ஏப்ரல் 25 அன்று கொல்கத்தாவின் எல்லையில் உள்ள ஹெளராவை அடைந்தோம். தானியில் (ஆட்டோ) போகும் போதே சொன்னார்கள், பாலத்திற்கு அந்தப் பக்கம் இருப்பது கொல்கத்தா; இந்தப் பக்கம் இருப்பது ஹெளரா என்று. இவை இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அருகிலிருந்த வசதிக் குறைவான ஒரு விடுதியில் தங்கினோம். எங்களுக்கு என்று வாய்த்த அறையில் தனிக் கழிவறைகூட இல்லை. பொதுக் கழிவறையிலிருந்து எப்போதும் சிகரெட் நெடி அடித்தது. அதனால் கதவை எப்போதும் மூடியே வைத்தோம். அதனால் காற்றோட்டம் இல்லை. மெத்தை, கட்டில் உள்பட பல வசதிகளும் சரியில்லை. ஜன்னலையும் திறக்க முடியவில்லை. அதை ஒட்டினாற்போல் நிறைய குப்பைகள்! ஒரிசாவின் பூரியில் நாங்கள் இருந்த அறை, எவ்வளவோ தேவலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது, ஹெளரா அறை.
பயண ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டுக் கேட்டால், 'வேறு விடுதி கிடைக்கவில்லை; கொஞ்சம் சமாளியுங்கள்; ஹெளராவில் மக்கள் நெரிசல் அதிகம். அறை கிடைப்பதே கடினம்' என்றார். 'இல்லை, வேறு அறை கொடுங்கள்' என்று கேட்டோம். 'பார்க்கிறேன்' என்றவரைப் பிறகு பார்க்க முடியவில்லை.
முதலில் ஹெளரா பாலத்தைப் பார்த்தோம். மிகப் பிரமாண்டமாக, ஒரு பொறியியல் அற்புதமாக அந்தப் பாலம் தொங்கிக்கொண்டிருந்தது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதன் மீது சென்றுகொண்டிருந்தன. கீழே வேகமான நீரோட்டம்; மேலே விரையும் வாகனங்கள். அவ்வளவு கனத்தையும் தாங்கிக்கொண்டு, இரு கரைகளிலும் நிற்கும் தூண்கள், பாலத்தைத் தூக்கிப் பிடித்திருந்தன.
இரவீந்திர சேது என்று அந்தப் பாலத்திற்குப் பெயர் சூட்டியிருந்தார்கள். வங்காளத் தேசியக் கவியின் பெயரில் பாலம் கம்பீரமாக நின்றிருந்தது. அந்தப் பாலத்தின் மீது நடந்தேன்.
அதன் மீது புகைப்படங்கள் எடுக்கத் தடை என்று கூறியிருந்தார்கள். எனவே அதை ஒட்டிய தெருவில் நின்று சில படங்கள் எடுத்தோம்.
என் அம்மா
என் அப்பா
நான்
இந்தப் பாலத்தைப் பற்றி மேலும் அறியப் பாருங்கள்: http://www.howrahbridgekolkata.nic.in
மேலே கண்டது, பழைய ஹெளரா பாலம்; புதிய பாலம் கீழே உள்ளது.
பிறகு, ஹூக்ளி ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டோம். அது, அடுத்த பதிவில்.
Saturday, August 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment