காந்தியின் நேர்முக உதவியாளராக நான்கரை ஆண்டுகள் இருந்த கல்யாணம், சென்னையில் வசித்து வருகிறார். இப்போது அவருக்கு வயது 86. ஆகஸ்டு 15, 1922 அன்று அவருடைய பிறந்த நாள். அவரைக் கடந்த வாரங்களில் இரு முறைகள் சந்தித்தேன்.
1944ஆம் ஆண்டு காந்தியிடம் உதவியாளராகச் சேர்ந்த கல்யாணம், 1948இல் காந்தி இறக்கும் வரை அவர் கூடவே இருந்தார். காந்திக்கு வரும் கடிதங்களுக்குக் காந்தியின் பதில்களைப் பெற்று, தட்டச்சு செய்து அனுப்புவதே கல்யாணத்தின் முதன்மை வேலையாக இருந்தது. காந்தியைக் கோட்சே சுடும்போது கல்யாணம் அருகில் இருந்திருக்கிறார்.
முதல் உரையாடலிலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கல்யாணம், பல கேள்விகளுக்குப் பதில் அளித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமான பேச்சு; தொடர்ச்சியான நினைவுகள்; சமூகம் குறித்த கவலை; அரசியல்வாதிகள் மீதான விமர்சனம்... எனப் பலவற்றையும் பகிர்ந்துகொண்டார். அவருடன் பேசும்போது அந்தக் கால நினைவுகள், ஒரு படம் போல்
நகர்கின்றன.
காந்தியின் மறைவுக்குப் பிறகு கல்யாணம், ஜெயபிரகாஷ் நாராயணன், ராஜாஜி ஆகியோரிடமும் உதவியாளராக இருந்துள்ளார்.
காந்தி தனக்கு எழுதிய கடிதங்கள், தட்டச்சுப் பிரதிகளில் காந்தியின் திருத்தங்கள், புகைப்படங்கள், காந்தியின் ஹரிஜன் ஆங்கிலப் பத்திரிகையின் அசல் பிரதிகள், ஜவகர்லால் நேருவின் கையொப்பம், 1930 - 40களில் எழுதிய டைரிக் குறிப்புகள், அந்தக் காலத்தில் இருந்த விலைவாசி, 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஆன செலவு....... எனப் பலவற்றையும் எடுத்துக் காட்டினார். இவற்றை அவர், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல அமைப்புகளிலும் கண்காட்சியாக வைத்து வருகிறார். வேண்டுவோர் அழைத்தால் வந்து கண்காட்சி நடத்துவதாகவும் கூறினார்.
கல்யாணத்தின் பேரன், பிரபலமானவர்களின் காசோலைகளைச் சேமித்து வருகிறான். அப்துல் கலாம், சுர்ஜித் சிங் பர்னாலா உள்ளிட்ட பலரும் அவனுக்காகத் தங்கள் காசோலைகளை அளித்துள்ளார்கள். அவற்றையும் காட்டினார். குடியரசுத் தலைவராக இருந்தபோது அப்துல்கலாம்,
கல்யாணத்தின் வீட்டிற்கு வந்து 3 மணிநேரங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, அப்போது எடுத்த படங்களையும் காட்டினார்.
முதல் சந்திப்பின் போது, பேட்டி எடுக்கும் உத்தேசத்துடன் செல்லாததால் பதிவுக் கருவி, புகைப்படக் கருவி எதுவும் எடுத்துச் செல்லவில்லை. எனவே அடுத்த சந்திப்பில் பத்திரிகையாளர் சுகதேவை அழைத்துச் சென்றேன். அவருடைய பதிவுக் கருவியில் கல்யாணத்தின் பேட்டியைப் பதிவு செய்தோம். என் புகைப்படக் கருவியில் சில படங்களை எடுத்தோம்.
கல்யாணத்துடன் சுகதேவ் நிகழ்த்திய உரையாடலைத் தமிழ்சிஃபியில் பதிப்பித்துள்ளோம். அதை இங்கே கேட்டு மகிழுங்கள்:
கல்யாணம் அவர்களுடன் ஒரு சந்திப்பு
மிகவும் துடிப்புடன், செயல் வேகத்துடன், புலன்களின் விழிப்புடன் கல்யாணம் வியப்பூட்டுகிறார். அவருடைய அனைத்து வேலைகளையும் அவரே செய்வதோடு, தூய்மையின் மீது மிகுந்த பற்றுடன் விளங்குகிறார். தினமும் தோட்ட வேலை செய்கிறார். தானே சமைத்து உண்ணுகிறார். தன் உடைகளைத் தானே துவைத்துக்கொள்கிறார். ஆங்கிலேயரிடமிருந்து தாம் கற்ற தூய்மை, பண்பாடு, உடலுழைப்பு ஆகியவற்றை இன்னமும் பின்பற்றுகிறார். காந்தியிடமிருந்து கற்ற எளிமை, நேர்மை, சுறுசுறுப்பு ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்.
கல்யாணத்துடன் நான்
ஆகஸ்டு 15 அன்று பிறந்த நாள் காணும் கல்யாணம் அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவரின் தொண்டு தொடரட்டும்.
Wednesday, August 15, 2007
காந்தியின் உதவியாளர் கல்யாணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment