பூரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில், லிங்கராஜா கோயில் உள்பட பல கோயில்களைச் சுற்றிப் பார்த்தோம். பெரும்பாலான கோயில்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை; கோயிலுக்குள் புகைப்படக் கருவி, செல்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை. வெளியில் ஒருவரை நிறுத்தி வைத்து இவற்றை எல்லாம் கொடுத்துவிட்டுத்தான் நாங்கள் உள்ளே செல்ல வேண்டியதாய் இருந்தது. ஜெகந்தாதர் கோயிலுக்கு என்று தனிக் காவல் படை உள்ளது. அவர்கள் எல்லோரையும் சோதித்துப் பார்த்துத்தான் உள்ளே அனுப்புகிறார்கள்.
ஒரிய கட்டடக் கலையும் சிற்பக் கலையும் வெகு சிறப்பாக இருந்தது. வரி வரியாக வேலைப்பாடுகள் நிரம்பிய கோபுரங்கள், பார்க்கப் பார்க்கச் சலிக்காதவை. அந்தக் கோபுரங்களின் மீதும் மதில், பிரகாரம், மரங்கள் எனப் பல இடங்களிலும் குரங்குகள் தாவித் திரிந்தன. என் கண் எதிரில் ஒரு மூதாட்டியின் கையிலிருந்த வாழைப் பழத்தை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்று உண்டது. அந்த அம்மா, சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.
கோயிலுக்குள் ஏராளமானோர் பெருந்தொப்பையுடன் உலவினார்கள். அங்கு அன்னதானம் போடப்படுகிறது என்பது உபரி செய்தி. நம்மூரில் பொதுவாக மண்பானை என்றால் அடி பெருத்தும் கழுத்து சுருங்கியும் இருக்கும். ஆனால், அங்கு அடியிலிருந்து நுனி வரைக்கும் ஒரே அளவில் அகலமான மண் பானைகள் இருந்தன. அவற்றில் வழிய வழிய உணவு படைத்து, வரும் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
பூரி ஜெகந்நாதர் தேர்த் திருவிழா, மிகவும் புகழ் பெற்றது. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு பார்த்ததுண்டு. அந்தத் தேர் செல்லும் அகலமான சாலைகளைக் கண்டேன். ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய தேர்கள் செய்வது வழக்கமாம். அதற்கு ஏற்ப தேர் செய்வதற்கான பெரிய பெரிய தூண்கள், சாலையோரங்களில் கிடந்தன.
இவற்றில் எதையும் படம் எடுக்க முடியாத நிலையில் மாலையில் பூரி கடற்கரைக்குச் சென்றோம். அங்கு நான் எடுத்த சில படங்களை இங்கே பாருங்கள்:
அலை அடிக்கிறது

கொடி அசைகிறது

காளை நிற்கிறது

ஒட்டகத்தில் ஒரு சவாரி

குதிரை சவாரி

நாய்கள் உறங்குகின்றன

காஃபி, தேநீர் வியாபாரம் நடக்கிறது

பை விற்கிறாள் இந்தப் பைங்கிளி

சங்கு விற்கிறார் இவர்

குழந்தைகள் கட்டிய மண்கோபுரங்கள்

கடற்கரையில் நான்; என் படங்களை மட்டும் எடுத்தவர் என் அப்பா குப்புசாமி



கடற்கரையில் என் அம்மா சவுந்திரவல்லி

கடற்கரையில் என் அப்பா குப்புசாமி

எவரெவரோ விட்டுச் சென்ற பாதச் சுவடுகள்

No comments:
Post a Comment