயே அந்தாதி ஒன்று பாடிவிட்டேன். இந்த முறையும் எனக்கே முதல் பரிசு அளித்தார்கள். ஆனால், கடந்த முறை பரிசு பெற்றுவிட்டதால் இம்முறை அறக்கட்டளைப் பரிசுகள் வேறு ஒருவருக்குச் சென்றுவிட்டன. பாரதியாரின் புகைப்படமும் சான்றிதழும் சில நூல்களும் மட்டுமே அளித்தார்கள்.
ஆயினும் இந்த 3 பாரதியார் படங்களும் இன்னும் எனக்கு என்னை நினைவுறுத்தியபடியே உள்ளன.
இந்தப் படங்களை எடுத்தவன் நான். ஆண்டு 2001.
பரிசு பெற்ற பிறகு, வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து, நா.மகாலிங்கம், வழக்கறிஞர் காந்தி, நல்லி குப்புசாமி உள்ளிட்டோருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இந்தப் படத்தில் பாரதியாரின் தலைப்பாகைக்கு அருகில் நான் நிற்கிறேன்.