Wednesday, August 30, 2006

கண்ட இடத்தில் துண்டறிக்கை

மின்தொடர் வண்டியில்தான் வழக்கமாக வீடு திரும்புவேன். இன்று சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல் ரெயில் நிலையம்) அரக்கோணம் செல்லும் வண்டியில் ஏறினேன். என்றும் போல் கூட்டம் நெருக்கியது. ஆயினும் ரெயில் பெட்டியின் மையத்தில் ஒரு சிறிய இடத்தில் அமர்ந்தேன். மேலும் கூட்டம் அதிகமானதில் ஜன்னல்களும் தெரியவில்லை. அம்பத்தூரில் இறங்கவேண்டிய நான், நிறுத்துமிடத்தைத் தவறவிட்டேன். இரண்டு நிறுத்தங்கள் தாண்டி அண்ணனூர் வந்த பிறகே நான் தவறவிட்டதை அறிந்து இறங்கினேன். நிறுத்துமிடத்தைத் தவறவிட்டதற்குத் தண்டனையாக அண்ணனூரில் அரை மணி நேரம் காத்திருக்கும்படி ஆயிற்று.

அண்ணனூர், இன்னும் கிராமத்தின் சுவடுகளோடுதான் உள்ளது. தூரத்தில் கேட்கும் ஒன்றிரண்டு வாகன ஓசைகள் தவிர, வேறு ஒலியில்லை. ஆழ்ந்த அமைதி. அவ்வப்போது சில்வண்டுகளின் ரீங்காரம். வானில் மெல்லிய பிறை. சுற்றுப்புறம் எங்கும் இருள்.



அண்ணனூரை அறிவிக்கும் இந்தப் பலகையை ஒரு படம் பிடித்தேன். அதில், யாரோ துண்டறிக்கைகளை ஒட்டி, பின்னர் அவை அகற்றப்பட்ட அடையாளம் தெரிந்தது. அடுத்த அரை மணியில் எதிர்ப்புறம் வந்த வண்டியில் ஏறினேன். அது, சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தை நோக்கிச் சென்றது. இந்த முறை, நினைவாக இருந்து அம்பத்தூரில் இறங்கினேன்.



அம்பத்தூரை அறிவிக்கும் இந்தப் பலகையை ஒரு படம் பிடித்தேன். அதில், யாரோ துண்டறிக்கை ஒட்டி அது இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளது. பொதுவாக விளம்பரம் வேண்டுவோர், இப்படியான பொது அறிவிப்புப் பலகைகளின் மீது துண்டறிக்கைகளை ஒட்டிச் சென்று விடுகின்றனர். இதன் மூலம் மக்கள் இதை நிச்சயம் பார்ப்பார்கள் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது.

பொது நன்மைக்கு இடையூறு செய்யும் இத்தகைய போக்கினை, அத்தகைய விளம்பரதாரர்கள் உடனே கைவிட வேண்டும். இதைக் குறித்து ரெயில்வே துறையும் போக்குவரத்துத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர்ப் பெயரை அறிவிக்கும் பலகைகள் மட்டுமின்றி, தெருப் பெயர்களை அறிவிக்கும் பலகைகள், ஜன்னலோர பேருந்து வழித் தட அறிவிப்புகள், தானிகளில் (ஆட்டோ) அதன் பதிவு எண் அறிவிப்புகள்....... எனப் பல முக்கிய இடங்களின் மேல் துண்டறிக்கைகள் ஒட்டப்படுகின்றன. இதனால் மக்களுக்குப் பெரும் இன்னல் விளைகிறது. இதனை அந்த விளம்பரதாரர்கள் உணர்வார்களா?

1 comment:

இலவசக்கொத்தனார் said...

இது ஒரு மிக மோசமானதொரு கலாச்சாரமாக உருவெடுத்து வருகிறது. மிக கண்டிப்பான சட்டதிட்டங்களொடு இதனை ஒடுக்க வேண்டும்.

எந்த ஒரு அறிக்கையிலும் அதன் அச்சடித்த இடத்தின் விபரம் இருக்க வேண்டும். அதன் மூலம் இதனைச் செய்தவரைப் பொறுப்பாக்க முடியும்.