Sunday, August 27, 2006

சந்தை நாயகர் பிள்ளையார்

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, ஆகஸ்டு 27 அன்று சந்தையின் நாயகராகப் பிள்ளையாரே இருந்தார். சென்னை அம்பத்தூரை ஒட்டியுள்ள ஒரகடத்தில் பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டும் திடீர் சந்தை உருவாகும். அது போலவே இந்தப் பிள்ளையார் சதுர்த்தி அன்றும் அந்த நாற்சந்தி களை கட்டியிருந்தது.

களிமண்ணில் பிடித்த பிள்ளையார்கள் வரிசையாக அணிவகுத்திருந்தார்கள். 15 ரூபாய், 20 ரூபாய் என்ற விலைகளில் விற்றுக்கொண்டிருந்தார்கள். மக்கள், தாம்பாளம், பிளாஸ்டிக் கூடை, ஒயர் கூடை, பை ஆகியவற்றிலும் வாங்கிச் சென்றார்கள். சிலர், கையிலேயே எடுத்துச் சென்றார்கள். சிறுவர்கள், பிள்ளையாரை மகிழ்ச்சியுடன் ஏந்திச் செல்வதைக் கண்டேன்.



வெயிலில் வீற்றிருந்ததால் பிள்ளையார் சிலையில் ஆங்காங்கே விரிசல்கள் விழத் தொடங்கியிருந்தன; விற்பனையாளர்கள், தண்ணீரால் துடைத்து அவர் சூட்டைத் தணித்துக்கொண்டிருந்தார்கள். சில சிலைகளில் கண்ணில் வைத்த மணிகள் விழுந்தன. வாங்கிச் செல்பவர்கள், அதைக் கவனித்து, மணியைக் கேட்டு வாங்கி, பிள்ளையார் கண்ணில் ஒட்டிச் சென்றார்கள். குடையைப் பிள்ளையாருக்குப் பின்னால் நிறுத்தி வைப்பதற்காக ஒரு கைப்பிடி களிமண்ணை மக்கள் கேட்டு வாங்கிச் சென்றார்கள்.




சிலைக்கு அருகிலேயே பிள்ளையார் குடைகள் விற்பனையும் நடந்தது. அருகில் இருந்த ஒரு கொடிக் கம்பத்தில் நீண்ட வாழைத் தண்டினைக் கட்டி, அதில் குடைகளைச் செருகி வைத்திருந்தார்கள். அது, நல்ல உத்தியாக இருந்தது. ஒரு குடையின் விலை, ரூ.6/- அதை விற்ற பெண்மணியிடம் கேட்டேன். அவர்கள் வீட்டிலேயே குடையைத் தயாரித்து வந்து விற்கிறார்களாம். இந்த நாளுக்காக 200 குடைகள் தயாரித்ததாகச் சொன்னார்.




அடுத்து, ஒரு பெரிய மூங்கில் தட்டினை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். தட்டில் கொஞ்சம் எருக்கம் பூக்கள் இருந்தன. அவன் அவற்றை ஒரு நூலில் கோத்துக்கொண்டிருந்தான். ஒரு எருக்கம்பூ மாலையின் விலை, ரூ.1/-




அதற்கு அடுத்து, பூக்கடைகள் இருந்தன. அருகம்புல்லையும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.





காந்தி நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் அன்னை மேரிக்கு ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. அதற்கு மிக அருகில் பிள்ளையார் குடைகளைச் சிறுமி ஒருத்தி விற்றுக்கொண்டிருந்தாள். தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.

2 comments:

துபாய் ராஜா said...

சென்னையில் இருந்தபோது இதுபோன்ற
விழாக்களின்போது தோன்றும் திடீர்
சந்தைகளை நிறைய ரசித்துள்ளேன்.

பதிவிற்கும்,படங்களுக்கும் வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா said...

வினாயகர் சதுர்த்திக்கான ஆரம்ப முகாந்திரங்களை மிகவும் நல்லமுறையில் அருமையான புகைப்படங்களுடன் வெளியிட்டிருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.